மாயமான வட மாநில தொழிலாளி.. காவல் துறை என்ன செய்கிறது? நயினார் நாகேந்திரன் கடும் விமர்சனம்
Nainar Nagendran: திருத்தணி சம்பவம் தொடர்பாக, அந்த நான்கு சிறுவர்களும் கைது செய்யப்பட்டனர். இதில், மூன்று பேர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டனர். மேலும், ஒருவரின் படிப்பு காரணமாக அந்த சிறுவன் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்நிலையில் இது தொடர்பாக நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை, ஜனவரி 4, 2026: கடந்த சில தினங்களுக்கு முன்பு, திருத்தணி ரயில் நிலையத்தில் சிறுவர்களால் ஒரு வடமாநில தொழிலாளி கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தாக்குதலுக்கு உள்ளான அந்த தொழிலாளி தற்போது காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக, தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அடிபட்டவரைக் கூட பாதுகாக்க முடியாத அளவிற்கு ஆழ்ந்த உறக்கத்தில் திமுகவின் ஏவல் துறை உள்ளது” என கடுமையாக விமர்சித்துள்ளார்.
தாக்குதல் சம்பவத்தின் பின்னணி:
சென்னையிலிருந்து திருத்தணிக்கு புறநகர் ரயில் சென்று கொண்டிருந்தபோது, அதில் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சூரஜ் என்ற தொழிலாளி பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது, நான்கு சிறுவர்கள் திடீரென கத்தியால் அந்த வடமாநில தொழிலாளியை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, அவர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
மேலும் படிக்க: அரசு அதிகாரிகள் மூட நம்பிக்கைகளுக்கு அடிபணியக்கூடாது… சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்
இந்த சம்பவம் தொடர்பாக, அந்த நான்கு சிறுவர்களும் கைது செய்யப்பட்டனர். இதில், மூன்று பேர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டனர். மேலும், ஒருவரின் படிப்பு காரணமாக அந்த சிறுவன் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.
அரசு மருத்துவமனையிலிருந்து மாயமான சூரஜ்:
இந்த நிலையில், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சூரஜ் என்ற வடமாநில தொழிலாளி காணாமல் போயுள்ளார் என்ற தகவல்கள் தற்போது வெளியாகி வருகின்றன. இது தொடர்பாக நயினார் நாகேந்திரன் தனது சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: “அடிபட்டவரைக் கூட பாதுகாக்க முடியாத அளவிற்கு ஆழ்ந்த உறக்கத்தில் திமுகவின் ஏவல் துறை! கடந்த 27ஆம் தேதி திருத்தணி ரயில் நிலையம் அருகே கஞ்சா சிறுவர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டு, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த வடமாநில இளைஞர் மாயமாகியிருப்பதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் படிக்க: சாதி பெயர் கூடாது… தீண்டாமை உறுதிமொழி… – ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான கட்டுபாடுகள் என்ன?
காவல்துறைக்கு குற்றங்களைத் தடுக்க திராணியில்லை:
தமிழக முதல்வர் ஸ்டாலினின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் காவல்துறைக்கு குற்றங்களைத் தடுக்கவும் திராணியில்லை, பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்கவும் துப்பில்லை என்பதற்கான மற்றொரு சான்று இது. கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளானவரை அரசு மருத்துவமனையில் வைத்து பாதுகாக்க முடியாத அளவிற்கு தமிழக காவல்துறை வலுவிழந்துவிட்டதா? அல்லது அந்த இளைஞர் பிழைத்து வந்தால் அரசியல் ரீதியாக சிக்கல்கள் உருவாகும் என நினைத்து திட்டமிட்டே அவரை அரசு தொலைத்துவிட்டதா?
உண்மையில் அந்த இளைஞர் காணாமல் போனாரா, அல்லது மக்களை மடைமாற்றக் கொலை செய்யப்பட்டாரா? போன்ற சந்தேகங்கள் மக்கள் மனதில் வலுக்கத் தொடங்கிவிட்டன.
பிழைப்பிற்காக எல்லை தாண்டி தமிழகத்தில் தஞ்சம் புகும் வடமாநிலத்தவரின் மீது திமுக தலைவர்கள் எந்த அளவிற்கு வன்மத்தைக் கக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும், திமுகவின் பிளவுவாத அரசியலுக்கு கண்மூடித்தனமாக காவல்துறையினர் எவ்வாறு ஆதரவளிக்கிறார்கள் என்பதையும் தமிழகம் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது.
எனவே, பாதிக்கப்பட்ட வடமாநில இளைஞர் காணாமல் போனதன் உண்மை பின்னணி என்ன என்பதை முதல்வர் உடனடியாக மக்களிடம் விளக்கிக் கூற வேண்டும். இல்லையேல், திமுக அரசின் அலட்சியத்தால் இந்திய அளவில் நமது தமிழகம் தலைகுனிந்து நிற்க வேண்டிய சூழலுக்கு நாம் தள்ளப்படுவோம்!”