IND vs SA T20I series: இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையேயான டி20 போட்டிகளில் வெற்றி நிலவரம்..
T20 World Cup 2026: டி20 உலகக்கோப்பை வரலாற்றில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த 7 போட்டிகளில் இந்தியா 5-ல் வெற்றி பெற்றுள்ளது. இந்த ஆதிக்கம் 2007-ல் டர்பனில் கிடைத்த வெற்றியில் தொடங்கி, 2024ல் நடந்த விறுவிறுப்பான இறுதிப்போட்டி வெற்றி வரை தொடர்ந்து வருகிறது.

IND vs SA டி20 போட்டிகளில் வெற்றி நிலவரம்
கிரிக்கெட்டின் இரு பெரும் சக்திகளாக திகழும் இந்தியாவும், தென்னாப்பிரிக்காவும் வரும் ஞாயிற்றுக்கிழமை (பிப்.22) அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ‘சூப்பர் 8’ சுற்றில் களம்காண உள்ளன. இரு அணிகளுமே 2026 ஐசிசி டி20 உலகக்கோப்பையின் (2026 T20 World Cup) முதல் சுற்றில் தலா நான்கு வெற்றிகளுடன் தோல்வியே சந்திக்காத அணிகளாக இரண்டாம் சுற்றுக்குள் நுழைந்துள்ளன. தொடர்ந்து, நடைபெற உள்ள இந்த சூப்பர் 8 போட்டி அரையிறுதித் தகுதிக்கு மிக முக்கியமானது மட்டுமல்லாமல், 2024 உலகக்கோப்பை இறுதிப்போட்டியின் ஒரு மறுபதிப்பாகவும் (Rematch) கருதப்படுகிறது. அது ஏன் என்பது குறித்து இக்கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிக்க: T20 World Cup 2026: ‘சூப்பர் 8’ விதிமுறை.. ICC-க்கு குவியும் கண்டனங்கள்.. காரணம் என்ன?
இந்தியா: ‘குரூப் ஏ’ பிரிவில் முதலிடம் பிடித்து அகமதாபாத் வந்துள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்துக்கு எதிராக அபார வெற்றிகளைப் பெற்றுள்ளது. இந்தியப் பந்துவீச்சுப் படை யாராலும் வீழ்த்த முடியாத வலிமையுடன் காணப்படுகிறது.
தென்னாப்பிரிக்கா: ‘குரூப் டி’ பிரிவில் ஒரு தோல்வியைக் கூட சந்திக்காமல் வந்துள்ளது. இவர்களது பலம் குயின்டன் டி காக் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோரின் அதிரடி ஆட்டமாகும். நியூசிலாந்து மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தை வீழ்த்தியுள்ள தென்னாப்பிரிக்கா, ஐசிசி தொடர்களில் இந்தியாவின் ஆதிக்கத்திற்கு சவால் விடத் தயாராக உள்ளது.
டி20 சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா கூடுதல் பலத்துடன் திகழ்கிறது.
புள்ளி விவரம்:
| மொத்த போட்டிகள் | 35 |
| இந்தியா வெற்றி | 21 |
| தென்னாப்பிரிக்கா வெற்றி | 13 |
| முடிவில்லை (No result) | 1 |
| டி20 உலகக்கோப்பை H2H மோதல்கள் | IND 5 – 2 SA |
| கடைசி மோதல் (பயிற்சி ஆட்டம்) | IND 30 ரன்களில் வெற்றி (பிப் 2026) |
டி20 சர்வதேச (T20I) வரலாற்றில் சிறந்த சாதனையைத் தன்வசம் வைத்துள்ள இந்தியா, இந்தப் போட்டியில் தெளிவான மனோரீதியில் களம் இறங்குகிறது. 2006ம் ஆண்டு இவ்விரு நாடுகளுக்கும் இடையே நடந்த முதல் போட்டிக்குப் பிறகு, இதுவரை விளையாடப்பட்ட 35 போட்டிகளில் இந்தியா 21 முறை வெற்றி பெற்றுள்ளது; தென்னாப்பிரிக்கா 13 வெற்றிகளைப் பெற்றுள்ளது. ஒரு போட்டி முடிவில்லாமல் (no-result) முடிந்தது.
இதையும் படிக்க: ‘சூப்பர் 8’ சுற்றில் அதிரப்போகும் குரூப்-1.. இந்தியாவுக்கு காத்திருக்கும் சவால்..
டி20 உலகக்கோப்பை வரலாறு:
டி20 உலகக்கோப்பை வரலாற்றில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த 7 போட்டிகளில் இந்தியா 5-ல் வெற்றி பெற்றுள்ளது. இந்த ஆதிக்கம் 2007-ல் டர்பனில் கிடைத்த வெற்றியில் தொடங்கி, 2024ல் நடந்த விறுவிறுப்பான இறுதிப்போட்டி வெற்றி வரை தொடர்ந்து வருகிறது. அந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது. தற்போது வரும் 22ம் தேதி நடைபெற உள்ள சூப்பர் 8 சுற்றும் கூட, 2024 உலகக் கோப்பையின் தொடர்ச்சியாக பார்க்கப்படுகிறது.