பாஜக தேர்தல் பொறுப்புகளில் இருந்து விலகினார் அண்ணாமலை..
Annamalai: தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், அவரை கவனித்துக் கொள்வதற்கு பொறுப்பில் இருந்து விலகுவதாக காரணம் கூறியுள்ளார். மேலும், இதுகுறித்து மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனிடம் விளக்கமளித்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். சிங்காநல்லூர், விருகம்பாக்கம் உள்ளிட்ட 6 தொகுதிகளுக்கான பொறுப்பாளராக அவர் நியமிக்கப்பட்டிருந்தது குறிப்பிடதக்கது.

அண்ணாமலை
கோவை, பிப்ரவரி 03: பாஜகவில் தனக்கு கொடுக்கப்பட்டுள்ள சட்டமன்றத் தேர்தல் பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், அவரை கவனித்துக் கொள்வதற்கு பொறுப்பில் இருந்து விலகுவதாக காரணம் கூறியுள்ளார். மேலும், இதுகுறித்து மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனிடம் விளக்கமளித்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். முன்னதாக, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு சுற்றுப்பயண பொறுப்பாளர்களை நியமித்து அறிவித்தார்.
இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்… நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரிய மதுரை கலெக்டர் – என்ன நடந்தது?
6 தொகுதிகளுக்கு பொறுப்பாளர்:
அதன்படி, ஒவ்வொரு பொறுப்பாளருக்கும் 2 முதல் 7 தொகுதிகள் வரை ஒதுக்கப்பட்டிருந்தன. அவ்வாறு, அண்ணாமலைக்கு கோவை சிங்காநல்லூர், மதுரை தெற்கு, சென்னை விருகம்பாக்கம், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம், குமரி மாவட்டம் பத்மநாபபுரம் ஆகிய 6 தொகுதிகளுக்கு சுற்றுப்பயண பொறுப்பாளர் பணி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்தப் பொறுப்பிலிருந்து விலகுவதாக அண்ணாமலை அறிவித்துள்ளார்.
தேர்தல் பொறுப்பில் இருந்து விலகுகிறேன்:
இதுகுறித்து கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் நான் போட்டியிடுவேனா என்று தெரியவில்லை. அதற்கு காலம் தான் பதில் சொல்லும். கட்சி மேலிடம் முடிவு செய்யும். மேலும், எனது தந்தையின் உடல்நிலை சரியில்லாததால் சிங்காநல்லூர், காரைக்குடி உள்ளிட்ட 6 தொகுதிகளின் பாஜக தேர்தல் சுற்றுப்பயண பொறுப்பாளர் பணியிலிருந்து நான் விலகுகிறேன். இது குறித்து கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரனிடமும் தெரிவித்திருக்கிறேன் என்று அவர் கூறினார்.
சிறந்த பட்ஜெட்:
மேலும் பேசிய அவர், யாரும் குறை சொல்ல முடியாதளவுக்கு மத்திய பட்ஜெட் உள்ளது. ஒவ்வொரு வருடமும் மத்திய பட்ஜெட் பெரிதாகிக் கொண்டே இருக்கிறது. குறு சிறு நடுத்தர நிறுவனங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் வகையில் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது. உட்கட்டமைப்பு,பெண்கள் விடுதி, விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அண்ணாவின் குடும்பம் பற்றி தெரியுமா?
அமெரிக்காவுடன் இழுபறியாக இருந்த ஒப்பந்தம் 18% என முடிவுக்கு வந்துள்ளது. எல்லா மாநிலத்திற்கும் பயனளிக்கும் வகையில் நல்ல பட்ஜெட் கொடுத்துள்ளோம். தமிழ்நாடு அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அண்ணாவின் ஆட்சிக்கும், திமுக ஆட்சிக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறதா. அண்ணாவின் குடும்பத்தினர் இன்றைக்கு எப்படி இருக்கிறது என்று யாருக்காவது தெரியுமா. அண்ணாவின் குடும்பம் அரசியல் பக்கமே வருவதே இல்லை என்றார்.
இதையும் படிக்க : தவெக தேர்தல் பிரசார சட்ட பாதுகாப்பு குழு…34 பேர் கொண்ட டீமை இறக்கிய விஜய்!
விஜய் பேச்சைப் பற்றி கவலையில்லை:
தொண்டர்களிடம் கைத்தட்டல், விசில் வாங்க வேண்டும் என்கிற அடிப்படையில் தான் விஜய் பேசுகிறார். இதுவரை கட்சிகள் செய்யாத என்ன திட்டத்தை கொண்டு வரப் போகிறோம் என்று மக்களை சிந்திக்க வைக்கும் வகையில் விஜய் எதுவும் பேசவில்லை. அவரின் பேச்சைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. விஜய் வெளியே வந்து வீதி வீதியாக பிரச்சாரம் செய்து மக்கள் ஏற்று கொண்டால் பார்க்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.