BCCI Awards: டிராவிட், மிதாலிக்கு சிறப்பு கௌரவம்.. பிசிசிஐ விருது பட்டியலில் சுப்மன் கில்..!
BCCI Lifetime Awards: இந்திய மகளிர் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜும் வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற இருக்கிறார். இந்திய கிரிக்கெட்டில் சிறந்த ஆல்ரவுண்டருக்கான லாலா அமர்நாத் விருது மும்பையின் ஆயுஷ் மத்ரேவுக்கும் வழங்கப்பட இருக்கிறது. உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் மும்பை கிரிக்கெட் சங்கம் (எம்சிஏ) கௌரவிக்கப்பட இருக்கிறது.

பிசிசிஐ விருது விழா
கடந்த 2024ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்ற ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு, பிசிசிஐயிடமிருந்து ரூ.125 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த முறையும், இந்திய அணி (Indian Cricket Team) 2026ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை (2026 T20 World Cup) வென்றதன் காரணமாக பிசிசிஐயிடமிருந்து ரூ.131 கோடி பரிசுத்தொகை கிடைத்தது. ஆனால், தற்போதைய இந்திய அணிக்கு வெற்றி அணிவகுப்பை நடத்தும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதேபோல், வீரர்களை பிசிசிஐ கௌரவிக்கவில்லை. இப்போது அதற்கான மேடையை பிசிசிஐ தயார் செய்ய இருக்கிறது. அதாவது, பிசிசிஐ தனது வருடாந்திர விருது வழங்கும் விழாவில் சாம்பியன் அணியை கௌரவிக்க இருக்கிறது. இதனுடன், ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர், வாழ்நாள் சாதனையாளர் விருது உள்ளிட்ட பிற விருதுகளைப் பெறும். வீரர்களும் இந்த விருது வழங்கும் விழாவில் பிசிசிஐ கௌரவம் செய்ய இருக்கிறது. இந்த விருது விழாவானது வருகின்ற 2026 மார்ச் 15ம் தேதி புது டெல்லியில் நடைபெறுகிறது.
ALSO READ: யுவராஜ் சிங்கை நீக்க சொன்னாரா தோனி..? முன்னாள் தேர்வாளர் பரபர பேச்சு!
2025ம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் யார்..?
2025ம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை இந்தியாவின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியின் கேப்டன் சுப்மன் கில் வென்றுள்ளார். இந்தியன் எக்ஸ்பிரஸில் வெளியான ஒரு அறிக்கையின்படி, கடந்த 2025ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் மறக்கமுடியாத ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில், ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருது வழங்கப்பட இருக்கிறது. கேப்டனாக ஆன பிறகு, சுப்மன் கில் இங்கிலாந்தில் தனது முதல் தொடரில் 4 சதங்கள் உட்பட 754 ரன்கள் எடுத்து பல்வேறு சாதனை படைத்தார். கடந்த 2025ம் ஆண்டு ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணிக்கு நல்ல ஆண்டாக அமைந்தது. இருப்பினும், கடந்த 2025ம் ஆண்டு டி20 வடிவத்தில் சுப்மன் கில்லின் செயல்திறன் சிறப்பானதாக இல்லை. டெஸ்ட் மற்றும் ஒருநாள் வடிவங்களிலும் பிரகாசித்த சுப்மன் கில், கடந்த ஆண்டு 3 வடிவங்களிலும் 49 சராசரியுடன் 42 இன்னிங்ஸ்களில் மொத்தம் 7 சதங்கள் மற்றும் 3 அரைசதங்களுடன் 1764 ரன்கள் எடுத்தார்.
ராகுல் டிராவிட் – மிதாலி ராஜூக்கு சிறப்பு கௌரவம்:
முன்னாள் இந்திய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், கர்னல் சி.கே.நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெறுவார். உலக கிரிக்கெட்டின் சிறந்த வீரர்களில் ஒருவரான ராகுல் டிராவிட், பயிற்சியாளராக இந்திய கிரிக்கெட்டுக்கும் மறக்கமுடியாத பங்களிப்புகளைச் செய்துள்ளார். ராகுல் டிராவிட்டின் பயிற்சியின் கீழ், கடந்த 2018 உலகக் கோப்பைக்கு இந்திய 19 வயதுக்குட்பட்ட அணியை கொண்டு சென்றார். அதன் பிறகு, 2021ம் ஆண்டில் ரவி சாஸ்திரிக்கு பிறகு, சீனியர் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட ராகுல் டிராவிட், அவரது பயிற்சியின் கீழ் இந்திய அணியை 2023 ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார். பின்னர், 2024ம் ஆண்டில் டி20 உலகக் கோப்பையின்போது இந்திய அணிக்கு சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தார்.
இதனை தொடர்ந்து, இந்திய மகளிர் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜும் வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற இருக்கிறார். இந்திய கிரிக்கெட்டில் சிறந்த ஆல்ரவுண்டருக்கான லாலா அமர்நாத் விருது மும்பையின் ஆயுஷ் மத்ரேவுக்கும் வழங்கப்பட இருக்கிறது. உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் மும்பை கிரிக்கெட் சங்கம் (எம்சிஏ) கௌரவிக்கப்பட இருக்கிறது.
ALSO READ: இந்திய அணியின் அடுத்த சர்வதேச போட்டி எப்போது..? எந்த அணிக்கு எதிராக விளையாடும்?
ஐசிசி வென்ற அணிகளுக்கு தனி கௌரவம்:
2026 டி20 உலகக் கோப்பை வென்ற அணியுடன், 2025 சாம்பியன்ஸ் டிராபியை வென்ற அணியும் விருது விழாவில் கௌரவிக்கப்பட இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக, 2025ம் ஆண்டில் ஐசிசி கோப்பைகளை வென்ற சீனியர் மகளிர் அணி மற்றும் இந்தியாவின் 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளும் கௌரவம் செய்யப்பட இருக்கிறது.