இந்த நாளில் திதி கொடுத்தால் காசிக்கு சென்று தர்ப்பணம் கொடுக்க வேண்டாம்!
Maha Bharani 2025: ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் வரும் மகாளய அமாவாசை மற்றும் மஹா பரணி நாட்களின் முக்கியத்துவத்தை பற்றி காணலாம். கயா அல்லது காசி செல்ல முடியாதவர்களுக்கு மகாபரணி நாள் ஒரு சிறந்த வாய்ப்பாகும்.பித்ரு பக்ஷ காலத்தில் முன்னோர் வழிபாட்டில் சிறப்பான பலன்களை கொடுக்கும் என்பது ஐதீகமாக உள்ளது.

இந்து மதத்தில் முன்னோர் வழிபாடு என்பது மிக முக்கியமானது. ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை முன்னோர் வழிபாட்டிற்கென அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. எல்லாரும் எல்லா மாதமும் இந்நாளில் முன்னோர்களை நினைத்து வழிபாடு, விரதம் ஆகியவற்றை மேற்கொள்ள முடியாது. அதனால் தான் தமிழ் மாதங்களில் ஆடி, புரட்டாசி, தை மாத அமாவாசைகள் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதில் ஆடி மாதம் பித்ரு உலகத்தில் இருந்து முன்னோர்கள் நம்மை காண பூமிக்கு புறப்படுவார்கள். புரட்டாசியில் பூமிக்கு வருகை தருவார்கள். மீண்டும் தை மாதத்தில் பித்ரு உலகத்திற்கு திரும்புவதாக நம்பப்படுகிறது. இப்படியான நிலையில் 2021 ஆம் ஆண்டு புரட்டாசி மஹாளய அமாவாசை 2025, செப்டம்பர் 21 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்த அமாவாசைக்கு முன்னால் வரும் ஆவணி அல்லது புரட்டாசி பௌர்ணமியில் தொடங்கி அமாவாசை வரையிலான காலக்கட்டம் பித்ரு பக்ஷ காலமாக கருதப்படுகிறது.
பித்ரு பக்ஷ காலம்
இந்த 15 நாட்கள் நாம் முழுக்க முன்னோர் வழிபாட்டில் ஈடுபட்டால் அவர்களின் ஆசி என்றைக்கும் நம்முடன் இருக்கும் என்றும், குடும்பத்தின் காவல் தெய்வமாக இருந்து நம்மை வழிநடத்துவார்கள் என்பது நம்பிக்கையாகும். இதில் ஒவ்வொரு நாளும் மிக முக்கியமானது. அதில் மஹா பரணி நாளை பற்றி நாம் காணலாம். பொதுவாக நம்முடைய வீட்டில் யாரேனும் மரணித்தால் அவர்களின் ஆன்மா முழுமையாக சாந்தியடைய காசி அல்லது கயாவுக்கு சென்று தர்ப்பணம், வழிபாடு செய்ய வேண்டும் என சொல்வார்கள்.
இதையும் படிங்க: Coonoor: வாழ்க்கை பிரச்னைகளை போக்கும் தந்தி மாரியம்மன் கோயில்!
ஆனால் எல்லோராலும் அங்கு செல்ல முடியாது. அப்படி செல்ல முடியாதவர்கள் வழிபடும் நாளாக மஹா பரணி தினம் உள்ளது. இது காசி, கயாவில் வழிபட்ட பலனை தரும். பித்ரு பக்ஷ காலத்தில் பரணி நட்சத்திர நாளில் இந்த சிறப்பானது கடைபிடிக்கப்படுகிறது. மகாபாரணியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதால் அவர்கள் முக்தியை பெறுவார்கள் என்பது ஐதீகமாக பார்க்கப்படுகிறது ஜோதிடத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள 27 நட்சத்திரங்களில் பரணி நட்சத்திரம் இரண்டாவதாக வருகிறது.
இதையும் படிங்க: முன்னோர்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா?
மாதம்தோறும் பரணி நட்சத்திரம் வந்தாலும் கார்த்திகை மற்றும் புரட்டாசி மாதத்தில் வரும் பரணி நட்சத்திரம் மட்டும் தான் மகா பரணி என சிறப்பிக்கப்படுகிறது. அதிலும் கார்த்திகை மாதத்தில் வரும் அந்த நாள் பரணி தீபம் ஏற்றக்கூடிய நாளாக பார்க்கப்படுகிறது அதாவது திருக்கார்த்திகை தினமான அன்று இறைவனை ஜோதி வடிவமாக தரிசிக்கலாம்.
அதே சமயம் புரட்டாசி மாதத்தில் வரும் நட்சத்திரம் பரணி சிரார்த்தம் என அழைக்கப்படுகிறது. இன்றைய நாளில் கொடுக்கப்படும் தர்ப்பணம் அல்லது முன்னோர் வழிபாடு என்பது மஹாளய அமாவாசையில் வழிபடுவதற்கு சமமாகும். பரணி நட்சத்திரத்திற்குரிய அதிதேவதையாக எமதர்மராஜா கருதப்படுகிறார். எனவே இந்நாளில் நாம் முன்னோர் வழிபாடு, தர்ப்பணம், எம தீபம் ஏற்றி வழிபட்டால் பல்வேறு பலன்கள் கிடைக்கும் என நம்பப்படுகிறது. 2025 ஆம் ஆண்டு மகாபாரணி செப்டம்பர் 12ஆம் தேதி வருகிறது. எனவே அன்றைய நாளில் மறக்காமல் முன்னோர்களை வழிபட்டு அதற்கான பலன்களைப் பெறுங்கள்.
(இறை மற்றும் ஆன்மிக நம்பிக்கையின் அடிப்படையில் இக்கட்டுரை தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. அதனால் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)