சேலம் எல்லை பிடாரி அம்மன் கோயிலில் 500 கிலோ மலர் பூச்சாட்டுதல் திருவிழா கோலாகலம்…!

Salem Ellai Pidari Amman Temple: சேலம் எல்லை பிடாரி அம்மன் கோயிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு 500 கிலோ மலர்களால் பூச்சாட்டுதல் வைபவம் நடைபெற்றது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசித்து பூ அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து 2026 மார்ச் 24 முதல் 30 வரை பல்வேறு ஆன்மீக நிகழ்ச்சிகள் மற்றும் அன்னதானம் நடைபெற உள்ளது.

சேலம் எல்லை பிடாரி அம்மன் கோயிலில் 500 கிலோ மலர் பூச்சாட்டுதல் திருவிழா  கோலாகலம்...!

சேலம் எல்லை பிடாரி அம்மன் கோயில் மலர் பூச்சாட்டுதல் திருவிழா

Published: 

18 Mar 2026 16:01 PM

 IST

சேலம் : பிரசித்தி பெற்ற சேலம் எல்லை பிடாரி அம்மன் திருக்கோயிலில் 500 கிலோ அளவிலான மலர்களால் பூச்சாட்டுதல் வைபவம் விமரிசையாக நடைபெற்றது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபட்டனர். சேலம் மாவட்டத்தில் குமாரசாமிபட்டி பகுதியில் மிகவும் பழமையான, பிரசித்தி பெற்ற அருள்மிகு எல்லைப்பிடாரி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம் ஆகும். அதன்படி, இந்த வருடத்திற்கான கோயில் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று (2026 மார்ச் 18) அம்மனுக்கான பூச்சாட்டுதல் வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

பூச்சாட்டுதல் வைபவத்தின் ஆன்மீக நிகழ்வுகள்

எல்லை பிடாரி அம்மன் பூச்சாட்டுதல் நிகழ்ச்சியை முன்னிட்டு நேற்று இரவே அம்மனுக்கு பால், இளநீர், பஞ்சாமிர்தம், குங்குமம், மஞ்சள், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, அம்மனுக்கு பட்டு ஆடை சாத்தி, ரத்தினக்கல் பதித்த ஆபரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டு, பல்வேறு விதமான வண்ண மலர்களால் ஆன மாலைகளில் சிறப்பு அலங்காரம் செய்து சிறப்பு அர்ச்சனை நடைபெற்றது. பூச்சாட்டுதல் விழாவை முன்னிட்டு 500 கிலோ எடையுள்ள பல்வேறுவிதமான மலர்களால் அம்மனுக்கு பூக்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.

பக்தர்களின் உற்சாகம் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாடு

அம்மனை தரிசிக்க திரண்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், நீண்ட வரிசையில் நின்று தங்கள் கரங்களால் பூக்களை கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்து சிறப்பித்தனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை திருக்கோயில் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர். நிகழ்ச்சியின் முடிவில் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த பூச்சாட்டுதல் நிகழ்ச்சியில் சேலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

அடுத்தடுத்த திருவிழா நிகழ்ச்சிகள் அறிவிப்பு

தொடர்ந்து, வரும் 2026 மார்ச் 24-ம் தேதி மாவிளக்கு ஊர்வலம் மற்றும் சக்தி அழைத்தல் வைபவம் நடைபெறவுள்ளது. 2026 மார்ச் 25-ம் தேதி அம்மன் ஊர்வலம், அலகு குத்துதல் நிகழ்ச்சி நடைபெறும். 2026 மார்ச் 26-ம் தேதி அம்மனுக்கு திருக்கல்யாணம் வைபவமும், மாலை முக்கிய நிகழ்வாக அக்னிகுண்டம் இறங்குதல் நிகழ்ச்சியும் விமரிசையாக நடைபெறவுள்ளது. 2026 மார்ச் 27-ம் தேதி பால் குட ஊர்வலம் அபிஷேகம், அம்மனுக்கு தங்க கவசம் வைபவமும் நடைபெறும். 2026 மார்ச் 28-ம் தேதி காலை 1,500 பேருக்கு அன்னதான நிகழ்ச்சியும், இரவில் சத்தாபரணம் திருவீதி உலா நடைபெறுகிறது.

விழா நிறைவு மற்றும் சிறப்பு வைபவங்கள்

29-ம் தேதி அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியும், 2026 மார்ச் 30-ம் தேதி திருவிளக்கு பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது. முதல் ஒரு வாரத்திற்கு சக்தி அழைத்தல், பூ மிதித்தல், அலகு குத்துதல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வைபவங்கள் நடைபெற உள்ளன. இந்த திருவிழா, பக்தர்களின் ஆன்மீக உற்சாகத்தையும், பாரம்பரிய வழிபாட்டு முறைகளையும் வெளிப்படுத்தும் வகையில் மிகுந்த சிறப்புடன் நடைபெற்று வருகிறது.

Follow Us
வங்கி லாக்கரில் வைக்கப்படும் நகைகளுக்கு பாதுகாப்பு இல்லையா? உண்மை என்ன?
ஹார்முஸ் கடல் பகுதியில் சிக்கிய இந்திய கேப்டன் பயணித்த கப்பல் - குடும்பத்தினர் கவலை
போர் பதற்றம் - வெறிச்சோடி காணப்படும் துபாய் நகரங்கள்
இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு என்பது உண்மையா? மத்திய அரசு விளக்கம்