சுமங்கலி வரம் அருளும் மாரியம்மன் கோயில்.. எங்கே இருக்கு தெரியுமா?

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோயில், சுயம்புவாக தோன்றிய அம்பாள் சிலையுடன் விளங்கும் புகழ்பெற்ற கோயிலாகும். நான்கு மலைகளுக்கு இடையே அமைந்த இக்கோயிலில் அம்பாளுக்கு எதிரே நிலைத்திருக்கும் கம்பத்தை வழிபட்டால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என சொல்லப்படுகிறது.

சுமங்கலி வரம் அருளும் மாரியம்மன் கோயில்.. எங்கே இருக்கு தெரியுமா?

நித்திய சுமங்கலி மாரியம்மன்

Published: 

08 Aug 2025 14:58 PM

ஆடி மாதம் ஆன்மிக மாதம் என சொல்லப்படும் நிலையில் எங்கு திரும்பினாலும் அம்மன் கோயில்களில் திருவிழாக்கள் களைகட்டியுள்ளது. இந்த மாதத்தின் பெண் தெய்வத்தின் சக்தி அதிகமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பெண் தெய்வங்கள் மிகுந்த முக்கியத்துவம் பெற்றவையாக திகழ்கிறது. ஒரு தாயாக இருந்து குடும்பத்தினரை பாதுகாப்பவள் பராசக்தி என ஐதீகமாக உள்ளது. அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் அமைந்திருக்கும் நித்ய சுமங்கலி மாரியம்மன் திருக்கோயில் பற்றி இந்த தொகுப்பில் காணலாம். இந்த புகழ்பெற்ற கோயிலானது தினந்தோறும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலையில் 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மாரியம்மன் கோயில் வரலாறு

முற்காலத்தில் இப்போது கோயில் அமைந்திருக்கும் பகுதியானது முழுவதும் வயல் வெளியாக இருந்துள்ளது. அப்போது இப்பகுதியில் விவசாயம் செய்து வந்த ஒருவர் தனது வயலில் உழுது கொண்டிருக்கும் போது ஓர் இடத்தில் ரத்தம் பீறிட்டு வந்துள்ளது. அதனைக் கண்டு பயந்து போன அவர் உடனடியாக ஊர் மக்களை அழைத்து வந்து காட்டினார். பொதுமக்கள் ஒன்று சேர்ந்து சம்பந்தப்பட்ட இடத்தை தோன்றிய போது அதனுள் இருந்து சுயம்பு வடிவாக அம்மன் சிலை வெளிப்பட்டது.

Also Read: Esakki Amman Temple: திருமண தடை நீக்கும் முப்பந்தல் இசக்கியம்மன் கோயில்!

அப்போது பக்தர் ஒருவர் சாமியாடி அம்பிகையின் குரலாக ஒலித்தார். அதில் தனக்கு இந்த இடத்தில் ஒரு கோயில் கட்டி வழிபட வேண்டும் என கூறியதாக சொல்லப்படுகிறது. அந்த வாக்குப்படி ஊர் மக்கள் சிலை கிடைத்த இடத்திலேயே கோயில் கட்டி மாரியம்மன் உருவ சிலையை பிரதிஷ்டை செய்தனர்.

கோயிலின் சிறப்புகள்

இந்தக் கோயிலில் மூலவரான மாரியம்மன் நித்திய சுமங்கலி என்ற சிறப்பு பெயருடன் அழைக்கப்படுகிறாள். இவள் நீண்டகாலம் சுமங்கலியாக வாழ்வதற்கு அருள் புரிவாள் என நம்பப்படுகிறது. அதே சமயம் பெரும்பாலான மாரியம்மன் கோயில்களில் அம்மனுக்கு எதிரே விழா காலங்களில் மட்டும் கம்பம் நடப்பட்டு அது அம்பிகையின் கணவனாக கருதி பூஜை செய்யப்படும். ஆனால் இந்த கோயிலில் வருடம் முழுவதும் அம்பாள் சன்னதிக்கு எதிரே கம்பமானது உள்ளது.

அவள் தன் கணவனை பார்த்துக் கொண்டிருப்பதால் இவளிடம் வேண்டிக் கொண்டால் தீர்க்க சுமங்கலியாக இருக்கும் வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. மேலும் இந்த கோயிலில் ஐப்பசி திருவிழாவின்போது அம்பாளுக்கு எதிரே இருக்கும் கம்பத்தை எடுத்துவிட்டு புதிய கம்பம் நடுகின்றனர்.  பழைய கம்பத்தை அங்கிருந்து சற்று தொலைவில் இருக்கும் தீர்த்தக் கிணற்றிற்கு கொண்டு செல்கின்றனர்.  அப்போது கம்பத்துக்கு தயிர் சாதம் பிரசாதமாக படைத்து சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

Also Read: Devi Karumariamman: வேண்டியதை அருளும் தேவி கருமாரியம்மன்.. இந்த கோயில் தெரியுமா?

குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் இந்த கம்பத்தை வணங்கி எலுமிச்சை தீபம் ஏற்றி அந்த பிரசாதத்தை வாங்கி சாப்பிடுகின்றனர். இதனால் வீட்டில் விரைவில் மழலை சத்தம் கேட்கும் என்பதை நம்பிக்கையாக உள்ளது.

சுயம்பு அம்பிகைக்கு பூஜை

இந்த நித்திய சுமங்கலி மாரியம்மன் கோயில் ஆனது நைனாமலை, போதமலை, கொல்லிமலை மற்றும் அலவாய்மலை என நான்கு மலைகளுக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்திருக்கிறது. மூலஸ்தானத்தில் மாரியம்மன் சிலைக்கு முன்பாக சுயம்புவாக தோன்றிய விக்ரகம் உள்ளது. முதலில் சுயம்பு அம்பிகைக்கு பூஜை செய்யப்படுவது விசேஷமாக சொல்லப்படுகிறது. ஒவ்வொரு மாதத்திலும் மகம் நட்சத்திரத்தில் அம்பிகைக்கு சிறப்பு பூஜை நடக்கிறது.

மேலும் எதிரே இருக்கும் ஊஞ்சல் மண்டபத்தில் அம்பிகையின் பாதம் பொறிக்கப்பட்டிருக்கிறது. குழந்தை பாக்கியம் வேண்டி வழிபடும் பெண்கள் இந்த ஊஞ்சலை ஆட்டி அம்பிகையிடம் வேண்டிக் கொண்டால் விரைவில் பிரார்த்தனை நிகழும் என்பது ஐதீகமாக உள்ளது. மேலும் பிரகாரத்தில் விநாயகர், முருகன் ஆகியோர் மட்டுமே உள்ளன வேறு எந்த பரிவார தெய்வங்களும் இங்கு கிடையாது.  வாய்ப்பு இருந்தால் நீங்களும் ஒருமுறை சென்று வழிபட்டு பலன்களை பெறுங்கள்.

(ஆன்மிக மற்றும் இறை நம்பிக்கையின் அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)