குரு அருள் இருந்தால் கையில் தங்கம் குவியும்… ஜாதகத்தில் இந்த யோகம் இருக்கா?
Guru Bhagavan Brings Wealth: ஜாதகத்தில் குரு பகவான் நல்ல நிலையில் இருந்தால் வாழ்க்கையில் செல்வ வளமும் தங்க சேர்க்கையும் அதிகரிக்கும் என்று ஜோதிட நம்பிக்கைகள் கூறுகின்றன. குருவுடன் சனி, சுக்கிரன், புதன் தொடர்பு இருந்தாலும் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும் என சொல்லப்படுகிறது. மூன்றாம் வீட்டுடன் குரு மற்றும் சுக்கிரன் சம்பந்தம் இருந்தால் தங்க நகைகள் சேரும் யோகம் கிடைக்கும்.
ஜோதிடத்தில் மிகவும் சுப கிரகமாக கருதப்படுவது குரு பகவான் எனப்படும் வியாழன். ஒருவரது ஜாதகத்தில் குரு நல்ல நிலையில் அமைந்திருந்தால், வாழ்க்கையில் செல்வ வளம், மரியாதை, குடும்ப முன்னேற்றம் போன்ற பல நன்மைகள் கிடைக்கும் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர். “குரு பார்க்க கோடி நன்மை” என்ற பழமொழியும் இதையே உணர்த்துகிறது. வறுமையில் இருந்தவர்களுக்குக் கூட வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி, தலைமுறைகள் நினைக்கும் அளவுக்கு செல்வம் சேர்க்கும் சக்தி குருவுக்கு உண்டு என நம்பப்படுகிறது.
தங்கச் செல்வத்தை குறிக்கும் குரு
ஜோதிட ரீதியாக தங்கம் மற்றும் செல்வ வளத்திற்கான அதிபதியாக குரு பகவான் கருதப்படுகிறார். அதனால் இவருக்கு “பொன்னவன்” என்ற சிறப்புப் பெயரும் உண்டு. குரு பகவான் ஜாதகத்தில் உச்சம், ஆட்சி, நட்பு நிலை அல்லது கேந்திர, திரிகோண ஸ்தானங்களில் அமர்ந்திருந்தால் அந்த நபரின் வீட்டில் செல்வ வளம் குறையாது என்று கூறப்படுகிறது. குறிப்பாக தங்க நகைகள், சொத்து சேர்க்கை மற்றும் லட்சுமி கடாட்சம் அதிகரிக்கும் யோகம் உருவாகும் என ஜோதிட நம்பிக்கைகள் தெரிவிக்கின்றன.
சனி, சுக்கிரன், புதன் தொடர்பால் அதிகரிக்கும் யோகம்
குரு பகவான் சனி, சுக்கிரன் அல்லது புதன் போன்ற கிரகங்களின் ஆதரவை பெற்றிருந்தாலும் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. குறிப்பாக தங்க நகைகள் வாங்கும் வாய்ப்புகள் அதிகரித்து, குடும்பத்தில் செழிப்பு நிலவும். மேலும் ஜென்ம லக்னத்திலிருந்து ஐந்தாம் வீட்டின் அதிபதி குருவின் பார்வை அல்லது தொடர்பு பெற்றிருந்தால், அந்த நபருக்கு வாழ்க்கையில் செல்வ சேர்க்கை தொடர்ந்து அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இது குடும்பத்தில் நிம்மதி மற்றும் வளத்தை உருவாக்கும் யோகமாக பார்க்கப்படுகிறது.
மூன்றாம் வீட்டின் முக்கியத்துவம்
ஜோதிடத்தில் மூன்றாம் வீடு ஆபரணம், அழகு மற்றும் கழுத்துப் பகுதியை குறிக்கும் இடமாக கருதப்படுகிறது. இந்த இடத்துடன் குரு மற்றும் சுக்கிரன் சம்பந்தம் பெற்றிருந்தால், அந்த நபருக்கு தங்க நகைகள் அணியும் யோகம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. குறிப்பாக பெண்களுக்கு அழகிய நகைகள் சேரும் வாய்ப்பு அதிகமாக இருக்கும் என்று ஜோதிட நம்பிக்கைகள் தெரிவிக்கின்றன. அதேபோல் சந்திரன் மற்றும் புதன் நல்ல பலத்துடன் மூன்றாம் வீட்டில் அமைந்திருந்தாலும், தங்கம் சேர்க்கும் அதிர்ஷ்டம் உருவாகும் என கூறப்படுகிறது.
Also Read: வைகுண்டப் பாதைக்கு வழிகாட்டும் ஏகாதசி: விரத முறைகளும் வியக்க வைக்கும் பலன்களும்!
செல்வ வளத்திற்கு ஜோதிட நம்பிக்கைகள்
ஜாதகத்தில் கிரகங்களின் அமைப்பு மனிதர்களின் வாழ்க்கை முறையிலும் பொருளாதார நிலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை இந்திய ஜோதிடத்தில் நீண்ட காலமாக இருந்து வருகிறது. அதில் குரு பகவானின் நிலை மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. செல்வம், கல்வி, ஆன்மிகம், குடும்ப வளம் போன்றவற்றை வழங்கும் கிரகமாக குரு பார்க்கப்படுவதால், குருபெயர்ச்சி காலங்களிலும் மக்கள் சிறப்பு வழிபாடுகளை மேற்கொள்வது வழக்கமாக உள்ளது.