Navratri: நவராத்திரி காலம்.. கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய வாஸ்து விஷயங்கள்!
Navratri Vastu Tips: புரட்டாசி மாத நவராத்திரியில், லட்சுமி, சரஸ்வதி, துர்க்கை ஆகிய மூன்று தேவியரையும் வழிபடுவதற்கு வாஸ்து சாஸ்திரம் சில குறிப்புகளை வழங்குகிறது. இதனை பின்பற்றுவதால் எதிர்மறை சக்திகளை நீக்கி, நேர்மறையான ஆற்றலை ஈர்க்க இவை உதவும் என நம்பப்படுகிறது.

நவராத்திரிக்கான வாஸ்து டிப்ஸ்
இந்து மதத்தில் புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரி பண்டிகை கொண்டாட்டம் என்பது மிக முக்கியமானது. இது இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் மிக முக்கியமான நிகழ்வாகும். 9 நாட்கள் கொண்டாட்டப்படும் நவராத்திரி பண்டிகையானது அலைமகள், கலைமகள், மலைமகள் ஆகியோருக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அதாவது லட்சுமி, சரஸ்வதி, துர்க்கை அம்மன் இந்த நவராத்திரி காலத்தில் வழிபடப்படுகிறார்கள். இந்த ஒன்பது நாட்களும், ஒன்பது வடிவங்களில் அவர்கள் வழிபடப்படுகிறார்கள். இந்த காலக்கட்டம் மிகவும் புனிதமாகக் கருதப்படும் நிலையில் இந்த நேரத்தில் சில வாஸ்து குறிப்புகளைப் பின்பற்றினால், லட்சுமி, சரஸ்வதி, துர்க்கை ஆகிய முப்பெரும் தேவியர்களின் ஆசிகளைப் பெறலாம் என சொல்லப்படுகிறது. அதனைப் பற்றி நாம் இக்கட்டுரையில் காண்போம்.
2025 ஆம் ஆண்டு நவராத்திரி கொண்டாட்டமானது செப்டம்பர் 22 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 2 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.இந்த வாஸ்து குறிப்புகளை பின்பற்றினால் அவை வீட்டில் நேர்மறையைப் பராமரிக்கும். மகிழ்ச்சியையும் செழிப்பையும் அள்ளித் தரும். சனி பகவானின் ஆசிகளையும் பெறு முடியும். வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள பல சிரமங்களைக் குறைக்கும் என நம்பப்படுகிறது.
Also Read: மாலையில் இதெல்லாம் செய்யாதீங்க.. லட்சுமி தேவி அருள் கிடைக்காது!
பின்பற்ற வேண்டிய வாஸ்து குறிப்புகள்
வீட்டில் பெண் தெய்வங்களின் சிலைகளை நிறுவுவதற்கு முன், வீட்டையும் பூஜை அறையையும் நன்கு சுத்தம் செய்ய வேண்டும். குறிப்பாக வீட்டின் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு திசையின் தூய்மையில் சிறப்பு கவனம் செலுத்துங்கள். வாஸ்து சாஸ்திரத்தில், சனி பகவான் இந்த திசையின் அதிபதியாகக் கருதப்படுகிறார்.எனவே, இந்த திசை தொடர்பான வாஸ்து விதிகளை அனைவரும் கண்டிப்பாக நினைவில் கொள்ள வேண்டும். வீட்டின் தென்மேற்கு மூலையில் உடைந்த அல்லது கனமான பொருட்களை வைக்க வேண்டாம். அதேசமயம் நகைகள் மற்றும் முக்கியமான ஆவணங்களை இந்த இடத்தில் வைக்கலாம்.
மேலும் வாஸ்து சாஸ்திரத்தில், வீட்டின் பிரதான கதவுக்கு சிறப்பு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஏனெனில் இந்த கதவு வழியாகத்தான் நேர்மறை ஆற்றல் வீட்டிற்குள் நுழைகிறது. எனவே, பிரதான கதவு எப்போதும் சுத்தமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், தவறுதலாக கூட பிரதான கதவுக்கு அருகில் குப்பைத் தொட்டிகளையோ அல்லது துடைப்பங்களையோ வைக்க வேண்டாம்.
Also Read: எக்காரணம் கொண்டும் வீட்டின் முன் வளர்க்கக்கூடாத 5 செடிகள்!
அதேசமயம் இந்த பிரதான கதவைத் திறக்கும்போது எந்த சத்தமும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நவராத்திரியின் போது, மாலையில் பிரதான வாசலில் ஒரு விளக்கை ஏற்றி வைக்கலாம், இது உங்கள் வீட்டிற்கு மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரும். இது எதிர்மறையை விலக்கி வைக்கும்.
தானம் செய்தால் புண்ணியம்
நவராத்திரியின் போது பெரிய விளக்கை ஏற்றினால், வாஸ்து சாஸ்திரத்தின்படி, அது எப்போதும் தென்கிழக்கு திசையில் வைக்கப்பட வேண்டும். மேலும், இந்த நவராத்திரியின் போது எதிர்மறையை நீக்க மாலையில் வீட்டின் நான்கு மூலைகளிலும் விளக்குகளை ஏற்றலாம். நவராத்திரி தொடங்குவதற்கு முன், வீட்டில் இருந்து பயன்படுத்தப்படாத பொருட்களை அகற்றவும். ஏனெனில் இந்த பொருட்கள் எதிர்மறை சக்தியை அதிகரிக்கும். நவராத்திரியின் போது ஏழைகளுக்கு கருப்பு எள், உணவு மற்றும் உளுந்து தானம் செய்யலாம். இதைச் செய்வதன் மூலம், சனி பகவானின் ஆசிர்வாதத்தையும், தேவியின் ஆசிர்வாதத்தையும் பெற முடியும் என நம்பப்படுகிறது.
(ஆன்மிக நம்பிக்கை அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. அதனால் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)