மத்திய-மாநில அரசுகளின் உறவு எப்படி இருக்க வேண்டும்… உயர்நிலைக் குழுவின் 11 முக்கிய பரிந்துரைகள்!
Centre And State Govt Relationship : மத்திய மற்றும் மாநில அரசுகளின் உறவுகள் எப்படி இருக்க வேண்டும் என்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையிலான உயர்மட்ட குழு 11 முக்கிய பரிந்துரைகளை வழங்கி உள்ளது.

மத்திய-மாநில அரசு உறவில் 11 முக்கிய பரிந்துரைகள்
மத்திய மற்றும் மாநில அரசின் உறவுகள் குறித்து அறிக்கை தயார் செய்வதற்காக உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவானது, மத்திய- மாநில அரசுகளுக்கிடையேயான உறவுகள் குறித்து அறிக்கை தயார் செய்து இருந்தது. அந்த அறிக்கையை கடந்த பிப்ரவரி 16- ஆம் தேதி ( திங்கள்கிழமை) தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினிடம் உயர்நிலை குழு சமர்ப்பித்தது. இந்த அறிக்கையை முதல்வர் மு. க. ஸ்டாலின் நேற்று புதன்கிழமை ( பிப்ரவரி 18) நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்திருந்தார். அப்போது, அவர் பேசுகையில், மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்பதை வலியுறுத்தியதுடன், மாநில அரசுகள் மீது மத்திய அரசின் அடக்கு முறையை கைவிட வேண்டும் எனவும், இதற்காக அரசியலமைப்பை மாற்றி அமைக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.
11 முக்கிய பரிந்துரைகள்
இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையிலான உயர்நிலைக் குழு தயார் செய்த அறிக்கையில் மத்திய மற்றும் மாநில அரசின் உறவுகள் குறித்து முக்கியமாக 11 விஷயங்களை பரிந்துரை செய்துள்ளது. இதில்,
மேலும் படிக்க: அம்மா உணவகங்களின் நிலை என்ன? கேள்வி எழுப்பிய வேலுமணி… திமுக அமைச்சருடன் காரசார விவாதம்
- மத்திய அரசும், மாநில அரசும் அதிகார போட்டியாளர்களாக இல்லாமல், நிர்வாகத்தில் பங்காளர்களாக செயல்பட வேண்டும். இது கூட்டாட்சி சமநிலையை பாதுகாக்க உதவும்.
- அரசியலமைப்பு சட்டத்தை பொதுமக்களின் கருத்துக்களை கேட்காமல் திருத்தம் செய்யக்கூடாது.
- இந்தியாவில் புதிதாக மாநிலங்களை உருவாக்குவதற்கான மசோதாவை அறிமுகம் செய்வதற்கு முன்பாக பாதிக்கப்படும் மாநிலங்களின் சட்டப்பேரவையில் சமர்ப்பித்து ஒப்புதல் பெற வேண்டும்.
- ஒரே நாடு- ஒரே மொழி என்பதை மத்திய அரசு கைவிட வேண்டும்.
- முன்மொழி திட்டம் தோல்வி அடைந்ததை ஒப்புக்கொண்டு இரு மொழி திட்டத்திற்கு மாற வேண்டும்.
- கடந்த 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், மாநிலங்களுக்கான தொகுதி ஒதுக்கீட்டுக்கான எண்ணிக்கை முடக்கத்தை 2126 வரை நீட்டிக்க அரசியலமைப்பு சட்டத்தை திருத்தம் செய்ய வேண்டும்.
- சுயாட்சி உடைய மாநில தேர்தல் ஆணையங்கள் மூலம் சட்டமன்றத் தேர்தல்கள் மற்றும் உள்ளாட்சி தேர்தல்களை நடத்த வேண்டும்.
- பொது பட்டியலில் உள்ள கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றம் செய்ய வேண்டும்.
- மாநில அரசுகளின் அதிகாரத்துக்கு உள்பட்ட சுகாதாரத் துறையில் மத்திய அரசு தலையிடுவது தவிர்க்கப்பட வேண்டும்.
- தன்னாட்சி பெற்ற சுதந்திரமான மற்றும் நியாயமான சரக்கு மற்றும் சேவை வரி அவயத்தை உருவாக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
10 இயல்கள் குறித்து பரிந்துரைகள்
இதில், அதிகார பரவலாக்கத்துக்கும், மாநில சுயாட்சிக்குமான வாதம், அரசமைப்பு சட்ட திருத்தம், மாநிலங்களின் ஆட்சி நிலை ஒருமைப்பாடு, ஆளுநர், மொழி, தேர்தல்கள், தொகுதி மறுவரையறை, சுகாதாரம், கல்வி, ஜிஎஸ்டி ஆகிய 10 இயல்களில் பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க: திமுக விருப்ப மனு நாளை முதல் விநியோகம்.. 23ம் தேதி முதல் வீடு, வீடாக பிராசாரம்.. பரபரக்கும் தேர்தல் களம்!!