திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் ரீல்ஸ் எடுக்க தடை.. மீறினால் சட்டநடவடிக்கை பாயும் என எச்சரிக்கை!!
Tiruchendur Murugan temple: சமீபத்தில் திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் பெண் ஒருவர் நடனமாடி ரீல்ஸ் வெளியிட்டிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. தொடர்ந்து, பல்வேறு தரப்பில் இருந்து இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து, கோயில் வளாகத்திற்குள் ரீல்ஸ் எடுக்க தடை விதித்து கோயில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

திருச்செந்தூர் கோயில்
தூத்துக்குடி, நவம்பர் 21: திருச்செந்தூர் (Thiruchendur) ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயில், தமிழ் நாட்டில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் முருக பக்தர்களின் புகழ்பெற்ற ஆன்மிகத் தலமாக திகழ்கிறது. இங்குள்ள கடற்கரையை ஒட்டிய அமைப்பு, பாரம்பரிய சடங்குகள் இவை அனைத்தும் கோயிலின் புனிதத்தையும் பெருமையையும் காட்டுகின்றன. ஆனால், சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் கோயில் நிர்வாகத்தையே கடுமையாகக் கவலைப்பட வைத்தது. கோயிலின் பிரகாரத்தருகே ஒரு பெண் சினிமா பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இச்செயல் பல இந்து அமைப்புகளின் கடுமையான கண்டனத்தையும், பொதுமக்களின் எதிர்ப்பையும் பெற்றதால், கோயில் நிர்வாகம் உடனடியாக கடும் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதையும் படிக்க : சபரிமலைக்கு மாலை அணிகிறீர்களா? கண்டிப்பாக இதை செய்யுங்கள்..
பெண் நடனமாடிய ரீல்ஸ் வைரல்:
சமூக ஊடக ரீல்ஸ்கள் தற்போது இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. ஆனால், இவ்வாறு பொழுதுபோக்குக்காக உருவாக்கப்படும் வீடியோக்கள் கோயில் போன்ற புனிதத் தலங்களில் எடுக்கப்படுகையில் மரியாதை குறைவும், ஆன்மீகத்திற்கான அவமதிப்பும் ஏற்படுகிறது. திருச்செந்தூரில் நடந்த சம்பவமும் அதுதான். சமீபத்தில் ஒரு பெண் பிரகாரத்தின் முன்பு, அதாவது பக்தர்கள் தியானிக்கும் இடத்தில் சினிமா பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் செய்திருப்பது, பலரின் மத உணர்வுகளையும் கலாச்சார நெறிகளையும் காயப்படுத்தியது. இதனால் அந்த ரீல்ஸ் பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் வைரலானது.
கோயில் நிர்வாகம் எச்சரிக்கை:
இதனைத் தொடர்ந்து, கோயில் நிர்வாகம் உடனடியாக கோயில் முழுவதிலும் சினிமா பாடல்களுக்கு நடனம் செய்தல், ரீல்ஸ் எடுப்பது, வீடியோ பதிவு செய்வது ஆகிய அனைத்திற்கும் முற்றிலும் தடைவிதித்துள்ளது. இந்தத் தடை வெறும் அறிவிப்பாக மட்டுமல்லாமல், அதனை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : சபரிமலைக்கு தேங்காயில் நெய் நிரப்பி எடுத்து செல்வதால் என்ன பலன்?
இந்தத் தடை குறித்து பேசிய கோயில் அதிகாரி, “கோயில் வளாகத்தில் குறைந்தது 15 எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. யாரும் அறியாமையால் விதிகளை மீறக்கூடாது. ஆகவே எங்கு சென்றாலும் எச்சரிக்கை தெளிவாகக் கண்ணில் படும்படி வைக்கப்பட்டுள்ளது,” என்று கூறினார். அவர் மேலும், “கோயிலுக்குள் சினிமா பாடல்களுக்கு நடனம் செய்வது, அதை மொபைலில் பதிவு செய்வது ஆகிய அனைத்திற்கு முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனை மீறுபவர்கள் மீது காவல்துறை மூலம் புகார் அளிக்கப்படும்,” என்றும் தெரிவித்தார்.
கோயில் நிர்வாக முடிவுக்கு பாராட்டு:
கோயில் நிர்வாகத்தின் இந்த முடிவு பக்தர்கள், சமூக ஆர்வலர்கள், கலாச்சார பாதுகாப்பு அமைப்புகள் ஆகியோரிடமிருந்து பாராட்டுகளைப் பெற்றுள்ளது. கோயில்கள் ஆன்மீகம், அமைதி, பக்திக்கான பிரதான இடங்களாகும். அவை பொழுதுபோக்குக்கான தளங்களாக மாறக் கூடாது என்பதே சமூகத்தின் ஒருமித்த கருத்து. திருச்செந்தூர் போன்ற வரலாற்றுப் பெருமை வாய்ந்த கோயிலில் இப்படியான ரீல்ஸ் வீடியோக்கள் எடுக்கப்படுவது, கோயிலின் மரபு, ஒழுங்கு, புனிதத்துக்கு கேடு விளைவிக்கும் செயலாகக் கருதப்படுகிறது.