கரூர் கூட்ட நெரிசல் வழக்கு…சிபிஐ விசாரணை வளையத்தில் வருகிறாரா விஜய்!
Vijay Will Appear In CBI Inquiry?: கரூர் கூட்ட நெரிசல் வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக கோரி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிபிஐ விசாரணை வளையத்தில் விஜய் வருகிறாரா
கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரை பயணத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விசாரணையை ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு கண்காணித்து வருகிறது. இந்த நிலையில், கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக கோரி தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச் செயலாளர் சி. டி. ஆர். நிர்மல் குமார், தேர்தலில் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி, இவர்கள் 4 பேரும் நேற்று திங்கள்கிழமை ( டிசம்பர் 29) டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஆஜராகினர்.
9 மணி நேரம் நடைபெற்ற விசாரணை
இவர்களுடன் கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல், தமிழ்நாடு காவல்துறை சார்பாக எஸ் பி ஜோஸ் தங்கையா, ஏடிஎஸ்பி ஆகியோர் ஆஜராகி உள்ளனர். இவர்களிடம் தனித் தனியாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அடுக்கடுக்காக பல்வேறு முக்கிய கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் எழுப்பி இருந்தனர். இந்த விசாரணையானது, சுமார் 9 மணி நேரம் நடைபெற்றது.
மேலும் படிக்க: கரூர் கூட்ட நெரிசல் வழக்கு:சிபிஐ அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள்…அடுத்து என்ன!
2- ஆவது நாளாக நடைபெறும் விசாரணை
இந்த நிலையில், அவர்களிடம் இன்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 30) 2- ஆவது நாளாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் கேள்விகளால் துளைத் தெடுத்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யிடம் விசாரணை மேற்கொள்வதற்காக சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, அவருக்கு அடுத்த மாதம் சிபிஐ சம்மன் அனுப்பும் என்றும் கூறப்படுகிறது.
விஜய்க்கு அடுத்த மாதம் சம்மன் அனுப்ப திட்டம்
சிபிஐ சம்மன் அனுப்பும் பட்சத்தில், டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் நேரில் ஆஜராகி விசாரணையை மேற்கொள்வார் என்று தெரிகிறது. இதனிடையே, நேற்று செய்தியாளர்களை சந்தித்த நிர்மல் குமார், தவெக தலைவர் விஜயின் பெயர் முதல் தகவல் அறிக்கையில் இடம் பெறவில்லை. இதனால், அவரை சிபிஐ அதிகாரிகள் விசாரணைக்கு அழைக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்திருந்தார். தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பும் என்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: பொங்கல் பரிசு ரொக்கம்… ரூ.3 ஆயிரமா அல்லது ரூ.4 ஆயிரமா? விரைவில் அறிவிப்பு!