வருமான வரித்துறைக்கு எதிராக விஜய் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு.. சாதகமாக அமையுமா?

வருமானத்தை மறைத்ததாகக் கூறி, நடிகர் விஜய்க்கு 1.50 கோடி ரூபாய் அபராதம் விதித்து, 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் தேதி வருமானவரித்துறை உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அபராதம் விதித்த வருமானவரித்துறை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

வருமான வரித்துறைக்கு எதிராக விஜய் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு.. சாதகமாக அமையுமா?

கோப்பு புகைப்படம்

Published: 

06 Feb 2026 08:02 AM

 IST

சென்னை, பிப்ரவரி 6, 2026: புலி படத்திற்காக பெற்ற 15 கோடி ரூபாயை வருமானத்தில் இருந்து மறைத்ததாக நடிகர் விஜய்க்கு 1.50 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கில், இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. நடிகர் விஜய் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். அதன் முதல் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வரும் சூழலில், இந்த தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

வழக்கு பின்னணி என்ன?

2015 ஆம் ஆண்டு நடிகர் விஜயின் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. கடந்த 2015–16 நிதியாண்டிற்கான வருமானமாக 35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் என நடிகர் விஜய் கணக்கு காட்டியிருந்தார். அந்த ஆண்டிற்கான மதிப்பீட்டு நடவடிக்கைகளை மேற்கொண்ட வருமானவரித்துறை அதிகாரிகள், 2015 ஆம் ஆண்டு கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்தனர்.

மேலும் படிக்க: “125 நாட்கள் வேலை திட்டத்தை சீர்குலைப்பதா?”.. திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பிப்.13ல் அதிமுக ஆர்ப்பாட்டம்..

அப்போது, புலி திரைப்படத்தில் நடிப்பதற்காக அவர் பெற்ற 15 கோடி ரூபாயை வருமானக் கணக்கில் காட்டவில்லை என்பது கண்டறியப்பட்டது. அதாவது, 2015 ஆம் ஆண்டு புலி படத்தின் தயாரிப்பாளர்கள் வழங்கிய ஆவணங்களின் அடிப்படையில், விஜய்க்கு காசோலை மூலம் ரூபாய் 16 கோடியும், ரொக்கமாக ரூபாய் 4.93 கோடியும் வழங்கப்பட்டதாக வருமானவரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

1.50 கோடி அபராதம் விதித்த வருமான வரித்துறை:

இந்த வருமானத்தை மறைத்ததாகக் கூறி, நடிகர் விஜய்க்கு 1.50 கோடி ரூபாய் அபராதம் விதித்து, 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் தேதி வருமானவரித்துறை உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அபராதம் விதித்த வருமானவரித்துறை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. பின்னர், இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இறுதி விசாரணைக்காக வந்தது.

மேலும் படிக்க: தேர்தல் அறிக்கைக்கான பரிந்துரைகள்.. இனி மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்பலாம் – தவெக வெளியிட்ட அறிவிப்பு..

விசாரணையின் போது, விஜய் தரப்பில், சட்டப்படி அபராத உத்தரவு 2019 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் தேதிக்கு முன்பாக பிறப்பிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், சுமார் மூன்று ஆண்டுகள் காலதாமதமாக 2022 ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது சட்டவிரோதம் என்பதால் அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

அதே நேரத்தில், வருமானவரித்துறை தரப்பில், வருமானவரி மதிப்பீட்டிற்கு எதிரான மேல்முறையீடு முடிவடைந்த பின்னர், ஆறு மாத கால அவகாசத்திற்குள் அபராத உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், வருமானவரிச் சட்டத்தின் படி நடிகர் விஜய்க்கு அபராதம் விதித்தது முறையானதுதான் என்றும் வாதிடப்பட்டது. மேலும், விஜய் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

விஜய் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு:

இரு தரப்பின் வாதங்களையும் கேட்ட சென்னை உயர்நீதிமன்றம், வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. இந்த நிலையில், வருமானத்தை மறைத்ததாக ரூபாய் 1.50 கோடி அபராதம் விதித்ததற்கு எதிராக நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

சட்டமன்றத் தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெற இருக்கக்கூடிய சூழலில், விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றி கழகம் தேர்தல் பணிகளை மும்முரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், இந்த தீர்ப்பு நடிகர் விஜய்க்கு சாதகமாக வருமா இல்லையா என்பது அரசியல் வட்டாரங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

அழகான வெற்றிச் சின்னம்... இந்தியா கேட் போட்டோவை பகிர்ந்து டிரம்ப் கருத்து
இந்திய பொருட்களுக்கான அமெரிக்காவின் சுங்க வரி 18 சதவிகிதமாக குறைப்பு
தொண்டையில் சிக்கிய அட்டை பூச்சி - 55 வயது நபரின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்கள்
ரூ.2 கோடிக்கு அரிய வாகன நம்பர் பிளேட்டை வாங்கிய நபர்..