சேப்பாக்கத்தில் சிக்சர் மழை.. சாதனைகளைத் தகர்த்து சரித்திரம் படைத்த இந்திய அணி..
T20 World Cup 2026: தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் ரன் ஏதும் எடுக்காமல் (Ducks) விமர்சனத்திற்குள்ளான அபிஷேக் சர்மா, நேற்று 30 பந்துகளில் 55 ரன்கள் குவித்து விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். பவர்பிளே ஓவர்களில் இந்தியா 80 ரன்களை எட்ட இவரது அதிரடியே முக்கிய காரணமாக அமைந்தது.

சரித்திரம் படைத்த இந்திய அணி
2026 டி20 உலகக்கோப்பையின் சூப்பர் 8 சுற்றில், தென்னாப்பிரிக்காவிடம் சந்தித்த சரிவிலிருந்து பீனிக்ஸ் பறவையாய் மீண்டெழுந்த இந்திய அணி, ஜிம்பாப்வேக்கு எதிரான மிக முக்கியமான ‘சூப்பர் 8’ போட்டியில், நேற்று ஒரு இமாலய வெற்றியைப் பதிவு செய்தது. இந்திய பேட்ஸ்மேன்கள் ருத்ரதாண்டவம் ஆடி 256/4 ரன்களைக் குவித்த நிலையில், 72 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அசத்தினர். இது டி20 உலகக்கோப்பை வரலாற்றிலேயே ஒரு அணியின் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோராகும். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தனது அரையிறுதி வாய்ப்பைத் தக்கவைத்துக் கொண்டதோடு, உலகக்கோப்பை வரலாற்றில் பல பக்கங்களை மாற்றியெழுதியுள்ளது.
இதையும் படிக்க: T20 World Cup: ஜிம்பாப்வேக்கு எதிராக இமாலய வெற்றி.. இந்தியாவின் அரையிறுதி வாய்ப்புகள் என்னென்ன?
டி20 உலகக்கோப்பை வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோர்கள்:
260/6 – இலங்கை vs கென்யா (2007)
256/4 – இந்தியா vs ஜிம்பாப்வே (2026)
254/6 – மேற்கிந்திய தீவுகள் vs ஜிம்பாப்வே (2026)
உலகக்கோப்பை வரலாற்றில் இந்தியாவின் உச்சம்:
நேற்றைய போட்டியில் இந்தியா குவித்த 256/4 ரன்கள் என்பது, டி20 உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் இந்திய அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோர் ஆகும். இதற்கு முன் 2007-ல் இங்கிலாந்துக்கு எதிராக எடுத்த 218/4 ரன்களே இதுவரை இந்தியாவின் அதிகபட்ச சாதனையாக இருந்தது. 19 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த சாதனையை இந்தியா தற்போது முறியடித்துள்ளது.
உலக சாதனைக்கு மிக அருகில்:
டி20 உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு அணி எடுத்த இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். 2007-ல் கென்யாவுக்கு எதிராக இலங்கை எடுத்த 260 ரன்களே முதலிடத்தில் உள்ளது. நேற்றைய போட்டியில் இந்தியா இன்னும் 5 ரன்கள் எடுத்திருந்தால் அந்த உலக சாதனையைத் தகர்த்திருக்கும்.
மைதானத்தை அதிரவைத்த 17 சிக்ஸர்கள்:
ஜிம்பாப்வே பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த இந்திய பேட்ஸ்மேன்கள், மொத்தம் 17 சிக்ஸர்களை விளாசினர். டி20 உலகக்கோப்பை வரலாற்றில் இந்தியாவின் ஒரு இன்னிங்ஸில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்ஸர்கள் இதுவாகும். இன்னும் ஒரே ஒரு சிக்ஸர் அடித்திருந்தால், உலகக்கோப்பை இன்னிங்ஸ் ஒன்றில் அதிக சிக்ஸர்கள் அடித்த அணியாக இந்தியா முதலிடம் பிடித்திருக்கும்.
அபிஷேக் சர்மாவின் அதிரடி மீட்சி:
தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் ரன் ஏதும் எடுக்காமல் (Ducks) விமர்சனத்திற்குள்ளான அபிஷேக் சர்மா, நேற்று 30 பந்துகளில் 55 ரன்கள் குவித்து விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். பவர்பிளே ஓவர்களில் இந்தியா 80 ரன்களை எட்ட இவரது அதிரடியே முக்கிய காரணமாக அமைந்தது.
மிரட்டிய பாண்டியா – திலக் வர்மா ஜோடி:
கடைசி 5 ஓவர்களில் ஹர்திக் பாண்டியா (50*) மற்றும் திலக் வர்மா (44*) ஜோடி ருத்ரதாண்டவம் ஆடியது. இறுதி 30 பந்துகளில் மட்டும் இந்திய அணி 80 ரன்களைக் குவித்து மலைக்க வைத்தது. பாண்டியாவின் அரைசதம் இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தது.
இதையும் படிக்க: T20 World Cup 2026 : ஜிம்பாப்வேவை 72 ரன்கள் வித்தியாத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
நேற்றைய வெற்றி இந்தியாவின் ரன் ரேட்டை கணிசமாக உயர்த்தியுள்ளது. சாதனைகள் ஒருபுறம் இருந்தாலும், மார்ச் 1-ம் தேதி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நடக்கவுள்ள போட்டிதான் இந்தியாவின் அரையிறுதித் தகுதியை உறுதி செய்யும். நேற்றைய அதிரடியை அதே வேகத்துடன் தொடர்ந்தால், இந்திய அணி மீண்டும் உலகக்கோப்பையை ஏந்துவது உறுதி.