AIADMK BJP Alliance: அதிமுக – பாஜக கூட்டணி..! தன்னால் எந்த ஒரு கருத்தை கூற முடியாது.. அண்ணாமலை பளீச் பதில்!
2026 Tamil Nadu Elections: அண்ணாமலை தமிழ்நாடு பாஜக தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதும், அதிமுகவுடனான கூட்டணி குறித்த அவரது கருத்தும், பாஜகவின் தற்போதைய செயல்பாடுகளும் இந்தக் கட்டுரை விளக்குகிறது. அதிமுகவுடனான கூட்டணியில் அண்ணாமலையின் பங்கு, அவரது எதிர்கால அரசியல் நிலை மற்றும் இதனால் பாஜகவுக்கு ஏற்படும் விளைவுகள் ஆகியவை கூறப்பட்டுள்ளன. அண்ணாமலையின் அதிமுக விமர்சனங்களும், அதன் தாக்கமும் இக்கட்டுரையில் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன.

சென்னை, ஜூலை 6: தமிழ்நாட்டில் தமிழிசை சௌந்தரராஜன், எல்.முருகனுக்கு பிறகு, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை தமிழ்நாடு பாஜக மாநில தலைவராக நியமிக்கப்பட்டார். இதன்பிறகு, தமிழ்நாட்டில் பாஜக அதிகளவில் வெளியே தெரிந்தது என்றே சொல்லலாம். இருப்பினும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அண்ணாமலைக்கு பதிலாக தமிழ்நாடு பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் (Nainar Nagendran) நியமிட்டார். அப்போது, அண்ணாமலைக்கு (Annamalai) மத்திய அளவில் மிக முக்கிய பொறுப்புகள் வழங்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், தற்போது வரை இதுகுறித்தான அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. இந்தநிலையில், அதிமுக – பாஜக கூட்டணி (AIADMK – BJP Alliance) குறித்து நான் தனி மனிதன் என்று அண்ணாமலை தெரிவித்திருந்தது தற்போது பாஜக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் வகையில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தது. இந்த கூட்டணிக்கு முன்பாக அண்ணாமலை முட்டுக்கட்டையாக இருந்ததாக எடப்பாடி பழனிசாமி மத்திய பாஜகவிடம் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, பாஜக மேலிடம் அதிரடியாக அண்ணாமலைக்கு பதிலாக நயினார் நாகேந்திரனை தமிழ்நாடு பாஜக மாநில தலைவராக நியமித்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலின்போது அதிமுக பாஜக கூட்டணி முறிவு ஏற்படுவதற்கு அண்ணாமலைதான் காரணம் என்று கருத்தும் முன்வைக்கப்பட்டது. அதிமுகவின் முன்னாள் தலைவர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதா குறித்து விமர்சனம் செய்ததாகவும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஒருமையில் விமர்சித்ததால் அதிமுக தரப்பில் அண்ணாமலை மீது கடும் அதிருப்தி ஏற்பட்டது. இதனால், சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக – பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டுமென்றால் அண்ணாமலையை பாஜக தலைமை பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று அதிமுக அமித்ஷாவிடம் வலியுறுத்தப்பட்டதாக தெரிகிறது.




இந்தநிலையில், பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதற்கு பிறகு அண்ணாமலை பாஜகவின் முக்கிய விஷயங்களில் இருந்து ஓரங்கட்டப்படுவதாக பாஜக தொண்டர்கள் கூறிவருகின்றனர். இதற்கு காரணம் அதிமுக என்று கூறப்பட்டு வரும் நிலையில், இந்த தகவலை அதிமுக திட்டவட்டமாக மறுத்து வருகிறது. இதை தொடர்ந்து, பாஜக – அதிமுக கூட்டணி தொடர்பாக அண்ணாமலையிடம் இன்று அதாவது 2025 ஜூலை 6ம் தேதி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அண்ணாமலை விளக்கம்:
நான் யார்கிட்டயும் வேல பாக்கல
நான் இன்று தனி மனிதன். . .
மத்தவங்க கருத்துக்கு பதில் சொல்ல வேண்டிய
அவசியம் எனக்கு இல்ல. . . !நேர்மையின் உச்சம்
தன்மானத்தின் முழு உருவம் எங்க அண்ணன் அண்ணாமலை. . .பதவியே இல்லை என்றாலும் நீயே எங்கள் தலைவன் @annamalai_k 🙏🏻❤️ pic.twitter.com/h5NKKwRgZK
— ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳 (@Eesan_Magal) July 6, 2025
இதுகுறித்து விளக்கம் அளித்த அண்ணாமலை, “அதிமுக – பாஜக கூட்டணி குறித்து தன்னால் எந்த ஒரு கருத்தை கூற முடியாது. நான் யார்கிட்டயும் வேலை பார்க்கவில்லை. நான் தனிமனிதனாக இருக்கிறேன். மற்றவர்கள் கருத்துக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” என்று தெரிவித்தார். இதன்மூலம், பாஜக கட்சி தலைமை மீது அண்ணாமலை அதிருப்தியில் இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
அண்ணாமலை அதிமுகவிற்கு எதிராக என்னென்ன கருத்துகளை முன் வைத்தாரோ, அதே அளவிற்கு நயினார் நாகேந்திரன் அதிமுகவுடன் இணக்கமாக செயல்பட்டு வருகிறார். சமீபத்தில், நயினார் நாகேந்திரன் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் அண்ணாமலைக்கு முறையான அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும், பேனர், கட் அவுட்களில் அண்ணாமலை புகைப்படம் வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.