படிக்க சொல்லியதால் தாயை கத்தியால் குத்திய மகன் – பரபரப்பு தகவல்
Woman Stabbed at Home : சிதம்பரத்தில் பெண்ணை மர்ம நபர்கள் வீடு புகுந்து கத்தியால் குத்திய வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. படிக்க சொல்லி வற்புறுத்தியதால் மகனே தன் தாயை கொலை செய்ய முயன்றது காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

கத்தியால் குத்தப்பட்ட கோமதி
சிதம்பரம், அக்டோபர் 22: கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் (Chidambaram) கடந்த அக்டோபர் 21, 2025 அன்று நடந்த ஒரு கொடூர சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திடீரென வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் ஒரு பெண்ணை கழுத்தில் கத்தியால் குத்தி விட்டு தப்பியோடியுள்ளனர். காயமடைந்த பெண் தற்போது உயிர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. பெற்ற மகனே அவரது தாயை கத்தியால் குத்தியது காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தாய் தொடர்ந்து படிக்க சொல்லி வற்புறுத்தியதால் அவரது மகன் இந்த முடிவை எடுத்ததாக அதிர்ச்சி தகவல் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
என்ன நடந்தது?
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள சின்னசெட்டித்தெருவைச் சேர்ந்தவர் நடராஜன் இவர் ஒரு வங்கியில் நகை பரிசோதகராக பணியாற்றி வருகிறார். அவரது மனைவி கோமதி வீட்டில் இருந்த நிலையில், அக்டோபர் 21, 2025 அன்று இரவு மர்ம நபர்கள் அவர் வீட்டின் பின் வாசல் வழியாக வந்து திடீரென கோமதியை தாக்கினர். அதில் ஒருவர் கோமதியை கழுத்தில் கத்தியால் குத்தியுள்ளார். இதில் கோமதி ரத்த வெள்ளத்தில் தரையில் மயங்கி விழுந்துள்ளார். அவரை தாக்கிய இருவரும் உடனடியாக அப்பகுதியை விட்டு தப்பி ஓடினர்.
இதையும் படிக்க : கடலூரில் இடி தாக்கி 4 பெண்கள் பலி… விவசாய நிலத்தில் வேலை பார்த்தபோது நேர்ந்த சோகம்
கோமதியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு உடனடியாக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக அப்பகுதி மக்களிடையே விசாரணை மேற்கொண்டார். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
மகனே தாயைக் கத்தியால் குத்திய சம்பவம்
இந்த நிலையில் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் கோமதியின் மகனே தனது தாயை கத்தியால் குத்தியது தெரிய வந்திருக்கிறது. ஏற்கனவே நன்றாக படிக்கும் தன் மகனை, கோமதி மேலும் நன்றாக படிக்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது 14 வயது மகன் தாயின் தொல்லை தாங்க முடியாமல் இந்த முடிவை எடுத்திருக்கிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிக்க : நடத்தையில் சந்தேகம்.. மனைவியை கொலை செய்த கணவன்!
தற்போது படுகாயமடைந்த கோமதி உடனடியாக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவர்கள் அவரது நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகத் தெரிவித்துள்ளனர். மேலும் கோமதியின் மகனை தற்போது கைது செய்து விசாரித்து வருகின்றனர்.