2025 Asia Cup: 2025 ஆசியக் கோப்பையில் இந்தியா பாகிஸ்தானுடன் மோதல் உறுதி.. பிசிசிஐ சுவாரஸ்ய தகவல்..!

India vs Pakistan: 2025 ஆசியக் கோப்பையில் இந்தியா பங்கேற்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முன்னதாக, அரசியல் காரணங்களால் இந்தப் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால், நிதி நெருக்கடியை கருத்தில் கொண்டு பிசிசிஐ அரசின் அனுமதியைப் பெற்றுள்ளது.

2025 Asia Cup: 2025 ஆசியக் கோப்பையில் இந்தியா பாகிஸ்தானுடன் மோதல் உறுதி.. பிசிசிஐ சுவாரஸ்ய தகவல்..!

2025 ஆசியக் கோப்பை

Published: 

14 Jul 2025 18:41 PM

பல மாதங்களுக்கு பிறகு, 2025 ஆசியக் கோப்பையில் (2025 Asia Cup) இந்தியா விளையாட தயாராக இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதில், மகிழ்ச்சிகரமான செய்தி என்னவென்றால் 2025 ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணியை (India – Pakistan) எதிர்கொள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) இந்திய அரசாங்கத்திடமிருந்து அனுமதி பெற்றுள்ளதாக தெரிகிறது. பல நாடுகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பை 2025 போட்டியானது வருகின்ற 2025 செப்டம்பர் மாதம் நடைபெறுகிறது. இதில், முதல் முறையாக ஐக்கிய அரபு அமீரகம் விளையாட இருப்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

கடந்த 2025 ஏப்ரல் மாதம் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான அரசியல் காரணங்கள் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்தது. இதன் காரணமாக, இந்திய கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் அணிக்கு எதிராக எந்தவொரு போட்டியில் விளையாடக்கூடாது என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் முதல் ரசிகர்கள் வரை சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வந்தனர்.

அனுமதி பெற்ற பிசிசிஐ:

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான அரசியல் காரணங்களுக்காக 2025 ஆசியக் கோப்பையில் இந்திய அணி பங்கேற்காது என கூறப்பட்டது. அதாவது, மத்திய அரசு அனுமதி கொடுக்காமல் இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாடாது என்று பிசிசிஐ தெளிவுபடுத்தியிருந்தது. இந்த நிலைப்பாடு கடந்த 2025 ஜூன் மாதத்தில் கூறப்பட்டது.

இதன்படி, நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போட்டி நடைபெறவில்லை என்றால், மிகப்பெரிய நிதி நெருக்கடி ஏற்படும் என பிசிசிஐயிடம் கோரியது. பிசிசிஐயிடமிருந்து சரியான நேரத்தில் ஒரு முடிவு வேண்டும் என கோரிக்கை வைத்தநிலையில், அதற்கு தேவையான அனுமதியை மத்திய அரசிடம் பெற்றது.

இந்திய அணி தொடர்ந்து விளையாடும்:

முன்னதாக, தேசிய விளையாட்டு ஆளுகை மசோதா விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று அறிவித்த இந்திய விளையாட்டு அமைச்சர் மன்சுக் மாண்டவியா, சர்வதேச போட்டிகளில் இந்தியாவும், பாகிஸ்தானும் தொடர்ந்து விளையாட்டுகளில் மோதிக்கொள்ளும் என்று தெரிவித்தார். இதுகுறித்து பேசியதாவது, “எங்கள் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. கிரிக்கெட், ஹாக்கி அல்லது வேறு எந்த விளையாட்டாக இருந்தாலும், எந்தவொரு சர்வதேச விளையாட்டு நிகழ்விலும் பாகிஸ்தானுடன் விளையாடுவதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.ஆனால், இருதரப்பு ஈடுபாடுகளை பொறுத்தவரை, அரசாங்கத்தின் நிலைப்பாடு அனைவருக்கும் தெரியும்” என்றார்.

2025 ஆசியக் கோப்பையில் இந்தியா பாகிஸ்தானுடன் 2 முறை விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்காலிக அட்டவணையின்படி, வருகின்ற 2025 செப்டம்பர் 5ம் தேதியும், 2025 செப்டம்பர் 12ம் தேதியும் மோத வாய்ப்புள்ளது. 2025 ஆசிய கோப்பைக்கான அட்டவணை திட்டத்தில் ஓமன் மற்றும் ஹாங்காங் உட்பட 8 அணிகள் பங்கேற்க இருந்தது. இருப்பினும், விளையாடும் அணிகளின் இறுதிப் பட்டியல் ஆறாக குறைக்கப்படலாம் என்று நம்பப்படுகிறது.