இந்த நிலையில், தவெக சார்பில் இதுவரை 120 மாவட்டச் செயலாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் சில மாவட்டங்கள் மற்றும் சட்டமன்றத் தொகுதிகளுக்கு மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் நியமிக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இதுவரை மாவட்டச் செயலாளர்கள் அறிவிக்கப்படவில்லை என்ற தகவலும் வெளியானது.
இதையும் படிக்க : சென்னையில் இன்று நடக்கும் திமுக இளைஞரணி ஆலோசனை கூட்டம்.. அமைப்புப் பணிகள் குறித்து விவாதிக்க திட்டம்..
இந்த நிலையில் தான், மீதமுள்ள பகுதிகளுக்கான மாவட்டச் செயலாளர்கள் அறிவிக்கப்பட உள்ளதாக, டிசம்பர் 22, 2025 திங்கள் கிழமை இரவு சம்பந்தப்பட்ட நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இன்று காலை முதலே பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருமளவில் திரண்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில், ஸ்ரீவைகுண்டம் தொகுதியைத் தவிர்த்து மற்ற ஐந்து தொகுதிகளுக்கு மாவட்டச் செயலாளர்கள் அறிவிக்கப்படலாம் என்ற தகவலும் பரவியது.
அதே நேரத்தில், தூத்துக்குடி மத்திய மாவட்டச் செயலாளராக சாமுவேல் என்பவர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து, சாமுவேல் தனது ஆதரவாளர்களுடன் பனையூர் அலுவலகத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் நிர்வாகியான அஜிதா, தனது ஆதரவாளர்களுடன் பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்திற்கு வந்தார். அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்தவர்கள், அவர்களை அலுவலகத்திற்கு செல்ல விடாமல் தடுத்தனர்.
இதையும் படிக்க : திமுகவும்-அதிமுகவும் பங்காளிகள்…தவெக நிர்மல் குமார் அட்டாக்!
மேலும், அவர்களை அந்தப் பகுதியில் இருந்து கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, நீண்ட காலமாக கட்சிக்காக உழைத்தவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்றும், அந்த தொகுதியில் செல்வாக்கு இல்லாத ஒருவருக்கு பதவி வழங்குவது நியாயமில்லை என்றும் அஜிதாவின் ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர். இது தொடர்பாக அஜிதாவுடன் கட்சி நிர்வாகிகள் பேச்சவார்த்தை நடத்தியதாகவும் அதில் உடன்பாடு எட்டவில்லை என்றும் கூறப்படுகிறது.
விஜய்யின் கார் மறிப்பு
இதையடுத்து, தவெக அலுவலகத்தின் முன் தனது ஆதரவாளர்களுடன் காத்திருந்த அஜிதா, அலுவலகத்துக்கு வந்த விஜய்யின் காரை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவரை காவலர்கள் அப்புறப்படுத்தி விஜய்யின் கார் செல்ல அனுமதித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் இது வரும் நாட்களில் கட்சிக்குள் மேலும் சலசலப்பை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
