12ஆம் வகுப்பு மட்டுமே படித்து முடி மாற்று சிகிச்சை.. சென்னையில் சிக்கிய வட மாநில போலி மருத்துவர்கள்..
திவ்யா தரப்பில் தேனாம்பேட்டையில் உள்ள ஊரக மருத்துவ சேவை இயக்குனரகத்தில், முடிமாற்று அறுவை சிகிச்சை மையம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், அண்ணா நகரில் செயல்பட்டு வந்த முடிமாற்று அறுவை சிகிச்சை மையத்தில், இணை இயக்குனர் மீனாட்சி சுந்தரி தலைமையிலான குழு அதிரடி சோதனை மேற்கொண்டது.

கோப்பு புகைப்படம்
சென்னை, பிப்ரவரி 10, 2026: சென்னை ஜவகர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா. அவர் உடற்பயிற்சி மையத்திற்கு செல்லும் போது, செலி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில், செலி, தனது கணவர் ராஜாராம் ஒரு டாக்டர் என்றும், பல மருத்துவமனைகள் நடத்தி வருவதாகவும், தலைமுடி உதிர்வதற்கான உயர்ரக மருந்துகளை பயன்படுத்தி முடிமாற்று அறுவை சிகிச்சை செய்வதாகவும் தெரிவித்ததாக திவ்யா கூறியுள்ளார். மேலும், மருத்துவமனை கிளை தொடங்கலாம் என்றும், அனுபவம் வாய்ந்த மருத்துவர்களின் மூலம் சிகிச்சை வழங்கப்படும் என்றும், வரும் லாபத்தில் 50 சதவீத பங்கு வழங்குவதாகவும் ராஜாராம் உறுதி அளித்ததாக திவ்யா தெரிவித்துள்ளார்.
12ஆம் வகுப்பு படித்தவர்கள் மருத்துவ சிகிச்சை வழங்கிய அதிர்ச்சி:
அவரது வார்த்தைகளை நம்பி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒப்பந்தம் செய்து கொண்டு, ரூ.30 லட்சம் பணமாக வழங்கியதாகவும் அவர் கூறியுள்ளார். இதனிடையே, பெரம்பூரில் தொடங்கப்பட்ட கிளையை ஆய்வு செய்த போது, தலைமுடி சிகிச்சை அளித்து வந்த டாக்டர்கள் போலியானவர்கள் என சந்தேகம் எழுந்ததாக திவ்யா குற்றம் சாட்டினார். பத்தாம் வகுப்பு அல்லது பிளஸ் டூ மட்டுமே படித்த வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மருத்துவத் தகுதி இல்லாமல் சிகிச்சை அளித்து வந்தது தெரிய வந்ததாகவும், அவர்கள் வழங்கிய சிகிச்சை முறையாக இல்லை என அறிந்து அதிர்ச்சியடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு.. நிகிதாவை நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப உத்தரவு..
கொலை மிரட்டல் விடுத்த நபர்:
இதனைத் தொடர்ந்து, நான்கு மாதங்களே செயல்பட்ட பெரம்பூர் கிளையில் முதலீடு செய்த ரூ.30 லட்சத்தை திருப்பி கேட்டபோது, ராஜாராம் கொலை மிரட்டல் விடுத்ததாக திவ்யா புகார் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, திவ்யா தரப்பில் தேனாம்பேட்டையில் உள்ள ஊரக மருத்துவ சேவை இயக்குனரகத்தில், முடிமாற்று அறுவை சிகிச்சை மையம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், அண்ணா நகரில் செயல்பட்டு வந்த முடிமாற்று அறுவை சிகிச்சை மையத்தில், இணை இயக்குனர் மீனாட்சி சுந்தரி தலைமையிலான குழு அதிரடி சோதனை மேற்கொண்டது.
அதிரடி சோதனை மேற்கொண்ட அதிகாரிகள்:
அந்த மையத்தில் பணியாற்றி வந்த மருத்துவர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட 15 பேரை அதிகாரிகள் அண்ணா நகர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். திவ்யா அளித்த மோசடி புகார் மற்றும் போலி மருத்துவர்கள் அனுமதி இன்றி சிகிச்சை அளித்தார்களா என்பதைக் குறித்து காவல்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் இணைந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், அண்ணா நகரில் செயல்பட்டு வந்த அந்த மையம் தற்காலிகமாக மூடப்பட்டது. குறிப்பாக, அங்கு பயன்படுத்தப்பட்ட கெமிக்கல்கள், சாம்பிள்கள், உபகரணங்கள் உள்ளிட்டவற்றை ஊரக மருத்துவ சேவை இயக்குனரக அதிகாரிகள் பறிமுதல் செய்து ஆய்வு செய்து வருகின்றனர்.
போலி மருத்துவர்கள் 3 பேர் கைது:
இதனிடையே, அண்ணா நகர் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் குற்றச்சாட்டுகள் உண்மை என தெரியவந்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த, பிளஸ் டூ மட்டுமே படித்த இருவர் மருத்துவத் தகுதி இல்லாமல் சிகிச்சை அளித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஜக்வீர் சிங் (33), ஹர்தீப் சிங் (24), வேலூரைச் சேர்ந்த ஜாஃபர் சாதிக் (27) ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும், விஜயலட்சுமி என்ற ஹோமியோபதி படித்த மருத்துவர் மருத்துவ ஆலோசனைகள் வழங்கி வந்ததும், பிஎஸ்சி மட்டுமே படித்த அனஸ்தீசியா பட்டதாரி ஒருவர் மருத்துவத் தகுதி இன்றி சிகிச்சை அளித்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஊரக மருத்துவ சேவை இயக்குனரக இணை இயக்குனர் மீனாட்சி சுந்தரி அளித்த புகாரின் அடிப்படையில், கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் சிறையில் அடைக்கும் நடவடிக்கையை அண்ணா நகர் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், இந்த மையத்திற்கு சீல் வைப்பது தொடர்பாகவும் ஊரக மருத்துவ சேவை இயக்குனரக அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதே நேரத்தில், இந்த மையத்தின் நிறுவனர் ராஜாராம் மற்றும் பிற நிர்வாகிகளை விசாரணைக்கு அழைக்க சென்னை போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
மிஸ்டர் ஹேர் கிளினிக்:
குறிப்பாக, ‘மிஸ்டர் ஹேர் கிளினிக்’ நிறுவனம் இந்தியா முழுவதும் 14க்கும் மேற்பட்ட கிளைகளை அமைத்து, பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முடிமாற்று அறுவை சிகிச்சைக்காக ரூ.40 ஆயிரம் முதல் ரூ.1 லட்சத்திற்கும் மேல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்தியா முழுவதும் இதுபோன்று போலி மருத்துவர்களால் முடிமாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, உடல்நல பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ள நிலையில், அண்ணா நகர் முடிமாற்று அறுவை சிகிச்சை மையம் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக போலி மருத்துவர்களால் நடத்தப்பட்டதாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, கிளை தொடங்குவதாக கூறி ரூ.30 லட்சம் முதலீடு செய்து ஏமாந்த திவ்யா, இந்த கிளினிக்கில் சிகிச்சை பெற்றவர்கள் உடனடியாக ரத்தப் பரிசோதனை மேற்கொண்டு, உடலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.