பள்ளிக்கரணையில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து.. 3 பேருக்கு காயம்..
Chennai Pallikaranai Cylinder Blast: சென்னை பள்ளிக்கரணை பகுதியில் வீட்டு உபயோக சிலிண்டர் வெடித்து பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ அடுத்தடுத்து இருக்கும் 4 குடிசைகளுக்கு பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில் 3 பேருக்கு காயம் ஏற்பட்டது.

சென்னை, ஜூலை 6, 2025: சென்னை பள்ளிக்கரணை அடுத்து ஜல்லடியன்பேட்டை பகுதியில் வீட்டு உபயோக சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. சிலிண்டர் வெடித்ததில் மல மலவென தீ பிடித்து அடுத்த இருக்க கூடிய நான்கு குடிசை வீடுகள் எரிந்து சேதம் அடைந்தது. இதனைத் தொடர்ந்து அங்கு பெரும் பதற்றமான சூழல் நிலவியது. இதில் மூன்று பேருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பள்ளிக்கரணை அடுத்து ஜல்லடியன்பேட்டை பத்மாவதி நகர், லோகாம்பாள் தெருவில் பார்வதி என்பவருக்கு சொந்தமான குடிசை வீட்டில், வீட்டு உபயோக சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்த சிதறியுள்ளது. இதனால் தீ விபத்து ஏற்பட்டது இந்த தீ மளமளவென பரவி அடுத்து இருக்கக்கூடிய நான்கு குடிசைகளுக்கும் பரவியுள்ளது இதனால் அந்த குடிசைகள் கடும் சேதம் அடைந்தது.
உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது:
வானுயர தீ எரிந்ததைக் கண்டு அக்கம் பக்கத்தினர் அலறி அடித்து ஓடினர். வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் உடனடியாக வெளியேறியதன் காரணமாக உயிர் சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் மூன்று பேருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டதாகவும், அவர்களை உடனடியாக அருகில் இருக்கக்கூடிய மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் அறிந்து வந்த மேடவாக்கம் தீயணைப்பு துறையினர் தீயை போராடி அணைத்தனர் பின்னர் வெடித்த சிலிண்டரையும் அப்பகுதியில் இருந்த மூன்று சிலிண்டர்களையும் வெடிக்கும் முன் பத்திரமாக மீட்டனர். இந்த குடிசை வீடுகளில் வட மாநில நபர்கள் 10 பேர் தங்கி இருந்துள்ளனர் தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து பள்ளிக்கரணை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.