Akash Deep: கேன்சருடன் போராடும் சகோதரி.. வெற்றிக்கு பிறகு ஆகாஷ் தீப் எமோஷன்..!
IND vs ENG 2nd Test: இங்கிலாந்துக்கு எதிரான எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் இந்தியாவின் வெற்றியில் ஆகாஷ் தீப் 10 விக்கெட்டுகள் வீழ்த்தி முக்கிய பங்கு வகித்தார். இந்த வெற்றியை தனது புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சகோதரிக்கு அர்ப்பணித்தார். சகோதரியின் போராட்டத்தின் போது அவரை நினைத்து விளையாடினதாகவும், அவரது மகிழ்ச்சிக்காக இந்த வெற்றியை அர்ப்பணிப்பதாகவும் அவர் உருக்கமாகப் பேசினார்.

ஆகாஷ் தீப்
சுனில் கவாஸ்கர், கபில் தேவ், சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட், எம்.எஸ். தோனி போன்ற சிறந்த இந்திய அணியின் கேப்டன்கள் கடந்த 58 ஆண்டுகளில் ஒருமுறை கூட சாதிக்க முடியாத சாதனையை சுப்மன் கில் (Shubman Gill) தலைமையிலான இந்திய அணி இறுதியாக செய்தது. சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணிக் எட்ஜ்பாஸ்டன் ஸ்டேடியத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியை தோற்கடித்தது. இளம் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் (Akash Deep), இந்திய அணி வெற்றியில் பெரும் பங்கு வகித்தார். பும்ரா ஓய்வுக்கு பிறகு இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் (IND vs ENG 2nd Test) போட்டியில் இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்த ஆகாஷ் தீப், மொத்தம் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி வரலாறு படைத்தார். இந்த வெற்றிக்குப் பிறகு ஆகாஷ் தீப் சொன்ன ஒரு விஷயம் இன்னும் சிறப்பானதாக்கியது. தனது சகோதரி புற்றுநோயுடன் போராடி வருவதாகவும், இந்த வெற்றி அவருக்காக மட்டுமே என்றும் ஆகாஷ் தீப் கூறினார்.
இந்திய அணியின் வெற்றிக்குப் பிறகு இந்திய அணியின் அனுபவ டெஸ்ட் வீரரும், இங்கிலாந்தில் பல டெஸ்ட் போட்டிகளில் விளையாடியவருமான சேதேஷ்வர் புஜாராவுடன் ஆகாஷ் தீப்பிடம் ஒரு சிறப்பு நேர்காணலை நடத்தினார். அப்போது தனது சகோதரி கடந்த 2 மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வருவதாகவும், போட்டியின் போது அவரை மீண்டும் மீண்டும் நினைவு கூர்ந்ததாகவும் ஆகாஷ் கூறினார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து புஜாரவிடம் பேசிய ஆகாஷ் தீப் “இதை நான் இன்னும் யாரிடமும் சொல்லவில்லை. இந்த வெற்றியை என் சகோதரிக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன். அவர் கடந்த 2 மாதங்களாக புற்றுநோயுடன் போராடி வருகிறார்.
சகோதரி குறித்து உருக்கமாக பேசிய ஆகாஷ் தீப்:
Family is everything!
Akash Deep dedicates this win to his sister battling cancer. 🙌#SonySportsNetwork #GroundTumharaJeetHamari #ENGvIND #NayaIndia #DhaakadIndia #TeamIndia #ExtraaaInnings pic.twitter.com/teMNeuYLMP
— Sony Sports Network (@SonySportsNetwk) July 6, 2025
என் சகோதரி இப்போது கொஞ்சம் நன்றாக இருக்கிறார், கொஞ்சம் நிலையாக இருக்கிறார். என் சிறப்பான ஆட்டத்தால் என் சகோதரி மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார் என்று நினைக்கிறேன். கடந்த இரண்டு மாதங்களாக என் சகோதரி மனதளவில் நிறைய பாதிக்கப்பட்டுள்ளார். நான் பந்தைப் பிடிக்கும் போதெல்லாம், அவரது முகம் எனக்கு நினைவுக்கு வரும். இதன் காரணமாக, என் சகோதரியின் முகத்தில் மகிழ்ச்சியைக் கொண்டுவர விரும்பினேன். இந்த வெற்றியை அவளுக்கு அர்ப்பணிக்கிறேன்” என்றார்.
எட்ஜ்பாஸ்டனில் ஆகாஷ் தீப் புதிய வரலாறு:
நேற்று அதாவது 2025 ஜூலை 6ம் தேதி எட்ஜ்பாஸ்டன் டெஸ்டின் கடைசி நாளில், இந்திய அணி இங்கிலாந்தை வெறும் 271 ரன்களுக்கு ஆல் அவுட் செய்து, 336 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதன்மூலம், இந்தியா – இங்கிலாந்து அணிக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-1 என சமன் செய்தது. கடைசி நாளில் ஆகாஷ் தீப் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், 2வது இன்னிங்ஸில் மொத்தம் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முன்னதாக, ஆகாஷ் தீப் முதல் இன்னிங்ஸிலும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் காரணமாக தனது பெயரில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது சாதனையைப் பதிவு செய்தார். இங்கிலாந்தில் ஒரு டெஸ்டில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்திய பந்து வீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றார்.