Pachaiamman: பிரச்னையே வாழ்க்கையா இருக்கா? – தீர்வு தரும் பச்சையம்மன் கோயில்!

Tamilnadu Famous Temples: திருவண்ணாமலையில் அமைந்துள்ள பச்சையம்மன் கோவில், பார்வதி தேவியின் தவத்தின் மூலம் உருவானதாகக் கூறப்படுகிறது. சிவபெருமானின் கோபத்தைத் தணிக்கும் பார்வதியின் தியாகத்தின் அடையாளமாக இக்கோவில் விளங்குகிறது. இக்கோவிலின் வரலாறு, சிறப்புகள் மற்றும் தினசரி தரிசன நேரங்கள் பற்றி நாம் காணலாம்.

Pachaiamman: பிரச்னையே வாழ்க்கையா இருக்கா? - தீர்வு தரும் பச்சையம்மன் கோயில்!

பச்சையம்மன்

Published: 

10 Jul 2025 11:18 AM

இறை வழிபாடு மிக்க நாடு என்பது இந்தியாவில் ஒவ்வொரு மூலையையும் பார்த்தாலே வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கும் புரிந்து விடும். ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு பெயரில் பல்வேறு மதங்களில் வழிபாட்டு கடவுள்கள் அருள்பாலித்து கொண்டிருக்கிறார். அதில் இந்து மதத்தைப் பொறுத்தவரை ஆண், பெண் தெய்வங்கள் சரிசமமாம பாவிக்கப்பட்டு பக்தர்களால் வழிபடப்பட்டு வருகிறது. பெண் தெய்வத்தின் சக்திக்கு ஈடு இணையே இல்லை என சொல்லும் அளவுக்கு தாய்க்கு தாயாகவும், தவறு செய்தால் தண்டிக்கும் குருவாகவும் நம்மை பெண் தெய்வங்கள் வழி நடத்துகின்றன. அப்படியான நிலையில் திருவண்ணாமலையில் கோயில் கொண்டிருக்கும் பச்சையம்மன் கோயில் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம். இந்த கோயிலானது தினமும் அதிகாலை 5 மணியில் இருந்து இரவு 9 மணி வரை பக்தர்களின்  தரிசனத்துக்காக நடை சாற்றப்படாமல் திறந்திருக்கும்.

கோயில் உருவான வரலாறு

ஒரு கணவனின் கோபத்தை கட்டுப்படுத்த மனைவி எத்தகைய முயற்சி எடுப்பாளோ, அந்த நிகழ்வின் அடிப்படையில்தான் இந்த பச்சையம்மன் கோயில் ஆனது உருவானதாக சொல்லப்படுகிறது. கைலாயத்தில் சிவன் மீது அன்பு மழை பொழிந்து கொண்டிருந்த பார்வதி அவரின் இரு கண்களையும் மூடினாள். சூரியன் மற்றும் சந்திரன் ஆகியவை சிவனின் இரு கண்கள் என்ற நிலையில் பார்வதி தேவி மூடியதால் இந்த உலகம் இருண்டு போனது.

பிரபஞ்சம் ஸ்தம்பித்ததால் அதிலிருந்து அத்தனை உயிர்களும் பயந்தன. இதனைத் தொடர்ந்து நிலைமையை உணர்ந்து கொண்ட சிவபெருமான் தனது நெற்றிக்கண்ணை திறந்து உலகம் ஒளிமயமாக திகழ வழிவகை செய்தார். இதற்கிடையில் தன் மீதான தவறை பார்வதி உணர்ந்த நிலையில், செய்த தவறுக்காக சிவபெருமான் அவளை நீங்கினார்.

Also Read:மிருகசீரிஷம் நட்சத்திரமா நீங்கள்? – வழிபட வேண்டிய கோயில் இதுதான்!

இதனைத் தொடர்ந்து மீண்டும் சிவபெருமானை அடைவதற்காக பார்வதி தேவி காஞ்சிபுரத்தில் ஒரு ஊசியின் மேல் நின்று நெடுந்தவம் புரிந்தாள். இதற்கிடையில் நீ முழுமையாக என்னை அடைய வேண்டும் என்றால் அனைத்து தலங்களுக்கும் தலைமையாக திகழும் அண்ணாமலையார் கோயிலுக்கு சென்று அங்கு மலையாக நான் அருளும் கலையை பார். பின்னர் என்னிடம் வந்து சேர் என கட்டளையிடுகிறார்.

அதன்படி திருவண்ணாமலை வந்த பார்வதி தங்குவதற்காக வாழை இலைகள் பந்தல் அமைத்து முருகன் கொடுக்கிறான். அங்கு தங்குவதால் பார்வதியின் உடல் வாழை இலையின் நிறத்திற்கு மாறியது. இதன் மூலம் பார்வதி அம்மன் பச்சையம்மன் ஆக மாற்றம் பெறுகிறாள். அந்த இடம் வாழைப்பந்தல் என அழைக்கப்படுகிறது.

பின்னர் பச்சையம்மனாகவே திருவண்ணாமலை அடிவாரத்தை அடையும் பார்வதி அங்கு பத்மாசன கோலத்தில் தவம் இருக்கிறாள். அவளுக்கு தேவ கன்னியர்கள், சப்த முனிவர்கள், நாக தேவர்கள், தேவ ரிஷகள் காவலாக நிற்கின்றனர். தன்னுடைய தவத்தின் மூலம் சிவபெருமானின் கோபத்தை தணிக்கும் பார்வதிக்கு அவர் காட்சி கொடுக்கிறார் இப்படியாக பச்சையம்மன் கோயில் உருவானதாக சொல்லப்படுகிறது. அவரின் தியாகத்தை கண்டு மெய்சிலிர்த்த சிவபெருமான் தன்னுடைய கோபத்திலிருந்து வெளிவந்தததாக சொல்லப்படுகிறது.

Also Read: அடேங்கப்பா.. இந்த முருகன் கோயிலுக்கு இப்படி ஒரு பவரா?

கோயிலின் சிறப்புகள்

திருவண்ணாமலை அடிவாரத்தில் வடகிழக்கு திசையில் வனம், குளம் என மிகவும் ரம்யமான சூழலில் இந்த கோயில் ஆனது அமைந்துள்ளது. கருவறையில் பச்சையம்மன் உடன் கௌதமரிஷி, தேவ கன்னியர்கள், தேவ ரிஷிகள் சிலைகள் உள்ளது. பத்மாசன கோலத்தில் இருக்கும் பச்சையம்மனை இடது புறத்திலிருந்து தலைசாய்த்து பார்த்தபடி மன்னார்சாமியாக சிவபெருமான் காட்சி கொடுக்கிறார். மேலும் முருகன், விநாயகர் ஆகியோர் கருவறைக்கு வெளியே உள்ளனர்.

இந்தக் கோயிலில் நாம் வழிபட்டால் வாழ்க்கையில் நிலவும் அத்தனை பிரச்சினைகளுக்கும் தெளிவான தீர்வு கிடைக்கும் என நம்பப்படுகிறது. இந்த கோயிலில் சிவபெருமான் கூறிய அத்தனை விஷேச தினங்களும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. வாய்ப்பு கிடைத்தால் நீங்களும் ஒருமுறை சென்று வழிபட்டு பலன்களை பெறுங்கள்.

(ஆன்மிக மற்றும் இறை நம்பிக்கை அடிப்படையில் இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ள கோயிலின் தகவல்கள் உள்ளது. இவற்றிற்கு அறிவியல்பூர்வ விளக்கம் கிடையாது)