காஞ்சிபுரத்தின் ஆளுமை.. இந்த ராஜகோபாலசுவாமி திருக்கோயில் தெரியுமா?
இந்த மணி மங்கலம் ராஜகோபால சுவாமி கோயிலில் பெருமாளுக்குரிய அத்தனை விசேஷ தினங்களும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. வலது கையில் சங்கு ஊதியபடி இவர் காட்சிக் கொடுப்பது கண்கொள்ளாக் காட்சியாகும். மேலும் இந்த கோயிலில் இருந்து சற்று தொலைவில் அஞ்சலி வரத ஆஞ்சநேயர் அமைந்துள்ளார்.

ராஜகோபால சுவாமி கோயில்
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை காஞ்சிபுரம் கோயில் நகரம் என அழைக்கப்படுகிறது. இங்கு வைணவர்களின் முதன்மை கடவுளாக வழிபடப்படும் பெருமாள் கோயில்கள் அதிகளவில் உள்ளது. குறிப்பாக ஸ்ரீ வரதராஜ பெருமாள், ஸ்ரீ உலகளந்த பெருமாள் ஆகியவை காஞ்சிபுரத்தில் பெருமையைப் பசைச்சாற்றும் வகையில் அமைந்துள்ளது. இப்படியான நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலத்தில் கோயில் கொண்டிருக்கும் ராஜகோபாலசுவாமி திருக்கோயில் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம்.
இந்த கோயிலில் தாயாராக செங்கமலவல்லி அருள்பாலிக்கிறார். இந்த ஊரின் புராண பெயர் சதுர்வேதிமங்கலம் என அழைக்கப்பட்டு பின்னாளில் மணிமங்கலமாக மருவியதாக சொல்லப்படுகிறது. இந்த ராஜகோபால சுவாமி கோயில் தினமும் காலை 6:30 மணி முதல் 10.30 மணி வரையும், மாலையில் 3.30 மணி முதல் இரவு 7 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும். கோயிலின் வரலாறு மற்றும் சிறப்பு நிகழ்வுகள் பற்றி காணலாம்
கோயிலின் வரலாறு
மகாவிஷ்ணு கிருஷ்ணராக அவதரித்த நிலையில் குருஷேத்திர போரின் போது அர்ஜுனனுக்கு தேரோட்டியாக இருந்தார். போரில் கண்டிப்பாக ஆயுதங்களை பயன்படுத்த மாட்டேன் என உறுதி பூண்டு இருந்த விஷ்ணு, போர் அறிவிப்புக்காக சங்கு மட்டும் வைத்துக் கொண்டார். அவரது சங்கின் ஒலியைக் கேட்டதும் எதிரிப்படையினர் அஞ்சி நடுங்கினர்.
இதையும் படிங்க:கேட்டது அனைத்தும் கிடைக்கும்.. இந்த ஆதி கேசவ பெருமாள் கோயில் தெரியுமா?
இவ்வாறு கிருஷ்ணர் அந்த குருஷேத்திர போரின் போது வலது கையில் சங்கு ஊதியதன் அடிப்படையில் இந்த கோயிலில் மகாவிஷ்ணு வலது கையில் சங்கு வைத்தபடி காட்சியளிக்கிறார். வலது கையில் இருக்க வேண்டிய சக்கரம் இடது கையில் இருக்கிறது. கிருஷ்ண அவதாரத்தில் இடையனாக இருந்து பசுக்களை மேய்த்ததால் இவர் ராஜகோபாலர் என அழைக்கப்படுகிறார்.
கோயிலின் சிறப்புகள்
பொதுவாக சிவன் சன்னதியில் தான் கோஷ்டத்தில் (கருவறைக்கு வெளியே இருக்கும் சிற்பம்) விநாயகர் இருக்கும் நிலையில் பெருமாள் சன்னதியில் இருப்பது இங்கு சிறப்பாக பார்க்கப்படுகிறது. மேலும் இக்கோயிலில் ஒரு கையில் தண்டம், மற்றொரு கையில் பிரயோக சக்கரம் ஆகியவற்றுடன் காட்சி தரும் இரண்டு பெருமாள்களை நாம் ஒரே நேரத்தில் காணலாம்.
இவரிடம் நாம் வேண்டிக் கொண்டால் மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் விவசாய தொழில் செய்பவர்கள், கால்நடை வளர்ப்பவர்கள் இந்த கோயிலுக்கு வருகை தந்து ராஜகோபாலருக்கு துளசி மாலை அணிவித்து வேண்டிக் கொள்கிறார்கள்,
இந்த கோயிலுக்கு சற்று தூரத்தில் ஆஞ்சநேயர் தனி கோயிலில் வீற்றிருக்கிறார். கையில் கடாயுதம் இல்லாமல் இரு கைகளை கூறியபடி இருக்கும் அவர் அஞ்சலி வரத ஆஞ்சநேயர் என அழைக்கப்படுகிறார். இவருக்கு காவி உடை பிரதானமாக அணிவித்து அலங்காரம் செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: 10 கைகளில் பத்து ஆயுதங்களுடன் ஆஞ்சநேயர்.. இந்த கோயில் தெரியுமா?
ஆஞ்சநேயர் ராமபிரானை வணங்கும் விதமாக கைகளை மார்பில் குவித்து வைத்தபடி காட்சி தருகிறார். இவரிடம் வேண்டிக்கொண்டால் மன தைரியம் அதிகரிக்கும், செய்யும் செயலில் வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை ஆகும். இந்த ராஜகோபாலசாமி கோயிலில் நான்கு கைகளுடன் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி சமேதராக மூலவர் காட்சியளிக்கிறார்.
சுவாமி சன்னதியின் நுழைவு வாயிலின் மேல் பகுதியில் பள்ளிகொண்ட கோலத்தில் கிருஷ்ணரின் சிற்பம் உள்ளது இங்கு ஆண்டாள், ராமானுஜர், தட்சிணாமூர்த்தி, நரசிம்மர், காளிங்க நர்த்தன கிருஷ்ணர் ஆகியோருக்கும் சிற்பங்கள் உள்ளது. வாய்ப்பு கிடைத்தால் நீங்களும் ஒருமுறை சென்று வழிபட்டு பலன்களைப் பெறுங்கள்.
(இறை மற்றும் ஆன்மிக நம்பிக்கை அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இவற்றுக்கு அறிவியல்பூர்வ விளக்கம் கிடையாது. டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)