Aadiperukku: ஆடிப்பெருக்கு நாளில் தாலி மாற்றும்போது கவனிக்க வேண்டியவை!
ஆடிப்பெருக்கு, தமிழர்களின் முக்கியமான விழாவாக உள்ளது. இது ஆடி மாதத்தின் 18வது நாள் கொண்டாடப்படுகிறது. 2025ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி ஆடிப்பெருக்கு விழா வருகிறது. இந்நாளில் பெண்கள் தாலி மாற்றுவது முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. ஆடிப்பெருக்கு நாளில் செய்ய வேண்டியவை பற்றிப் பார்க்கலாம்.

ஆடிப்பெருக்கு (Aadiperukku) தமிழர்களின் வாழ்வில் மிக முக்கியமான நாளாக பார்க்கப்படுகிறது. மற்ற பண்டிகைகள் திதி மற்றும் கிழமைகள் அடிப்படையில் கொண்டாடப்படும் நிலையில் ஆடிப்பெருக்கு மட்டும் தான் ஆடி மாதத்தின் 18 வது நாள் என்ற கணக்கில் கொண்டாடப்படுகிறது. அப்படியாக 2025 ஆம் ஆண்டு ஆடிப்பெருக்கு ஆகஸ்ட் 3ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஆடிப்பெருக்கு என்றாலே பலருக்கும் குறிப்பாக பெண்களுக்கும் தங்களுடைய தாலிக்கயிறை மாற்றிக் கொள்ள வேண்டிய நன்னாள் என்பதுதான் நினைவுக்கு வரும். அதேபோல் சுப காரியங்கள் செய்யக்கூடாத காலம் என குறிப்பிடப்பட்டுள்ள ஆடி மாதத்தின் இந்த நாளில் நாம் என்ன செய்தாலும் அது சுபிட்சமாக விருட்சமாக வளரும் என்பது நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.
ஆனால் ஆடிப்பெருக்கு என்பது நீர்நிலைகளுக்கு நன்றி செலுத்தும் ஒரு நிகழ்வாகும். தமிழ்நாட்டில் பல்வேறு ஆறுகள் ஓடினாலும் இந்த ஆடிப்பெருக்கு காவிரி நதி ஓடும் மக்களுக்கு எப்போதும் விசேஷமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. இப்படியாக ஆடிப்பெருக்கு நாளில் தாலி சரடு அல்லது தாலிக்கயிறு மாற்றிக் கொள்ள வேண்டிய பெண்கள் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி காணலாம்.
Also Read: ஆடிப்பெருக்கு நாள்.. கண்டிப்பாக வழிபட வேண்டிய கோயில் இதுதான்!




பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்
ஆற்றங்கரை அல்லது ஏதேனும் நீர் நிலைகளில் பெண்கள் புனித நீராடி தங்கள் தாலி சரடை மாற்றிக் கொள்வார்கள். திருமணம் ஆன பெண்கள் கழுத்திலும், திருமணமாகாத பெண்கள் இந்த வழிபாட்டை மேற்கொண்டு கையிலும் அந்த மஞ்சள் கயிறை கட்டிக் கொள்ளலாம். நீர்நிலைகளில் அம்மனின் புகைப்படம் அல்லது தேங்காயில் மஞ்சள் பூசி அதனை அம்மனாக பாவித்துக்கொள்ள வேண்டும். பால், பழம், வெற்றிலைப் பாக்கு, சித்ரானங்கள் என அனைத்து வைத்து வழிபட வேண்டும்.
முதல் முறையாக ஆடிப்பெருக்கு கொண்டாடும் தம்பதிகள் தம்பதிகளாக இருந்தால் கணவனே மனைவி கழுத்தில் புதிய சரடை கட்ட வேண்டும்.தாலி மாற்றும்போது வீட்டில் அல்லது நீர்நிலைகள் எதுவாக இருந்தாலும் கிழக்கு திசை நோக்கி அமர வேண்டும். வேறு எந்த திசையிலும் அமர்ந்து தாலி பிரித்து கோர்க்கக்கூடாது. அதேபோல் ஒருமுறை அமர்ந்து விட்டால் முழுவதுமாக முடியும் வரை எழுந்திருக்கக் கூடாது. எப்போதும் எந்த வயதாக இருந்தாலும் தாலி பிரித்து கோர்ப்பதாக இருந்தால் ஒன்று கணவன் அல்லது சுமங்கலி பெண்கள் அருகில் இருக்கும்படி வைத்துக் கொள்ள வேண்டும்.
Also Read: Aadi Perukku Worship: ஆடிப்பெருக்கு நாளில் வீட்டில் வழிபாடு செய்வது எப்படி?
தாலி பிரித்து கோர்ப்பதை மஞ்சள் கயிறாக இருந்தாலும் சரி அல்லது தங்க நகையாக இருந்தாலும் சரி மாற்றிக் கொள்ளலாம். ஒருவேளை கயிறாக இருந்தால் அதனை குப்பையில் போடக்கூடாது. வீட்டில் இருக்கும் செடி, கொடிகள் அல்லது கோயில் இருக்கும் மரத்தில் கட்டிவிடலாம் ஆடிப்பெருக்கு நாளில் ராகு காலம், எமகண்டம் தவிர்த்து சூரிய உதயம் தொடங்கி நண்பகல் 12 மணிக்குள் நல்ல நேரம் பார்த்து தாலி பிரித்துக் கோர்க்கலாம் ஒருவேளை நீங்கள் கருவுற்றிருந்தால் கர்ப்ப காலம் முடியும் வரை தாலி மாற்றக் கூடாது.
(ஆன்மிக நம்பிக்கையின்படி இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் உள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. அதனால் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)