India vs Bangladesh: பல கேட்சை விட்டாலும் மேட்சை விடாத இந்தியா.. வங்கதேசத்தை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறிய சூர்யா படை!
India vs Bangladesh Super 4: முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி 19.3 ஓவர்களில் 127 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது.

2025 ஆசியக் கோப்பை (2025 Asia Cup) சூப்பர் 4ன் 4வது போட்டியில் இந்தியா – வங்கதேச அணிகள் (Ind vs Ban) இன்று அதாவது 2025 செப்டம்பர் 24ம் தேதி துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச முடிவு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 75 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 38 ரன்களும் எடுத்திருந்தனர். 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி 19.3 ஓவர்களில் 127 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது.
169 ரன்கள் இலக்கு:
இந்தியாவிற்கு எதிராக 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணியின் தொடக்க வீரர்களாக டான்சித் ஹசனும், சைஃப் ஹசானும் களமிறங்கினர். 2வது வீசிய பும்ரா தொடக்க வீரரான டான்சித் ஹசனை ஒரு ரன்னுக்கு ஆட்டமிழக்கச் செய்ய, சைஃப்வுடன் பர்வஸ் ரன் வேட்டையை தொடங்கினார். வருண் சக்ரவர்த்தி ஐந்தாவது ஓவரில் வந்து மூன்று பவுண்டரிகள் மற்றும் 13 ரன்கள் கொடுக்க, வங்கதேச அணி 5 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 35 ரன்கள் எடுத்தது.




ALSO READ: இலங்கையை தோற்கடித்தும் பாகிஸ்தான் சந்தேகம்.. இறுதிப் போட்டியை இன்னும் உறுதி செய்யாத நிலை..!
7வது ஓவர் வீச வந்த குல்தீப் யாதவ் வங்கதேசத்தின் இரண்டாவது விக்கெட் வீழ்த்தி நம்பிக்கை கொடுத்தார். பர்வேஸ் ஹொசைன் எமோன் 19 பந்துகளில் 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து அக்ஸட் படேல் ஒரு விக்கெட்டும், வருண் சக்கரவர்த்தி ஒரு விக்கெட்டும் வீழ்த்த, மறுமுனையில் தொடக்க வீரர் சைஃப் அரைசதம் அடித்து அசத்தினார்.
இறுதிப்போட்டியில் இந்திய அணி:
𝗜𝗻𝘁𝗼 𝗧𝗵𝗲 𝗙𝗶𝗻𝗮𝗹! 👍
The winning run continues for #TeamIndia & we seal a place in the summit clash of the #AsiaCup2025, with a game to spare in #Super4! 🙌 pic.twitter.com/AV40ifvIiv
— BCCI (@BCCI) September 24, 2025
வங்கதேச கேப்டன் ஜாகர் அலியை 5 ரன்களில் குல்தீப் யாதவ் அவுட்டாக, வங்கதேசம் வெற்றி பெற 30 பந்துகளில் 61 ரன்கள் தேவையாக இருந்தது. இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்த, வங்கதேச அணி 19.3 ஓவர்களில் 127 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் 2025 ஆசியக் கோப்பை இறுதிப் போட்டிக்கும் முன்னேறியது.
ALSO READ: ரன் அவுட் மூலம் முடிந்த அபிஷேக் சர்மா அதிரடி.. வங்கதேச அணிக்கு 169 ரன்கள் இலக்கு!
வங்கதேச அணியில் அதிகபட்சமாக சைஃப் ஹசன் ஒரு முனையில் உறுதியாக நின்று 69 ரன்கள் எடுத்து போராடினார். 3வது பேட்ஸ்மேனாக களமிறங்கிய பர்வேஸ் ஹொசைன் 21 ரன்கள் எடுத்தார். இவர்கள் இருவரை தவிர, வேறு எந்த பேட்ஸ்மேனும் இரட்டை இலக்க எண்களை தொடவில்லை.
பாகிஸ்தானா..? வங்கதேசமா..? யார் இறுதிப்போட்டியில் நுழைவார்கள்?
இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகள் சூப்பர் ஃபோர் சுற்றுக்கு தகுதி பெற்றன. இலங்கை தனது இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்து இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழந்து வெளியேறியது. இதற்கிடையில், பாகிஸ்தானையும் தற்போது வங்கதேசத்தையும் வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. நாளை அதாவது 2025 செப்டம்பர் 25ம் தேதி பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் மோதும். இதில், வெற்றி பெறும் அணி வருகின்ற 2025 செப்டம்பர் 28ம் தேதி நடைபெறும் 2025 ஆசிய கோப்பையில் இறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ளும்.