Ind vs Eng 1st Test: இங்கிலாந்துக்கு எதிராக 6 கேட்சுகள் மிஸ்.. இளம் வீரர்களுக்கு ஆதரவாக பேசிய பும்ரா!

Jasprit Bumrah on Dropped Catches: இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில், இந்திய அணி பீல்டிங்கில் பல கேட்சுகளை தவறவிட்டது. இதனால் ஏற்பட்ட பின்னடைவு குறித்து ஜஸ்பிரித் பும்ரா பேசியுள்ளார். அவர் தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தினாலும், அணியின் இளம் வீரர்கள் மீது அதிக அழுத்தம் கொடுக்காமல், அவர்களின் முயற்சிகளைப் பாராட்டி, விளையாட்டின் ஒரு பகுதியாக இதை ஏற்றுக் கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார். இந்திய அணியின் கவனம் தற்போது ஆட்டத்தில் முன்னேற்றம் காண்பதில் உள்ளது.

Ind vs Eng 1st Test: இங்கிலாந்துக்கு எதிராக 6 கேட்சுகள் மிஸ்.. இளம் வீரர்களுக்கு ஆதரவாக பேசிய பும்ரா!

ஜஸ்பிரித் பும்ரா

Published: 

23 Jun 2025 18:37 PM

 IST

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான (Ind vs Eng 1st Test) முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் உள்ள ஹெடிங்லி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில் ஜெய்ஸ்வால், கில் மற்றும் ரிஷப் பண்ட் (Rishabh Pant) சதத்தின் உதவியுடன் 471 ரன்கள் குவித்தது. இதையடுத்து, முதல் இன்னிங்ஸ் விளையாடிய இங்கிலாந்து அணி 465 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளை இழந்தது. இப்போது, இந்திய அணி 2வது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வந்தாலும், பீல்டிங்கில் படுமோசமாகவே செயல்பட்டது. இந்திய வீரர்கள் முக்கியமான கேட்சுகளை பிடித்திருந்தால், இந்த போட்டியில் இந்திய அணி இன்னும் சிறப்பாகவே செயல்பட்டிருக்கும். இந்தநிலையில் இதுகுறித்து இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா (Jasprit Bumrah) மௌனம் கலைத்துள்ளார்.

இந்திய வீரர்கள் எத்தனை கேட்சுகளை மிஸ் செய்தனர்..?

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்தபோது, இந்திய அணி மொத்தம் 6 கேட்சுகளை விட்டு ஏமாற்றத்தை கொடுத்தது. இதில், 4 கேட்சுகளை பும்ராவின் பந்துகளில் மிஸ் செய்தனர். இது இந்திய அணிக்கு மேலும் பின்னடைவை கொடுத்தது. அதேநேரத்தில், பும்ராவும் புரூக்கை பூஜ்ஜியத்திற்கு ஆட்டமிழக்கச் செய்தார், ஆனால் அந்த பந்து பின்னர் நோ-பால் என்று அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகு, ஜஸ்பிரித் பும்ரா, தனது பந்துவீச்சில் தவறவிட்ட கேட்சுகள் குறித்து வெளிப்படையாக பேசினார். மேலும், இப்போது ஆட்டத்தில் முன்னேற்றம் அடைய எவ்வாறு கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

பும்ரா கூறியது என்ன..?

இந்திய வீரர்கள் கேட்ச் விட்டது குறித்து பேசிய பும்ரா, “கேட்ச் விட்ட அந்த ஒரு நொடி அதிர்ச்சியடைந்தேன். ஆனால், அப்போது நீங்கள் உட்கார்ந்து அதை பற்றி அழ முடியாது. நீங்கள் மனதை உறுதிப்படுத்தி கொண்டு விளையாட்டை தொடர்ந்து விளையாட வேண்டும். கேட்ச் விட்டத்தை என் மனதில் அதிக நேரம் வைத்திருக்க மாட்டேன், அதை உடனடியாக மறந்துவிடுவேன். இப்போது, இந்திய அணியின் விளையாடும் பலரும் புதியவர்கள், இங்கு முதல் முறையாக பந்தை பார்ப்பது கடினம். யாரும் வேண்டுமென்றே கேட்சுகளை விடுவதில்லை. இது விளையாட்டின் ஒரு பகுதி. அவர்கள் விரைவில் இதிலிருந்து கற்றுக்கொள்வார்கள். இதை காரணம் காட்சி அவர்கள் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்த நான் விரும்பவில்லை” என்று தெரிவித்தார்.