நிறைவடைந்த SIR பணிகள்.. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 13 லட்சம் பேர் விண்ணப்பம்..
SIR - Tamil Nadu: அடுத்த மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாக இருக்கும் சூழலில், மக்கள் படிவம் 6 பயன்படுத்தி விண்ணப்பிப்பதற்காக பல்வேறு பகுதிகளில் சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன. இதற்கான கால அவகாசம் ஜனவரி 18ஆம் தேதி வரை தேர்தல் ஆணையம் தரப்பில் வழங்கப்பட்டது.

கோப்பு புகைப்படம்
சென்னை, ஜனவரி 19, 2026: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்குப் பிறகான வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயரைச் சேர்க்கக் கோரி, படிவம் 6 பயன்படுத்தி சுமார் 13 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், அதற்கான அனைத்து பணிகளும் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தேர்தல் ஆணையம் தரப்பில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தப் பணிகள் 2025 நவம்பர் 4ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 14ஆம் தேதி வரை நடைபெற்றது.
பிஹார் மாநிலத்தில் முதன்முறையாக இந்த SIR பணிகள் மேற்கொள்ளப்பட்டதில், 65 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். அதேபோல், தமிழகத்திலும் அதிக அளவில் வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த SIR பணிகள் முடிவடைந்த சூழலில் 97.37 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். மொத்தமாக தமிழகத்தில் உள்ள வாக்காளர்கள் எண்ணிக்கை தற்போதைய நிலவரப்படி 5.43 கோடியாக உள்ளது.
மேலும் படிக்க: உயர்நிலை மாணவர்களால் 2 ஆம் வகுப்பு பாடங்களைக் கூட படிக்க முடியவில்லை- ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு
SIR – சிறப்பு முகாம்கள்:
இந்த சூழலில், விடுபட்ட வாக்காளர்கள் படிவம் 6 பயன்படுத்தி மீண்டும் விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்காக கால அவகாசமும் வழங்கப்பட்டது. உயிரிழந்தவர்கள், முகவரி மாற்றியவர்கள், இரட்டை வாக்குப் பதிவு இருப்பவர்கள் மட்டுமே வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, படிவம் 6 பயன்படுத்தி பலரும் விண்ணப்பித்து வந்தனர்.
அடுத்த மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாக இருக்கும் சூழலில், மக்கள் படிவம் 6 பயன்படுத்தி விண்ணப்பிப்பதற்காக பல்வேறு பகுதிகளில் சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன. இதற்கான கால அவகாசம் ஜனவரி 18ஆம் தேதி வரை தேர்தல் ஆணையம் தரப்பில் வழங்கப்பட்டது. இந்த கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், தமிழகத்தில் மொத்தமாக படிவம் 6 பயன்படுத்தி 13 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: பொங்கல் நீச்சல் போட்டி… குழந்தைகள் கண்முன்னே தந்தை உயிரிழந்த சோகம்
13 லட்சம் பேர் விண்ணப்பம்:
குறிப்பாக, 13 லட்சத்து 3 ஆயிரத்து 487 பேர் விண்ணப்பித்துள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியலில் ஆட்சேபனை தெரிவித்த 35 ஆயிரத்து 646 பேர் படிவம் 7 சமர்ப்பித்துள்ளனர். வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கக் கோரி 35 ஆயிரத்து 646 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் சமர்ப்பித்த படிவங்கள் அனைத்தையும் சரிபார்த்த பின்னர், பிப்ரவரி 17, 2026 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் என தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.