FIFA World Cup 2026: விதிகளை மீறிய நேபாள கால்பந்து அணி.. இடைநீக்கம் செய்த ஃபிஃபா.. காரணம் என்ன?
Nepal Football Team Ban: இடைநீக்கக் காலத்தில், நேபாள கால்பந்து அணி மற்றும் அதன் உறுப்பினர்கள் அல்லது அதிகாரிகள் எவரும் ஃபிஃபா மற்றும் AFC-யின் எந்தவொரு மேம்பாட்டுத் திட்டங்கள், படிப்புகள் அல்லது பயிற்சிகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று ஃபிஃபா தெளிவுபடுத்தியுள்ளது.
2026 ஃபிஃபா உலகக் கோப்பையானது (FIFA World Cup 2026) வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், 3ம் தரப்புத் தலையீடு தொடர்பான ஃபிஃபா விதிகளை மீறியதற்காக, சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (FIFA), அகில நேபாள கால்பந்து சங்கத்தை (ANFA) உடனடியாக இடைநீக்கம் செய்துள்ளது. நேபாள கால்பந்தின் நிர்வாகம் தொடர்பான நீண்டகால சர்ச்சையைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, நேபாளத்தின் தேசிய விளையாட்டு மன்றம் அகில நேபாள கால்பந்து சங்கத்தை (ANFA) 3 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்தது. இருப்பினும் அந்த முடிவு பின்னர் திரும்பப் பெறப்பட்டது. ஃபிஃபா சட்ட விதிகளின் 14-வது பிரிவின், 1(i) மற்றும் 3-வது பத்திகளின் கீழ் மூன்றாம் தரப்பு தலையீடு தொடர்பான விதிகளை மீறியதன் காரணமாக, அகில நேபாள கால்பந்து சங்கத்தை (ANFA) உடனடியாக இடைநீக்கம் செய்ய மன்றத்தின் செயற்குழு முடிவு செய்துள்ளதாக ஃபிஃபா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ALSO READ: சிறுவயதில் தந்தை மரணம்.. பெயிண்ட் அடித்து வாழ்க்கை ஓட்டம்.. கால்பந்தில் எட்ஜெட் கால் வைத்த கதை!
இடைநீக்கத்தால் என்ன பின்னடைவு..?
ஃபிஃபா சுற்றறிக்கையின்படி, ANFA அமைப்பானது, ஃபிஃபா சட்ட விதிகளின் 13வது பிரிவின் கீழ் தனது அனைத்து உறுப்பினர் உரிமைகளையும் நேற்று அதாவது 2026 ஜூன் 24ம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை இழந்துள்ளது. இதன் விளைவாக, ANFA பிரதிநிதிகளும் கிளப் அணிகளும் தங்களது இடைநீக்கம் நீக்கப்படும் வரை எந்தவொரு சர்வதேசப் போட்டியிலும் பங்கேற்க முடியாது.




இந்தத் தடையின் காரணமாக, நேபாளத்தின் தேசிய அணிகளும் கழகங்களும் இனி ஃபிஃபா மற்றும் ஆசிய கால்பந்து கூட்டமைப்பு (AFC) ஏற்பாடு செய்யும் எந்தப் போட்டிகளிலும் பங்கேற்க முடியாது. மேலும், அகில நேபாள கால்பந்து சங்கம் (ANFA), அதன் உறுப்பு சங்கங்கள் மற்றும் அதிகாரிகள் இனி ஃபிஃபா மற்றும் AFC-யிடமிருந்து நிதி உதவியைப் பெற மாட்டார்கள்.
இதுமட்டுமின்றி, இந்த இடைநீக்கக் காலத்தில், நேபாள கால்பந்து அணி மற்றும் அதன் உறுப்பினர்கள் அல்லது அதிகாரிகள் எவரும் ஃபிஃபா மற்றும் AFC-யின் எந்தவொரு மேம்பாட்டுத் திட்டங்கள், படிப்புகள் அல்லது பயிற்சிகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று ஃபிஃபா தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், இந்த இடைநீக்கம் அமலில் இருக்கும் வரை, சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் ANFA அல்லது அதன் அணிகளுடன் எந்தவொரு விளையாட்டுத் தொடர்பையும் கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
3 மாதமும் முழு தடையா..?
அடுத்த ஃபிஃபா மாநாட்டிற்கு முன்பு எந்த நேரத்திலும், கவுன்சில் செயற்குழு அல்லது ஃபிஃபா கவுன்சில் இந்தத் தடையை நீக்க முடிவு செய்யலாம் என்று ஃபிஃபா மேலும் கூறியுள்ளது. அவ்வாறு நடந்தால், சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் தகவல் தெரிவிக்கப்படும்.
ALSO READ: சிறுவயதில் தந்தை மரணம்.. பெயிண்ட் அடித்து வாழ்க்கை ஓட்டம்.. கால்பந்தில் எட்ஜெட் கால் வைத்த கதை!
உறுப்பு சங்கங்களின் பொறுப்புகளைக் கையாளும் ஃபிஃபா சட்ட விதிகளின் 14வது பிரிவின்படி, அரசியல்வாதிகள் அல்லது மூன்றாம் தரப்பினரின் செல்வாக்கு இருந்தாலும் கூட, கடமைகளை மீறுவது தண்டனைக்குரியதாகும். இதன் கீழ், ஒவ்வொரு உறுப்பு சங்கமும் அதன் உறுப்பினர்களின் எந்தவொரு பெரும் அலட்சியம் அல்லது வேண்டுமென்றே செய்யும் தவறுகளுக்கும் ஃபிஃபா அதிரடி இடைநீக்கத்தை அறிவிக்கும்.