Navratri 2025: நவராத்திரி 5ம் நாள்.. ஸ்கந்தமாதா தேவி வழிபாட்டு முறைகள் இதோ!
Navratri Day 5 Worship: நவராத்திரி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் ஒவ்வொரு நாளும் துர்க்கா தேவியின் ஒவ்வொரு வடிவமும் வழிபாடு செய்யப்பட்டு வருகிறது, அந்த வகையில் செப்டம்பர் 26 ஆம் தேதியான இன்று ஸ்கந்தமாதா தேவி வழிபாட்டு முறைகள் பற்றி காணலாம்.

ஸ்கந்தமாதா தேவி வழிபாடு
இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று நவராத்திரி விழா. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி பண்டிகை 2025 ஆம் ஆஅண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 2 ஆம் தேதி விஜயதசமி அல்லது தசராவுடன் முடிவடைகிறது. ஒவ்வொரு நாளும் துர்கா தேவியின் வெவ்வேறு வடிவ வழிபாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 5ஆம் நாளான இன்று என்ன மாதிரியான வழிபாடு மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றி நாம் இந்த தொகுப்பில் காண்போம். அதன்படி நவராத்திரியின் ஐந்தாவது நாளான செப்டம்பர் 26 வெள்ளிக்கிழமை, துர்கா தேவியின் மற்றொரு வடிவமான ஸ்கந்தமாதா தேவியை வழிபடுவதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
சாஸ்திரங்களின்படி, மா ஸ்கந்தமாதா தனது வாகனமாக சிங்கத்தின் மீது அமர்ந்து, குழந்தை முருகனை மடியில் சுமந்து செல்லும் தெய்வமாக சித்தரிக்கப்படுகிறார். பத்து கைகளைக் கொண்ட துர்கா தேவியை போலல்லாமல், மா ஸ்கந்தமாதா நான்கு கைகளுடன் காட்சியளிக்கிறார். அவள் தனது இரண்டு மேல் கைகளில் தாமரை மலரை ஏந்தியபடி, வலது கையால் அபய முத்திரையை சைகை செய்கிறாள். ஸ்கந்தமாதா தேவி தாய்வழி அன்பு, பராமரிப்பு மற்றும் வளர்ப்பைக் குறிப்பதாக சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: ஒரு எலுமிச்சை போதும்.. வாழ்க்கையில் இவ்வளவு பிரச்னை தீருமா?
பூஜை செய்ய உகந்த நேரம்
இன்றைய நாளில் வளர்பிறை சதுர்த்தி திதியானது காலை 9:33 மணிக்கு திதி தொடங்கி செப்டம்பர் 27 மதியம் 12:03 மணிக்கு முடிவடைகிறது. அதேசமயம் பூஜைக்கு உகந்த நேரமாக பிரம்ம முகூர்த்த காலமான அதிகாலை 4:36 முதல் 5:24 வரையும், காலை 11:48 முதல் மதியம் 12:36 வரையும், பிற்பகல் 2:12 முதல் 3 மணி வரையும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நவராத்திரி 5 ஆம் நாளுக்கான மங்களகரமான நிறம் பச்சை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது புத்துணர்ச்சி, வளர்ச்சி உணர்வு, கருவுறுதல் மற்றும் அமைதியைக் குறிக்கும் என சொல்லப்படுகிறது. பூஜையில் ஸ்கந்தமாதா தேவிக்கு மிகவும் பிடித்தமான சிவப்பு நிற ஏதாவது ஒருவகை பூக்கள், மஞ்சள் கலந்த அரிசி, பாதுஷா இனிப்பு, வெற்றிலை பாக்கு, கிராம்பு, ஆகியவை வழிபாட்டில் இருக்க வேண்டும். பசு நெய் அல்லது நல்லெண்ணெயால் தீபம் ஏற்றி, தீப, தூபம் காட்டி வழிபட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மோட்ச தீபம் ஏற்றி வழிபட்டால் இவ்வளவு நன்மையா? வழிமுறைகள் இதோ!
9 நாள் நவராத்திரி விழாவின் ஒவ்வொரு நாளும் தேவியின் தனித்துவமான வெளிப்பாட்டைக் கௌரவிக்கும் வகையில் அமைகிறது. இது பல்வேறு நற்பண்புகள், சக்திகள் மற்றும் வாழ்க்கையின் அம்சங்களைக் குறிப்பதாக சொல்லப்படுகிறது.
(ஆன்மிக நம்பிக்கை அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. அதனால் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)