Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Aadi Amavasai: ஆடி அமாவாசை குலதெய்வ வழிபாடு.. வீட்டில் செய்வது எப்படி?

Kuladeivam Worship: ஆடி அமாவாசை என்பது குலதெய்வ வழிபாட்டிற்கு மிகவும் சிறந்த நாளாக பார்க்கப்படுகிறது. முன்னோர் வழிபாடுடன், குலதெய்வ படத்திற்கு மாலை அணிவித்து, விளக்கேற்றி வழிபடுவது முக்கியமான ஒன்றாகும். அதேசமயம் இந்நாளில் குலதெய்வ கோயிலுக்குச் சென்று நேரில் வழிபடலாம். முடியாதவர்கள் வீட்டிலேயே வழிபட்டாலும் சிறப்பானதாகும்.

Aadi Amavasai: ஆடி அமாவாசை குலதெய்வ வழிபாடு.. வீட்டில் செய்வது எப்படி?
குலதெய்வம் வழிபாடு
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 23 Jul 2025 12:00 PM

ஆடி அமாவாசை என்பது இந்துக்களில் மிகவும் புனிதமான நாளாக பார்க்கப்படுகிறது. இந்த நாள் முன்னோர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகவும், மற்ற மாதங்களில் வரும் அமாவாசையில் முன்னோர்களை வழிபடா விட்டாலும் இந்த நாளில் வழிபட்டால் ஓராண்டு முழுக்க வழிபட்ட நிறைவு வந்து சேரும் எனவும் சொல்லப்படுகிறது. இப்படியான ஆடி அமாவாசை என்றால் பலருக்கும் பித்ரு தர்ப்பணம், முன்னோர் வழிபாடு ஆகியவைதான் நினைவுக்கு வரும். ஆனால் ஆடி அமாவாசை என்பது குலதெய்வத்தை வழிபடுவதற்கு மிகவும் ஏற்ற நாட்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. நம்முடைய குலத்தைக் காக்கும் தெய்வம் தான் குலதெய்வமாக கருதப்படுகிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான குல தெய்வம் இருக்கலாம். சிலருக்கு குலதெய்வம் என்னவென்றே தெரியாமல் கூட இருக்கலாம். சரியான நிலையில் இந்த நாளில் நாம் குலதெய்வ வழிபாட்டை செய்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது பற்றி காணலாம்.

வீட்டில் வழிபாடு செய்வது எப்படி?

அந்த வகையில் ஆடி அமாவாசை நாளில் முதலில் குலதெய்வ கோயிலுக்கு செல்கிறோமோ இல்லையோ அனைவரது வீட்டிலும் இருக்கும் குலதெய்வ படத்தை சுத்தம் செய்து அதற்கு மாலையிட்டு விளக்கேற்றி வழிபட வேண்டும். அதனை அதிகாலை புனித நீராடி புத்தாடை அல்லது சுத்தமான ஆடை அணிந்து செய்ய வேண்டும். பின்னர் முடிந்தவர்கள் அருகில் இருக்கும் உங்களுடைய குலதெய்வ கோயிலுக்கு சென்று நேரில் வழிபடுங்கள். அன்றைய நாளில் தெய்வத்திற்கு நடைபெறும் அபிஷேகத்திற்கு உங்களால் முடிந்த பொருள்கள் எதுவாக இருந்தாலும் வழங்கலாம்.

இதையும் படிங்க: உங்களின் குலதெய்வம் கனவில் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா?

தொடர்ந்து குலதெய்வ கோயிலுக்கு செல்பவர்களாக இருந்தால் நிச்சயம் அங்கு பொங்கல் வைத்து வழிபட வேண்டும் என சொல்லப்படுகிறது. இதனால் குடும்பத்தில் நிகழும் அனைத்து எதிர்மறை சம்பவங்களும் நீங்கி நன்மைகள் நடைபெறும் என நம்பப்படுகிறது. ஒருவேளை ஆடி மாதத்தில் உங்களால் குலதெய்வ கோயிலுக்கு செல்ல முடியாவிட்டால் வீட்டில் தினமும் குலதெய்வ படத்திற்கு விளக்கேற்றி வழிபாடு செய்யலாம். அதேசமயம் ஆடி அமாவாசை நாளில் நாம் இந்த வழிபாட்டை மேற்கொண்டால் செல்வ செழிப்புடன் வாழலாம் என நம்பப்படுகிறது.

மேலும் விளக்கேற்றும் போது இலுப்பை எண்ணெய் பயன்படுத்துவது சிறப்பானதாகும். அதேபோல் பஞ்சு திரி தான் பயன்படுத்த வேண்டும். முடிந்தவரை அகல் விளக்கில் விளக்கேற்றி பாசிட்டிவான சூழலை ஏற்படுத்துங்கள். அப்போது வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து துன்பங்களும் நீங்கி எந்த பிரச்சினைகளும் இல்லாமல் என்னுடைய சந்ததி நன்றாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என குலதெய்வத்தை மனதார வேண்டி கொள்ளுங்கள்.  இந்நாளில் இரண்டு வேளையும் நீங்கள் வழிபாடு செய்ய வேண்டும். அந்த வழிபாட்டின் போது ஏதேனும் உணவுப் பொருட்களை படையலாக வைத்து வணங்கினால் சிறப்பானதாகும்.

இதையும் படிங்க: குலத்தை காக்கும் கடவுள்.. குலதெய்வ வழிபாடு ஏன் முக்கியம் தெரியுமா?

குலதெய்வம் தெரியாவிட்டால் என்ன செய்யலாம்?

சிலருக்கு தங்கள் குலதெய்வம் யாரென்று தெரியாமல் இருக்கலாம். அவர்கள் ஒரு குத்துவிளக்கை தங்கள் குலதெய்வமாக எண்ணி வழிபடலாம். இல்லாவிட்டால் முருகப்பெருமானை இந்நாளில் வழிபட்டாலும் தகும் என சொல்லப்படுகிறது.

(இறை மற்றும் ஆன்மிக நம்பிக்கை அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. அதனால் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)