Shubman Gill: பாகிஸ்தான் ஜிந்தாபாத்.. சுப்மன் கில்லை அலறவிட்ட ரசிகர்!
இந்திய கிரிக்கெட் கேப்டன் சுப்மன் கில்லை சந்தித்த ரசிகர் ஒருவர் கைகுலுக்கியபின் 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என கோஷமிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. கில்லின் அமைதியான எதிர்வினை சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் விளையாட்டு உறவுகளில் நிலவும் பதற்றத்திற்கு மத்தியில் இந்த சம்பவம் முக்கியத்துவம் பெறுகிறது.

சுப்மன் கில்
இந்திய ஆடவர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தலைவர் சுப்மன் கில்லை, ரசிகர் ஒருவர் சந்தித்து, அவருடன் கைகுலுக்கிய பிறகு “பாகிஸ்தான் ஜிந்தாபாத்” என்று கூறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இப்படியான நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டிக்கு முன்னதாக அடிலெய்டில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் வெளியில் சென்றார். கருப்பு ஹூடி மற்றும் வெளிர் நீல நிற ஜீன்ஸ் அணிந்த கில்லை சந்தித்த ஒரு ரசிகர் அவரை கைகுலுக்க அணுகினார். அவரிடம் சுப்மன் கில் கையை நீட்ட பாகிஸ்தான் ஜிந்தாபாத் என தெரிவித்தார். இதனைக் கேட்டு ஒருகணம் கில் திகைத்து போய் நின்றார். ஆனால் அந்த ரசிகரின் கையை தட்டி விடவோ, அல்லது முகத்தில் எதிர்வினைகளையோ காட்டவில்லை. நிலைமையை அமைதியாக கையாண்டார்.
இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தைத் தூண்டியுள்ள நிலையில், அந்த வீடியோவில் கேப்டன் சுப்மன் கில் அமைதியாகவும், பெரிய எதிர்வினைகள் ஆற்றாதது பற்றியும் பலரும் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
Also Read: ஒரு தொடரில் அதிக ரன்கள்.. மாபெரும் சாதனையை படைத்த சுப்மன் கில்..!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
A Pakistani fan met Shubman Gill in Adelaide and said, “Pakistan Zindabad.” pic.twitter.com/sfoqpeLOi0
— Sheri. (@CallMeSheri1_) October 22, 2025
கடந்த ஏப்ரல் மாதம் காஷ்மீர் மாநிலம் பகல்ஹாமில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு இந்தியா – பாகிஸ்தான் உறவில் அனைத்து துறைகளிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக விளையாட்டு துறையில் இது மிகப்பெரிய அளவில் எதிரொலித்தது. சமீபத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் 3 முறை மோதிய நிலையில் போட்டி முடிந்த பிறகு இந்திய அணி வீரர்கள் பகல்ஹாம் தாக்குதலை கண்டித்து பாகிஸ்தான் வீரர்களுடன் கை கொடுக்க மறுத்தது பெரும் சர்ச்சைகளை கிளம்பியது.
இதே போல பிற விளையாட்டுகளிலும் இந்தியா – பாகிஸ்தான் இடையே போட்டி நடைபெறும் போது கைகுலுக்க மறுத்த சம்பவம் நடைபெற்றது. இந்த நிகழ்வுகள் ரசிகர்களிடையே மிகப்பெரிய விவாதத்தை தூண்டிய நிலையில் தற்போது சுப்மன் கில்லிடம் ரசிகர் ஒருவர் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என தெரிவித்துள்ளது மிகப்பெரிய விவாதமாக மாறியுள்ளது.
Also Read: ரோஹித் களத்தில் அசிங்கமாக திட்டினாலும்.. ஹிட் மேன் கேப்டன்சி குறித்து கில் ஓபன் டாக்!
ஆஸ்திரேலியாவுடனான முதல் ஒருநாள் போட்டியில் தோல்வியடைந்த பிறகு இரண்டாவது போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் கேப்டன் சுப்மன் கில் இருப்பதால் ரசிகரின் செயலை பெரிதாக கண்டு கொள்ளவில்லை என கிரிக்கெட் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.