9 வயது சிறுவனை துரத்தி துரத்தி கடித்த தெருநாய்… ரத்த காயங்களுடன் மருத்துமனையில் அனுமதி – சென்னையில் பரபரப்பு
Stray Dog Attack : சென்னை வானகரம் பகுதியில் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 9 வயது சிறுவனை துரத்தி துரத்தி தெருநாய் கடித்ததில் ரத்த காயங்களுடன் சிறுவன் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். இந்த சம்பவம் தொடர்பாக வானகரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மாதிரி புகைப்படம்
சென்னை, நவம்பர் 4 : தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. குறிப்பாக சிறுவர்களை குறித்து வைத்து தாக்கி வருகிறது. இந்த நிலையில் வானகரம் ஓம் சக்தி நகரில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுவனை துரத்தி துரத்திக் தெருநாய் (Stray Dog) கடித்ததில் ரத்தக் காயங்களுடன் இருந்த சிறுவன் மீட்கப்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். இந்த சம்பவம் தொடர்பாக வானகர காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாய் கடித்து 9 வயது சிறுவன் படுகாயம்
சென்னை வானகரத்தில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை அப்பகுதியில் சுற்றித் திரிந்த தெருநாய் ஒன்று துரத்தி துரத்தி கடித்துள்ளது. இதில் படுகாயமடைந்த சிறுவனை மீட்டு சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வானகரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரித்து வருகின்றனர்.
சென்னையில் பல்வேறு பகுதிகளில் தெருநாய் கடியால் சிறுவர்கள் பாதிக்கப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது. அம்பத்தூர் அருகே வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த 7 வயது சிறுமியை தெருநாய் கடித்து குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்தடுத்த 2 சிறுவர்களை கடித்த தெருநாய்
சென்னை அருகே அம்பத்தூர் பகுதியில் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி தன்மதியை, சாலையில் திரிந்ததெரு நாய் ஒன்று விரட்டியிருக்கிறது. இதனால் பயந்து ஓடிய சிறுமியை, பின் தொடர்ந்து ஓடிய நாய் கடித்து குதறியது. சிறுமியின் சத்தம் கேட்டு அருகில் றுந்தவர்கள் நாயைக் கடித்து சிறுமியைக் காப்பாற்றினர். அவரது உடலில் 12 இடங்களில் காயங்கள் ஏற்பட்டது. இதனையடுத்து சிறுமியை மீட்ட பெற்றோர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
ஆனால் அந்த நாய் அதோடு நிற்கவில்லை. அதே பகுதியைச் சேர்ந்த கவிஸ் என்ற சிறுவனையும் நாய் கடித்தது. காயமடைந்த இரண்டு பேரையும் சென்னை ராஜீவ் காந்தி மருத்துமனையில் அனுமதித்தனர். தற்போது இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தெரு நாய்களால் குழந்தைகள் பாதிக்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது.
தமிழ்நாட்டில் சமீப காலமாக தெருநாய்களால் மக்கள் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. நாய் கடியால் ரேபிஸ் நோய் தாக்கி, உயிரிழப்பு சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில், அதிகரித்து வரும் தெருநாய் தொல்லையை கட்டுப்படுத்த, நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.