Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நெல்லையப்பர் கோவில்: ஆனிப் பெருந்திருவிழா கோலாகல தொடக்கம்..!

Nellayappar Temple's 518th Ani Festival: நெல்லையப்பர் கோவிலின் 518வது ஆனிப் பெருந்திருவிழா 2025 ஜூன் 30 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் விழாவில், தினமும் வாகன சேவைகள், பக்தி நிகழ்ச்சிகள் நடைபெறும். 2025 ஜூலை 8 அன்று தேரோட்டம் முக்கிய நிகழ்வாகும். பக்தர்கள் பாதுகாப்புக்காக 147 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

நெல்லையப்பர் கோவில்: ஆனிப் பெருந்திருவிழா கோலாகல தொடக்கம்..!
நெல்லையப்பர் கோவில்Image Source: social media
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 30 Jun 2025 09:33 AM IST

திருநெல்வேலி ஜூன் 30: திருநெல்வேலி (Tirunelveli) நெல்லையப்பர் கோவிலில் 518-வது ஆனிப் பெருந்திருவிழா (518th Ani Peranthiruvizha at Nellaiyappar Temple) 2025 ஜூன் 30ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் மற்றும் யாகசாலை வழிபாடுகள் நடைபெற்றன. காலை 7.30 மணிக்கு வேத மந்திரங்கள் ஒலிக்க, கொடி எழுந்தது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் சுவாமி-அம்பாள் தினமும் வாகனங்களில் உலா வருவார்கள். 2025 ஜூலை 8ஆம் தேதி நடைபெற உள்ள தேரோட்டம் விழாவின் முக்கிய நிகழ்வாகும். பாதுகாப்புக்காக 147 கேமராக்கள் பொருத்தப்பட்டு, போலீசார் காத்துக் கொண்டுள்ளனர்.

நெல்லையப்பர் – காந்திமதி அம்மன் கோவிலின் 518-வது ஆனிப் பெருந்திருவிழா

திருநெல்வேலி நெல்லையப்பர் – காந்திமதி அம்மன் கோவிலின் 518-வது ஆனிப் பெருந்திருவிழா, இன்று (2025 ஜூன் 30) காலை கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக தொடங்கியது. அதிகாலை 4 மணிக்கே கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதன் பின்னர் யாகசாலை பூஜைகள் மற்றும் சுவாமி-அம்பாளுக்கு பிரதான கொடிமரத்தில் பூஜைகள் நடத்தப்பட்டன.

காலை 7.30 மணிக்கு வேத மந்திரங்கள் மற்றும் மேளதாள இசையுடன் கொடி ஏற்றம் நடைபெற்றது. 16 வகை அபிஷேகப் பொருட்களால் கொடிமரம் அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

வெவ்வேறு வாகனங்களில் நான்கு ரத வீதிகளில் உலா

மொத்தம் 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில், தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் சுவாமி-அம்பாள் வெவ்வேறு வாகனங்களில் நான்கு ரத வீதிகளில் உலா வருவார்கள். கோவிலின் கலையரங்கத்தில் சமய சொற்பொழிவுகள், ஆன்மிக கருத்தரங்குகள், பக்தி இசை, கர்நாடக இசை, புராண நாடகங்கள் போன்ற பல்வேறு கலாசார நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.

ஜூலை 8ஆம் தேதி நடைபெற உள்ள தேரோட்டம்

இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக 2025 ஜூலை 8ஆம் தேதி நடைபெற உள்ள தேரோட்டம், ஆசியாவின் மிகப்பெரிய தேரான நெல்லையப்பர் தேர் உட்பட மொத்தம் 5 தேர்கள் வீதிகளில் செல்லும் பிரம்மாண்ட நிகழ்வாகும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுப்பார்கள். கடந்த ஆண்டு ஏற்பட்ட வடம் அறுந்த விபத்தையடுத்து, இந்த ஆண்டு ரூ.6.5 லட்சத்தில் 1,300 அடி நீள புதிய வடம் தயார் செய்யப்பட்டுள்ளது.

147 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

தேரோட்டத்திற்கான அனைத்து பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தேர்கள் சுத்தம் செய்யப்படுவதுடன் சாரம் கட்டும் பணி, அலங்காரத் துணிகள் அமைத்தல், பந்தல் அமைப்பது, சாலை சீரமைப்பு உள்ளிட்ட பணிகளும் தீவிரமாக நடக்கின்றன. பக்தர்கள் பாதுகாப்பிற்காக கோவில் உள்ளும் புறமும் 147 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் காவல் காத்து வருகின்றனர்.