இனி ஈஸியா போகலாம்.. பரமக்குடி – ராமநாதபுரம் 4 வழிச்சாலை.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Paramakudi Ramanathapuram Highway : பரமக்குடி - ராமநாதபுரம் பிரிவில் 4 வழிச்சாலை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நான்கு வழிச்சாலையாக அமையும் பட்சத்தில், போக்குவரத்து நெரிசல் குறைவதோடு, பொருளாதார வளர்ச்சி, சுற்றுலாவை அதிகரிக்க செய்யும். மேலும், இதனை தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மகத்தான செய்தி எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டு இருக்கிறார்.

இனி ஈஸியா போகலாம்.. பரமக்குடி - ராமநாதபுரம் 4 வழிச்சாலை.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பரமக்குடி - ராமநாதபுரம் 4 வழிச்சாலை

Updated On: 

02 Jul 2025 08:59 AM

சென்னை, ஜூலை 02:  தமிழகத்தில் பரமக்குடி – ராமநாதபுரம் இடையே (Paramakudi Ramanathapuram Highway) நான்கு வழிச்சாலை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்  அளித்துள்ளது. ரூ.1,853 கோடியில் 46.7 கி.மீ தொலைவுக்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் தமிழகத்தின் நீண்ட நாள் கனவு திட்டமாக இருந்தது. இதற்கு தற்போது மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நாடு முழுவதும் சாலை போக்குவரத்தை மேம்படுத்த மத்திய அரசு தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக, சீரான போக்குவரத்து பயணத்திற்ககாக நெடுஞ்சாலைகளில் மத்திய அரசு புதுப்பித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பரமக்குடி – ராமநாதபுரம் இடையே நான்கு வழிச்சாலை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 2025 ஜூலை 1ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சில முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பரமக்குடி – ராமநாதபுரம் 4 வழிச்சாலை

அதில், பரமக்குடி – ராமநாதபுரம் நான்கு வழிச்சாலை அமைக்க மத்திய அமைச்சரசை ஒப்புதல் அளித்துள்ளது.  பரமக்குடி – ராமநாதபுரம் வரை சுமார் 46.7 கிலோ மீட்டர் தூரம் வரை நான்கு வழிச்சாலையாக அமைய உள்ளது. இந்த திட்டத்திற்கு ரூ.1,853 கோடி ஒதுக்கப்பட்டுளளது.

தற்போது, அந்த பாதை இருவழிச்சாலையாக மட்டுமே உள்ளது. இதனால், போக்குவரத்து நெரிசல், விபத்து அபாயம், நீண்ட நேர பயணத்தை எடுக்கிறது. தற்போது, பரமக்குடி ராமநாதபுரம் இருவழிச்சாலையில் வாகனங்களின் சராசரி வேகம் 48 கிலோ மீட்டர் மட்டுமே உள்ளது.

இதனால், பயணம் நேரம் அதிகமாக உள்ளது. இதனால், நீண்ட நாட்களாக பரமக்குடி ராமநாபுரம் நெடுஞ்சாலையை விரிவாக்க செய்ய தொடர் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.  இதன் மூலம், சீரான போக்குவரத்து, பயண நேரம் குறையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நவீன முறையில் இந்த நான்கு வழிச்சாலையை மத்திய அரசு அமைய உள்ளது. இந்த நான்கு வழிச்சாலையாக அமையும் பட்சத்தில், பயணம் நேரம் 40 சதவீதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, பரமக்குடியில் இருந்து ராமநாதபுரத்திற்கு 40 நிமிடங்களில் செல்ல முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தால், மதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், ராமேஸ்வரம், தனுக்கோடி ஆகிய இடங்களுக்கு செல்லும் போக்குவரத்து வசதி சீராக இருக்கும்.

”தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மகத்தான செய்தி”


ராமேஸ்வரம், தனுஷ்கோடி சுற்றுலா தளமாக இருப்பதால், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதோடு, சுற்றுலாவை மேம்படுத்தும், மேலும் வர்த்தகம் மற்றும் தொழில்துறை மேம்பாட்டிற்கான புதிய வழிகளை உருவாக்கும். இந்த திட்டத்தின் மூலம் ஒட்டுமொத்த தென் மாவட்டங்களின் பொருளாதாரமும் வளர்ச்சி அடையும் என அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த திட்டம் மூலம் நேரடியாக 8.4 லட்சம் மக்கள் வேலை வாய்ப்புகளை பெற முடியும் என கூறுகின்றனர்.

இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மகத்தான செய்தி. பரமக்குடி – ராமநாதபுரம் பிரிவில் 4 வழிச்சாலை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பொருளாதார வளர்ச்சி மற்றும் சுற்றுலாவை அதிகரிக்கவும் செய்யும்” என பதிவிட்டுள்ளார்.