Tirupathur: சிறுமியுடன் காதல் சண்டை.. பைக் மெக்கானிக் எடுத்த விபரீத முடிவு!
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே 19 வயது பைக் மெக்கானிக் சிவநந்தன், காதலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தற்கொலை செய்து கொண்டார். அவரது காதலியை, குடும்பத்தினரின் எதிர்ப்பால் சந்திப்பதை நிறுத்த அறிவுரை வழங்கப்பட்டது. ஆனால், மீண்டும் சந்தித்ததால் பெற்றோர் கண்டித்த நிலையில் அவர் விபரீத முடிவை எடுத்தார் என சொல்லப்படுகிறது.

இளைஞர் தற்கொலை
திருப்பத்தூர், செப்டம்பர் 13: திருப்பத்தூர் மாவட்டத்தில் காதலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பைக் மெக்கானிக் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்து ஏலகிரி கிராமம் உள்ளது. இங்குள்ள தடிராமன் ஊராட்சி வட்டத்தை சேர்ந்தவர் சேட்டு. இவரது மகன் சிவநந்தன் ஊட்டியில் உள்ள பைக் ஒர்க்ஷாப் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். 19 வயதான சிவ நந்தன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பி உள்ளூரிலேயே பணி செய்து வந்துள்ளார். இதற்கிடையில் ஜோலார்பேட்டை அருகே இருக்கும் ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை சிவநந்தன் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் அடிக்கடி சந்தித்து தங்கள் காதலை வளர்த்து வந்ததாக சொல்லப்படுகிறது.
அறிவுரை வழங்கிய பெற்றோர்
அதன்படி கடந்த மாதம் ஜோலார்பேட்டை அருகே சிறுமியின் சகோதரிக்கு சொந்தமான ஸ்வீட் கடை ஒன்றில் சிவநந்தன் மற்றும் அவரது காதலி இருவரும் சந்தித்து பேசியுள்ளனர். இதனை கண்காணித்த சிறுமியின் குடும்பத்தினர் சிவநந்தனை அழைத்து பேசியுள்ளனர். அதன்படி, ‘உங்கள் இருவருக்கும் சிறு வயது தான் ஆகிறது. என்னுடைய பெண் நான்காண்டு கால கல்லூரி படிப்பை முடிக்கட்டும். நீயும் வேலையில் சேர்ந்து நல்ல நிலைக்கு வந்த பிறகு இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம். இதற்கிடையில் இருவரும் சந்தித்து பேசுவதை நிறுத்துங்கள்’ என அறிவுறுத்தியதாக சொல்லப்படுகிறது.
Also Read: சினிமாவுக்கு ஆழைத்து செல்லாத கணவர்.. விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட 23 வயது இளம்பெண்..
ஆனால் பெற்றோரின் பேச்சை கேட்காமல் மீண்டும் காதலர்கள் இருவரும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சந்தித்து பேசியுள்ளனர். அப்போது சிறுமியின் குடும்பத்தினர் உடனடியாக சிவநந்தனின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து போனில் சிவநந்தனை தொடர்பு கொண்ட அவரது பெற்றோர் சிறுமியை சந்தித்தது பற்றி கண்டித்துள்ளனர். இதனால் காதலர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பாடு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
விபரீத முடிவு
இப்படியான நிலையில் செப்டம்பர் 11ம் தேதி இரவு வீட்டில் சிவநந்தன் தனது செல்போனில் அம்மாவின் புகைப்படத்தை ஸ்டேட்டஸ் ஆக வைத்து அம்மா என்னை மன்னித்துவிடு என தெரிவித்துள்ளார். மேலும் இரவு குடும்பத்தினர் தூங்கிய நிலையில் அதிகாலை எழுந்து பார்த்தபோது வீட்டில் சிவநந்தன் இல்லை. இதனால் பதறிப்போன அவர்கள் அருகே தேடியபோது அங்குள்ள ஒரு மரத்தில் சிவநந்தன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக ஜோலார்பேட்டை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
Also Read: ஆன்லைன் சூதாட்டத்தால் மேலும் தற்கொலை.. ஐடி ஊழியரின் சோக முடிவு!
சம்பவ இடத்திற்கு வந்த காவல் உதவி ஆய்வாளர் கோபி தலைமையிலான போலீசார் சிவநந்தன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சிவநந்தன் தற்கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
(எந்தவொரு பிரச்னைக்கும் தற்கொலை ஒரு தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம். மாநில உதவிமையம் : 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)