ஒரு ‘டீ’ ரூ.1 மட்டுமே.. காதலர் தினத்தில் ருசிகரம்.. 3 நாட்களுக்கு ஆஃபர்.. எங்கு தெரியுமா?

Valentine's Day offer: தமிழகம் முழுவதும் நேற்றைய தினம் கடற்கரைகள், பூங்காக்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், பரிசு பொருட்கள் கடைகள், பேக்கரி, தேநீர் கடைகள், கோவில்கள் என பல்வேறு இடங்களிலும் காதர்கள் ஜோடி ஜோடியாக தென்பட்டனர். தங்களது காதலர்களுக்கு இனிப்பை ஊட்டி, அன்பை பகிர்ந்து மகிழ்ச்சியாக நேரத்தை செலவழித்தனர்

ஒரு ‘டீ’ ரூ.1 மட்டுமே.. காதலர் தினத்தில் ருசிகரம்.. 3 நாட்களுக்கு ஆஃபர்.. எங்கு தெரியுமா?

காதலர் தினத்தில் ரூ.1க்கு ‘டீ’ விற்பனை..

Updated On: 

15 Feb 2026 09:50 AM

 IST

நெல்லை, பிப்ரவரி 15: நெல்லை மாவட்டம் வள்ளியூரில் உள்ள ஒரு டீக்கடையில் காதலர் தினத்தையொட்டி, அதிரடி தள்ளுபடியாக ரூ.1க்கு டீ விற்பனை செய்யப்பட்ட ருசிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது. நாடு முழுவதும் நேற்றைய தினம் (பிப்.14) காதலர் தினம் (Valentines Day) கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காதலர்கள் ஒருவருக்கொருவர் ரோஜாப்பூ, வாழ்த்து அட்டை, சாக்லேட் உள்ளிட்ட பரிசுகளை கொடுத்து மகிழ்ந்தனர். இந்த நாளில் காதலர்கள் மட்டுமல்லாமல், திருமணமான தம்பதிகளும் தங்களுக்குள் இருக்கும் அன்பை வெளிப்படுத்தும் வகையில் பரிசுகள் கொடுத்து, போட்டோஸ், பதிவுகள், சிறிய வாழ்த்துச் செய்திகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து மகிழ்ந்தனர்.

Valentine’s Day: பார்ட்னருடன் காதலை வலுப்படுத்த.. காதலர் தினத்தில் இப்படி சர்ப்ரைஸ் பண்ணுங்க!

தமிழகம் முழுவதும் உற்சாக கொண்டாட்டம்:

இதையொட்டி, தமிழகம் முழுவதும் நேற்றைய தினம் கடற்கரைகள், பூங்காக்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், பரிசு பொருட்கள் கடைகள், பேக்கரி, தேநீர் கடைகள், கோவில்கள் என பல்வேறு இடங்களிலும் காதர்கள் ஜோடி ஜோடியாக தென்பட்டனர். தங்களது காதலர்களுக்கு இனிப்பை ஊட்டி, அன்பை பகிர்ந்து மகிழ்ச்சியாக நேரத்தை செலவழித்தனர். இதனால், நேற்றைய தினம் ரோஜா பூக்களின் விலை கடுமையாக உயர்ந்து காணப்பட்டது. அந்தவகையில், காதலர் தினத்தையொட்டி, நெல்லையில் ஒரு டீக்கடையில் ரூ.1க்கு டீ விற்கப்பட்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு ‘டீ’ ரூ.1  மட்டுமே:

நெல்லை மாவட்டம் தெற்கு கள்ளிகுளத்தை சேர்ந்தவர் ஆன்டோ பெனிட்டஸ். இவர் தெற்கு கள்ளிகுளம், வள்ளியூர், கலந்தபனை, நாகர்கோவில் ஆகிய பகுதிகளில் பேக்கரி நடத்தி வருகிறார். இதில் வள்ளியூரில் உள்ள கடையில் டீ மாஸ்டராக ஜெயக்குமார் வேலை செய்து வருகிறார். காதலர் தினத்தை முன்னிட்டு வள்ளியூர் கிளையில் மட்டும் நேற்று முன்தினம் முதல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வரை 3 நாட்களுக்கு அதிரடியாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதாவது, ஒரு டீ 1 ரூபாய் மட்டுமே என்று கூறி கடை முன்பு விளம்பர பலகை வைக்கப்பட்டு உள்ளது. இதை அறிந்த ஏராளமானவர்கள் கடைக்கு வந்து 1 ரூபாய் கொடுத்து டீ குடித்து செல்கிறார்கள்.

காதலர் தினத்தில் மகிழ்ச்சியாக இருக்க:

இதுகுறித்து டீ மாஸ்டர் ஜெயக்குமார் கூறியதாவது, இந்த பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பேருந்து பயணிகள் என மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். காதலர் தினத்தை முன்னிட்டு அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் எனது உரிமையாளர் அறிவுறுத்தலின்பேரில் இந்த சலுகை வழங்கப்பட்டு உள்ளது. சுத்தமான பசும்பால் மற்றும் இஞ்சி சேர்த்து சுவையாக தயாரிக்கப்படும் இந்த டீ அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதே எங்களின் ஆசை.

இதையும் படிக்க: காதலை போற்றும் காதலர் தினம்.. எப்படி உருவானது..? இதன் வரலாறு என்ன?

வித்தியாசமாக செய்ய விருப்பம்:

காதல் என்பது வெறும் டீன் ஏஜ் வயதினருக்கோ அல்லது இளைஞர்களுக்கோ மட்டுமே உரித்தானது அல்ல. அது 20 வயது முதல் 80 வயது வரை உள்ள அனைத்து தரப்பினருக்குமானது. நேற்று முன்தினம் சுமார் 150க்கும் மேற்பட்டோர் டீ குடித்து சென்றனர். நேற்று 300 பேரை தாண்டி உள்ளது. இது வெறும் லாபத்திற்காக செய்வது அல்ல. காதலர் தினத்தில் வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற விருப்பமே காரணம் என்று அவர் கூறினார்.

ஆன்லைனில் கேம் விளையாடிய இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழப்பு - என்ன நடந்தது?
இந்தியாவின் முதல் இசைச் சாலை.. 70-80 கி.மீ. வேகத்தில் சென்றால் ‘ஜெய் ஹோ’ இசைக்கும்!
செயற்கை நுண்ணறிவு துறையில் 100 ஆண்டு கால பத்திரங்களை வெளியிட்ட ஆல்பபெட்
பீகாரில் இளைஞரை கடத்தி கட்டாய திருமணம் - பரபரப்பு தகவல்