Kandha Shashti: கந்த சஷ்டி விரதம் இருக்கப் போறீங்களா? – இதை மறக்காதீங்க!
கந்த சஷ்டி விரதம் முருகப்பெருமானுக்கு உகந்தது. ஐப்பசியில் 6 நாட்கள் கொண்டாடப்படும் இத்திருவிழா சூரசம்ஹாரத்தை அடிப்படையாக கொண்டது. குழந்தை வரம் வேண்டுவோர் இந்த சஷ்டி விரதத்தை அதிகமாக மேற்கொள்கிறார்கள். 2025 அக்டோபர் 22ல் தொடங்கி 27ம் தேதி வரை நடைபெறும் சஷ்டி விரதத்தை உடல்நிலைக்கு ஏற்ப எவ்வாறு மேற்கொள்வது, என்னென்ன விதிகள் பின்பற்ற வேண்டும் என பார்க்கலாம்.

கந்த சஷ்டி
சஷ்டி என்பது முருகப்பெருமானுக்கு மிகவும் உரிய நாளாக பார்க்கப்படுகிறது. ஐப்பசி மாதம் வளர்பிறை முதல் நாள் தொடங்கி ஆறு நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா பலராலும் விரதம் இருந்து வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கந்த சஷ்டி என்றாலே முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் தான் நம் நினைவுக்கு வரும். முருகன் சூரபத்மனை வதம் செய்த நிகழ்வே கந்த சஷ்டி விழாவாக கொண்டாடப்படுகிறது. இதன் சிறப்பு பொருட்டு கந்த சஷ்டி கவசமும் உருவானது. ஆறுமுகனை குறிக்கும் வகையில் ஆறு நாட்கள் கொண்டாடப்படும் இந்த திருவிழாவில் விரதம் இருந்து வழிபட்டால் நாம் கேட்டதெல்லாம் முருகன் நமக்கு தந்தருளுவான் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கையாக உள்ளது. குறிப்பாக சஷ்டியில் விரதம் இருந்தால் கர்ப்பப்பையில் குழந்தை வரம் கிடைக்கும் என்பது பெண்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.
கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியாக சூரசம்ஹாரம் நடைபெறும். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு கந்த சஷ்டி விழா அக்டோபர் 22ஆம் தேதி தொடங்கிய நிலையில் சூரசம்ஹாரம் அக்டோபர் 27ஆம் தேதியும், அதனை தொடர்ந்து முருகப்பெருமான் – தெய்வானை திருக்கல்யாணம் அக்டோபர் 28ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில் பக்தர்கள் பலரும் ஆறு நாட்கள் விரதத்தை தொடங்கி இருப்பார்கள். சிலர் 3 நாள், ஒரு நாள் விரதம் கூட இருக்கிறார்கள். அப்படி விரதம் இருப்பவர்கள் பின்பற்ற வேண்டிய சில விஷயங்களை பற்றி பார்க்கலாம்.
Also Read: சிவனின் ஆசி கிடைக்கணுமா? ; 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய விஷயம்!
சஷ்டி விரதம் இருப்பவர்கள் அதிகாலையில் எழுந்து புனித நீராடி வீட்டை சுத்தப்படுத்த வேண்டும். பின்னர் பூஜை அறையில் முருகப்பெருமானுக்கு விளக்கேற்றி செவ்வந்தி பூ அல்லது வெள்ளை நிற பூக்கள் ஏதேனும் வைத்து வழிபட வேண்டும். இந்த வழிபாட்டின்போது சர்க்கரை கலந்த பால் வாழைப்பழம் அல்லது வெற்றிலை பாக்கு ஆகியவை வைத்து மனதார முருகனை வணங்க வேண்டும். முடிந்தவரை காலை அல்லது மாலை வேளையில் அருகில் உள்ள கோயிலுக்கு சென்று வர வேண்டும்.
நாம் எப்படிப்பட்ட விரதத்தை மேற்கொள்ளப் போகிறோம் என்பதை முன்பே முடிவு செய்து கொள்ள வேண்டும். சிலர் காலை மற்றும் மதியம் சாப்பிடாமல் மாலையில் வழிபட்ட பிறகு விரதத்தை முடிப்பார்கள். சிலர் காலையிலும் இரவிலும் சாப்பிட்டுவிட்டு மதியம் ஒரு நேரம் சாப்பிடாமல் விரதம் இருப்பார்கள். அதனால் உங்கள் உடல்நலத்திற்கு ஏற்றவாறு எப்படி விரதம் கடைபிடிக்க வேண்டும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் எத்தனை நாள் விரதம் என்றாலும் அதனை சரியாக பின்பற்றி கடைபிடிக்க வேண்டும். எது அருந்துவதாக இருந்தாலும் அதனை முதலில் முருகப் பெருமானுக்கு படைத்துவிட்டு பின்பு எடுத்துக் கொள்ளலாம்.
சஷ்டி விரதத்தில் தண்ணீர் மட்டுமே அருந்துவது, காலை மற்றும் மாலை பால் மட்டும் குடித்து விரதம் இருப்பது, ஜூஸ் போன்ற திரவ உணவுகளை எடுத்துக் கொண்டு விரதம் மேற்கொள்வது, பால் மற்றும் பழத்தைக் கொண்டு உண்டு விரதம் இருப்பது, ஒவ்வொரு நாளும் எண்ணிக்கைக்கு ஏற்ப மிளகு மட்டுமே சாப்பிட்டு தண்ணீர் குடித்து விரதம் இருப்பது, இளநீர் குடித்து விரதம் இருப்பது என பல வகையில் பின்பற்றலாம்.
Also Read: கந்த சஷ்டி கவசம்.. 5 நிமிடத்தில் 36 முறை படிப்படி எப்படி.. இதோ டிப்ஸ்!
சஷ்டி விரதம் இருப்பவர்கள் பகலில் தூங்கக் கூடாது. கடைகளில் உணவருந்த கூடாது. மது, அசைவம் ஆகியவை தவிர்க்க வேண்டும். தலையணை, பாய் போன்றவை இல்லாமல் வேஷ்டி, துண்டு விரித்து உறங்கலாம். விரதம் இருக்கும் ஆறு நாட்களும் தலைக்கு குளிக்க வேண்டும். கருப்புத் தவிர்த்து வண்ண ஆடைகளை அணிய வேண்டும். உடல் நலத்திற்கு தீங்கு ஏற்படாத வகையில் விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.
(இறை மற்றும் ஆன்மிக நம்பிக்கை அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)