Virat Kohli Test Records: உலகம் ஒருபோதும் மறக்காது! விராட் கோலி டெஸ்ட் போட்டியில் படைத்த சாதனைகள்!

Virat Kohli's Test Retirement: விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதை அடுத்து, அவரது அசாதாரண சாதனைகளை இக்கட்டுரை பட்டியலிடுகிறது. அதிக டெஸ்ட் வெற்றிகள், அதிக மதிப்பீட்டு புள்ளிகள், கேப்டனாக அதிக டெஸ்ட் ரன்கள், அதிக இரட்டை சதங்கள் மற்றும் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய கேப்டன் என பல்வேறு சாதனைகளைப் படைத்த கோலியின் அற்புதமான டெஸ்ட் பயணம் இங்கு விளக்கப்பட்டுள்ளது.

Virat Kohli Test Records: உலகம் ஒருபோதும் மறக்காது! விராட் கோலி டெஸ்ட் போட்டியில் படைத்த சாதனைகள்!

விராட் கோலி

Published: 

12 May 2025 15:37 PM

இந்திய அணியின் நட்சத்திர விராட் கோலி (Virat Kohli) டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். கடந்த 2025 மே 10ம் தேதி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற விரும்புவதாக விராட் கோலி பிசிசிஐயிடம் தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது. கோலி தனது ஓய்வு முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கேட்டு கொண்டது. இதை தொடர்ந்து, 2025 மே 11ம் தேதியான நேற்று பிசிசிஐ (BCCI) அதிகாரி ஒருவரும் விராட் கோலியுடன் இதுகுறித்து நீண்ட நேரம் பேசியுள்ளார். இந்தநிலையில், இன்று அதாவது 2025 மே 12ம் தேதி தனது ஜெர்சி எண்ணான 269 என்று எழுதி சைனிங் ஆப் என குறிப்பிட்டு ஓய்வை அறிவித்தார். இந்தநிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி படைத்த முறியடிக்க முடியாத சாதனையை பற்றி தெரிந்துகொள்வோம்.

அதிக டெஸ்ட் வெற்றிகள்:

இந்திய அணிக்காக அதிக டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய கேப்டன் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். கடந்த 2014 முதல் 2022 வரை 68 டெஸ்ட் போட்டிகளுக்கு தலைமை தாங்கி 40 போட்டிகளில் வெற்றியை தேடி தந்துள்ளார். விராட் கோலியை தவிர, வேறு எந்த ஒரு இந்திய கேப்டனும் 30 டெஸ்ட் போட்டிகளில் கூட இந்திய அணிக்கு வெற்றியை தேடி தந்தது கிடையாது. எம்.எஸ்.தோனி 60 டெஸ்ட் போட்டிகளில் 27 வெற்றிகளைப் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார்.

அதிக மதிப்பீட்டு புள்ளிகள்:

ஐசிசி ஆண்கள் டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் விராட் கோலி மட்டுமே ஆவார். இவர் கடந்த 2018ம் ஆண்டு 935 மதிப்பீட்டு புள்ளிகளை பெற்றார். இந்த சாதனையை இதுவரை எந்தவொரு இந்திய வீரர் படைத்தது இல்லை. அவரது சாதனை இன்னும் அப்படியே உள்ளது.

கேப்டனாக அதிக டெஸ்ட் ரன்கள்:

இந்திய கேப்டனாக டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர் பட்டியலில் விராட் கோலி 5864 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். இவருக்கு பிறகு எம்.எஸ்.தோனி 60 போட்டிகளில் 3454 ரன்கள் எடுத்து 2வது இடத்தில் உள்ளார்.

அதிக இரட்டை சதங்கள்:

டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக இரட்டை சதங்கள் அடித்த இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ஆவர். தனது 14 ஆண்டுகால டெஸ்ட் வாழ்க்கையில் 7 இரட்டை சதங்களை அடித்துள்ளார். இந்த பட்டியலில் வீரேந்தர் சேவாக் 6 இரட்டை சதங்களுடன் 2வது இடத்தில் உள்ளார்.

முதல் ஆசிய கேப்டன்:

ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய கேப்டன் விராட் கோலி ஆவார். 2018-19 ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் நான்கு போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று இந்திய அணி வரலாறு படைத்தது.