5,000 ரூபாயா? தீபாவளிக்கு 3 மடங்காக உயர்ந்த ஆம்னி பேருந்து கட்டணம் – பேரதிர்ச்சியில் மக்கள்

Bus fare hike : தீபாவளிக்கு இன்னும் ஒருவாரம் மட்டுமே இருக்கும் நிலையில் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் தீபாவளியை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் கட்டணம் 3 மடங்காக உயர்ந்திருப்பது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

5,000 ரூபாயா? தீபாவளிக்கு 3 மடங்காக உயர்ந்த ஆம்னி பேருந்து கட்டணம் - பேரதிர்ச்சியில் மக்கள்

மாதிரி புகைப்படம்

Updated On: 

12 Oct 2025 08:42 AM

 IST

இந்தியாவில் அக்டோபர் 20, 2025 அன்று தீபாவளி (Diwali) பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படவிருக்கிறது. மக்கள் புத்தாடை, பட்டாசுகள் உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வணிகர்கள் மக்கள் பொருட்கள் வாங்குவதை ஊக்குவிக்கும் விதமாக தள்ளுபடிகளை அறிவித்து வருகின்றனர். சென்னை உள்ளிட்ட வெளியூரில் வசிப்பவர்கள் தீபாவளிக்கு தங்கள் சொந்த ஊர் திரும்பும் முனைப்பில் இருக்கின்றனர். தீபாவளிக்கு இன்னும் ஒருவாரமே இருக்கும் நிலையில் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல பேருந்துகள் மற்றும் ரயில்களில் முன்பதிவு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் அக்டோபர் 17, 2025 அன்று வெள்ளிக்கிழமை மக்கள் ஊர்களுக்கு செல்ல ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் புக் செய்ய சென்றபோது கட்டணம் 3 மடங்கு உயர்ந்திருப்பதை பார்த்து மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

3 மடங்கு உயர்ந்த ஆம்னி பேருந்து கட்டணம்

தீபாவளிக்கு இன்னும் ஒருவாரமே இருப்பதால் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். ரயில்களில் முன் பதிவு செய்யாதவர்கள் ஆம்னி பேருந்துகள் மூலம் ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டு வருகின்றனர். இந்த நிலையில் அக்டோபர் 17, 2025 அன்று ஆம்னி பேருந்து கட்டணம் வழக்கத்தை விட மூன்று மடங்காக உயர்ந்திருப்பது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதையும் படிக்க : தீபாவளிக்கு ரிட்டர்ன் டிக்கெட் போடலையா? – சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு செல்ல அக்டோபர் 17, 2025 அன்று ரூ.5,000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு ரூ.1,800 கட்டணமாக நிர்ணயிக்கப்படும். அதுபோல சென்னையில் இருந்து மதுரைக்கு வழக்கமாக ரூ.1,100 கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில் தற்போது ரூ.4,100 ஆக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தீபாவளியைப் பயன்படுத்தி ஆம்னி பேருந்துகள் கொள்ளையடிப்பதாக மக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். அரசு இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல முடியாத நிலை

ரயில்கள் மற்றும் அரசு பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாதவர்கள் ஆம்னி பேருந்தில் செல்ல திட்டமிட்டுள்ளனர். தற்போது இதன் கட்டணம் 3 மடங்கு உயர்ந்திருப்பது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் தங்கள் சொந்த ஊரில் தீபாவளி கொண்டாட வேண்டும் என்ற எளிய மக்களின் கனவு தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை அரசு முறைப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவிடுத்து வருகின்றனர்.

இதையும் படிக்க : தீபாவளிக்கு ஊருக்கு போக ரெடியா? கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்.. எங்கெங்கு?

இதுகுறித்து மக்கள் சமூக வலைதளங்களில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் போக்குவரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கள் கட்டணத்தை உயர்த்தினால் தனியார் ஆம்னி பேருந்து நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கைவிடுத்துள்ளார். மேலும் இதற்காக சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவம் அவர் தெரிவித்தார்.