Asia Cup 2025: மீண்டும் கழட்டிவிடப்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர்.. கேள்வி எழுப்பிய ரசிகர்கள்.. பிசிசிஐ விளக்கம்..!
Shreyas Iyer Snubbed: 2025 ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் இல்லாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறப்பான ஐபிஎல் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி செயல்திறன் இருந்தும் அவர் தேர்வு செய்யப்படவில்லை. தேர்வாளர் அஜித் அகர்கர், இது துரதிர்ஷ்டவசமானது எனவும், ஐயர் தனது வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும் எனவும் விளக்கியுள்ளார்.

2025 ஆசிய கோப்பைக்கான சூர்யகுமார் யாதவ் (SuryaKumar Yadav) தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணி (Indian Cricket Team) அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் ஐயருக்கு (Shreyas Iyer) வாய்ப்பும் வழங்கப்படவில்லை. அதேபோல், ரிசர்வ் வீரர்களின் பட்டியலிலும் ஷ்ரேயாஸ் ஐயர் சேர்க்கப்படவில்லை. தேர்வாளர்களின் இந்த முடிவு கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியையும், ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதற்கு காரணம், ஷ்ரேயாஸ் ஐயரின் சமீபத்திய செயல்திறன் சிறப்பாக இருந்தபோது, ஏன் இடம் பெறவில்லை என்ற கேள்வி எழுந்தது. இந்தநிலையில், பத்திரிகையாளர் சந்திப்பின் போது ஷ்ரேயாஸ் ஐயரை தேர்வு செய்யாததற்கான காரணத்தை இந்தியா கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் விளக்கினார்.
ஷ்ரேயாஸ் ஐயருக்கு ஏன் இடம் கிடைக்கவில்லை?
– 600+ Runs.
– 50.33 Average.
– 175.07 Strike Rate.Shreyas Iyer has putting in one of the finest Performance in IPL History in 2025 but not even in the Stand-By list for Asia Cup is a sad story for all the hardwork. 💔 pic.twitter.com/ojcLnUpBwN
— Johns. (@CricCrazyJohns) August 19, 2025
ஐபிஎல் 2025 சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு தலைமை தாங்கிய ஷ்ரேயாஸ் ஐயர், அவரது அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார். 2025 ஐபிஎல் சீசனில் ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டன்ஷி மட்டுமல்லாது, பேட்டிங்கிலும் அற்புதமாக செயல்பட்டார். இதன் காரணமாக, அவரது அணிக்காக அதிக ரன்கள் எடுத்த வீரராகவும் இருந்தார். ஷ்ரேயாஸ் ஐயர் ஐபிஎல் 2025 சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக 17 போட்டிகளில் 50.33 சராசரியுடன் 604 ரன்கள் எடுத்தார்.




இது தவிர, ஐயர் 2025 சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணிக்காக முக்கிய பங்கு வகித்தார். இந்தப் போட்டியும் துபாயில் நடைபெற்றது. இங்குதான், தற்போது ஆசியக் கோப்பை 2025 போட்டியும் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில், இந்தியாவுக்காக அதிக ரன்கள் எடுத்த வீரராகவும், இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்லவும் காரணமாகவும் இருந்தார். இப்படியான குறிப்பிடத்தக்க சாதனைகள் இருந்தபோதிலும், 2025 ஆசியக் கோப்பையில் ஷ்ரேயாஸ் ஐயர் கவனிக்கப்படாமல் போனது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதுபோன்ற சூழ்நிலையில், இந்திய அணியின் தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர், ஷ்ரேயாஸ் ஐயரை அணியில் சேர்க்காததற்கான காரணத்தை வெளிப்படுத்தினார். அதில், ”ஷ்ரேயாஸ் ஐயர் அணியில் இடம் பெறாமல் போனது துரதிர்ஷ்டவசமானது. அது அவருடைய தவறோ, எங்களுடைய தவறோ அல்ல. ஷ்ரேயாஸ் தனது வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டியிருக்கும்” என்று கூறினார். தேர்வுக் குழு இந்த கடினமான முடிவை பல ஆலோசனைகளுக்கு பிறகு எடுத்துள்ளது என்பது அகர்கரின் கூற்றிலிருந்து தெளிவாகிறது. ஆனால் ஐயரின் திறமை மற்றும் பங்களிப்பு மீண்டும் மறுக்கப்படுகிறதோ என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழாமல் இல்லை.
ALSO READ: சூர்யாகுமார் யாதவ் கேப்டன்..! கில்லுக்கு வாய்ப்பு.. 2025 ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
காத்திருக்கும் ஷ்ரேயாஸ் ஐயர்:
ஷ்ரேயாஸ் ஐயர் இதுவரை இந்திய அணிக்காக 51 டி20 போட்டிகளில் விளையாடி, 30.66 சராசரியாக 1104 ரன்கள் எடுத்துள்ளார். ஷ்ரேயாஸ் ஐயர் கடைசியாக கடந்த 2023ம் ஆண்டு இந்தியாவுக்காக தனது கடைசி டி20 போட்டியில் விளையாடினார். அதன் பிறகு, ஷ்ரேயாஸ் ஐயர் டி20 அணியில் இடம் பிடிக்க போராடி வருகிறார். 2024 டி20 உலகக் கோப்பையில் கூட இடம் பெற முடியவில்லை. இப்போது ஆசிய கோப்பையிலும் இடம் பெறும் வாய்ப்பை இழந்துள்ளார்.