கூடுதல் இடங்களை கேட்டு கூட்டணி கட்சிகள் அழுத்தம்.. தொகுதி பங்கீடு குழுவுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை..
CM Stalin disscusion with the seat-sharing committee: திமுக கூட்டணியில் புதிய வரவான தேமுதிகவுக்கு ஒரு ராஜ்சபா பதவி ஒதுக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக விடுதலை சிறுத்தைகள், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளுடன் முதற்கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளது.

கோப்புப் புகைப்படம்
சென்னை, மார்ச் 07: திமுக கூட்டணி கட்சிகள் கூடுதல் இடங்களை கேட்கும் நிலையில், தொகுதி பங்கீடு குழுவுடன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்றைய தினம் ஆலோசனை மேற்கொண்டார். திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் அதிக தொகுதிகள் கேட்டு அழுத்தம் தருவதால், அக்கட்சிக்கு தொகுதி பங்கீடு சற்று சவாலானதாக மாறியுள்ளது. கடந்த முறையில் கூட்டணியில் இருந்தவர்களை விட இந்த முறை மேலும் சில கட்சிகள் அக்கூட்டணியில் இணைந்துள்ளன. இதனால், அனைவரின் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றுவது திமுக தலைமைக்கு முடியாத ஒன்றாகவும் மாறியுள்ளது.
இதையும் படிக்க : போடி தொகுதியில் போட்டியிடும் ஓபிஎஸ்?.. மகன் ரவீந்தரநாத் அறிவாலயத்தில் விருப்ப மனு!
கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு:
சட்டமன்ற தேர்தலில் திமுக 26 கட்சிகளுடன் மெகா கூட்டணியை அமைத்துள்ளது. இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், நீண்ட இழுபறிக்கு பின்னர் காங்கிரஸ் கட்சியுடனான தொகுதி பங்கீடு ஒப்பந்தம் ஆனது. அக்கட்சிக்கு கடந்த சட்டமன்ற தேர்தலை விட கூடுதலாக 3 இடங்கள் சேர்த்து 28 தொகுதிகளுடன் ஒரு ராஜ்சபா எம்.பி பதவியும் வழங்கப்பட்டது. இதன் மூலம் காங்கிரஸ் கூட்டணியல் இருந்து விலகும், தவெகவுடன் கூட்டணி அமைக்கும் போன்ற பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் புது வரவு:
அதோடு, திமுக கூட்டணியில் புதிய வரவான தேமுதிகவுக்கு ஒரு ராஜ்சபா பதவி ஒதுக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக விடுதலை சிறுத்தைகள், மக்கள் நீதி மய்யம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் முதற்கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளது. எனினும், அதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை எனத் தெரிகிறது. ஏனெனில், அனைத்து கட்சிகள் கூடுதல் இடங்களை கேட்டு அழுத்தம் தருகின்றன. குறிப்பாக, திமுகவில் இணைந்த தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டது கூட்டணி கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க : தேமுதிக கனவு நிறைவேறியது… நாடாளுமன்றம் செல்லும் கட்சியின் முதல் எம்.பி.. யார் இந்த எல்.கே.சுதீஷ்!
ஆலோசனை மேற்கொண்ட முதல்வர்:
அந்தவகையில், புதிதாக இணைந்துள்ள தேமுதிகவுக்கு ராஜ்யசபா பதவி ஒதுக்கப்பட்டதுடன் 10 தொகுதிகளை ஒதுக்கும் மனநிலையில் திமுக இருப்பதாக தகவல்கள் வெளியானது. எனவே கூட்டணியில் நீண்ட காலம் பயணிக்கும் தங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து கூடுதல் தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று மற்ற கட்சிகள் கருதுகின்றன. இதனால் மற்ற கட்சிகளுடனான தொகுதி பங்கீடு உடன்பாட்டில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தொகுதி பங்கீடு குழுவுடன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்றைய தினம் ஆலோசனை மேற்கொண்டார். இதில், பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.