சிங்கம் இறங்குனா… ஐபிஎல் போட்டிகளுக்காக தீவிர வலைபயிற்சியில் தோனி – வைரல் வீடியோ
MS Dhoni Begins Training : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான எம்.எஸ்.தோனி ஐபிஎல் போட்டிகளுக்காக தீவிர வலைபயிற்சியில் இறங்கியுள்ளார். இது தொடர்பான வீடியோவை வெளியிட்ட சிஎஸ்கே அணி, ஒவ்வொருமுறையும் அவர் பேட் பிடிக்கும்போது ரசிகர்களுக்கு விருந்து தான் என குறிப்பிட்டுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணியின் நட்சத்திர வீரரான மகேந்திர சிங் தோனி (Mahendra Singh Dhoni), ஐபிஎல் 2026 சீசனை முன்னிட்டு மீண்டும் நெட்ஸ் பயிற்சியை தொடங்கியுள்ளார். ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற அவரது பேட்டிங் பயிற்சியின் காணொளியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளது. இதுகுறித்து தனது பதிவில், ஒவ்வொரு முறையும் அவர் பேட் பிடிக்கும் போது அது ஒரு ரசிகர்களுக்கு விருந்து தான். இது என்ன நேரம் என்பது உங்களுக்குத் தெரியும்” என்ற கேப்சனுடன் அந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
44 வயதான தோனி, இந்த ஆண்டின் ஐபிஎல் தொடருக்காக தீவிரமாக தயாராகி வருகிறார். ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ், இந்த சீசனில் 6வது முறையாக கோப்பையை கைப்பற்றும் இலக்குடன் களமிறங்குகிறது. அணியின் தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், லோக்கல் கிரிக்கெட்டில் சிறப்பான ஃபார்மில் இருப்பினும், அணியின் முக்கிய முகமாக தோனியே இருந்து வருகிறார்.
இதையும் படிக்க : T20 World Cup 2026: இது நடந்தால் உலகக் கோப்பையில் இருந்து விலகுவோம்.. மொஹ்சின் நக்வி அதிர்ச்சி தகவல்!
எம்.எஸ்.தோனி பயிற்சி செய்யும் வீடியோ
A treat, every time he bats 🥳✨
Superfans, you know what time it is 🔜🦁#WhistlePodu
🎥 : Jharkhand cricket association pic.twitter.com/VY6okLqVVC— Chennai Super Kings (@ChennaiIPL) January 26, 2026
கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் கடைசி இடத்தையே பிடித்தது. அந்த அணி விளையாடிய 14 போட்டிகளில் வெறும் 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி கிடைத்தன. அந்த சீசனில் தோனி 13 இன்னிங்ஸ்களில் 196 ரன்கள் மட்டுமே எடுத்தார். சராசரி 24.50, ஸ்ட்ரைக் ரேட் 135.17 ஆக இருந்தது. அதிகபட்சமாக 30 நாட் அவுட் என்ற ஸ்கோர் தான் அவரின் சிறந்த பங்களிப்பாக இருந்தது. காயம் காரணமாக ருதுராஜ் கெய்க்வாட் விளையாட முடியாத போது, தோனி மீண்டும் கேப்டனாக அணியை வழிநடத்தினார். அது அவரது ரசிகர்களுக்கு ட்ரீட்டாக இருந்தது.
சஞ்சு சாம்சன் வருகையால் தோனியின் எதிர்காலம் கேள்விக்குறி?
இந்நிலையில், இந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் சென்னை அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார், இதனால் எம்.எஸ். தோனியின் எதிர்காலம் குறித்து ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வட்டாரங்களில் விவாதம் எழுந்துள்ளது. இருப்பினும், ஐபிஎல் வரலாற்றில் மிகச் சிறந்த வீரர்களில் ஒருவராக கருதப்படும் தோனி, இதுவரை 278 போட்டிகளில் 5,439 ரன்கள் குவித்துள்ளார். 242 இன்னிங்ஸ்களில் சராசரி 38.80, ஸ்ட்ரைக் ரேட் 137.45 என 24 அரை சதங்களுடன் 84 நாட் அவுட் என்ற அவரது சாதனை குறிப்பிடத்தக்கது.
கடந்த சீசனில், இளம் வீரர்களான டிவால்ட் ப்ரெவிஸ், ஆயுஷ் மாத்ரே ஆகியோர் இடம்பெற்றிருந்தது சென்னை அணிக்கான முக்கியமான சாதக அம்சமாக இருந்தது. மேலும், ஐபிஎல் 2026 ஏலத்தில் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த ஆல் ரவுண்டர் பிரஷாந்த் வீர் மற்றும் ராஜஸ்தான் விக்கெட் கீப்பர் கார்த்திக் சர்மா ஆகியோரை தலா 14.20 கோடி ரூபாய்க்கு வாங்கி, ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக விலைக்கு வாங்கப்பட்ட அன்கேப்டு வீரர்கள் என்ற சாதனையை சென்னை அணி படைத்துள்ளது.
இதையும் படிக்க : India vs Pakistan: விரைவில் இந்தியா – பாகிஸ்தான் இருதரப்பு தொடரா? ராஜீவ் சுக்லா பதில்!
இந்த சீசனுக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எம்.எஸ். தோனி, ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, டிவால்ட் ப்ரெவிஸ், ஆயுஷ் மாட்ரே, உர்வில் படேல், பிரஷாந்த் வீர், கார்த்திக் சர்மா உள்ளிட்ட பல நட்சத்திர மற்றும் இளம் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். அனுபவமும் இளமையும் கலந்த இந்த அணியுடன், ஐபிஎல் 2026ல் சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுமா என்பதே ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.