கருமாரியம்மன் கோயிலில் மடிப்பிச்சை எடுத்த நடிகை நளினி.. பக்தர்கள் நெகிழ்ச்சி
ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையன்று, பிரபல நடிகை நளினி சென்னை திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலில் மடிப்பிச்சை எடுத்தார். கருமாரியம்மன் அவரது இஷ்ட தெய்வம் என்பதால், கனவில் அம்மன் தோன்றினதைத் தொடர்ந்து இந்தப் பக்தி செயலை மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார். நளினியின் இந்தச் செயல் பக்தர்களை நெகிழ்ச்சியடையச் செய்தது.

நடிகை நளினி
ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சென்னை திருவேற்காட்டில் உள்ள புகழ் பெற்ற தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோயில் வாசலில் நடிகை நளினி மடிப்பிச்சை எடுத்த சம்பவம் பக்தர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் 80களின் காலக்கட்டத்தில் மிக பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் நளினி. காலப்போக்கில் தனக்கேற்ற குணச்சித்திர கேரக்டர்களிலும் நடிக்க தொடங்கினார். இவர் திருவேற்காடு கருமாரியம்மனின் மிக தீவிர பக்தையாவார். தனக்கு ஆன்மிகத்தில் அதிகளவு நம்பிக்கை இருப்பதாகவும், சிறு வயதில் தனக்கிருந்த தோல் வியாதி கருமாரியம்மன் அருளால் தீர்ந்ததாகவும் பல மேடைகளில் சிலாகித்து பேசியுள்ளார். மேலும் அதிகாலை 3 மணிக்கு எழுந்து அம்மனுடன் தான் பேசுவேன் எனவும் தனது ஆன்மிக அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
திருவேற்காட்டில் மடிப்பிச்சை
இப்படியான நிலையில் 2025, ஜூலை 17 ஆம் தேதி ஆடி மாதம் பிறந்தது. ஆடி மாதம் என்றாலே அது அம்மனுக்குரிய மாதம் என்பதால் பெண் தெய்வங்கள் கோயில் கொண்டுள்ள வழிபாட்டு தலங்கள் களைக்கட்டியுள்ளது. ஜூலை 18ம் தேதியான நேற்று ஆடி முதல் வெள்ளிக்கிழமை என்பதால் அனைத்து அம்மன் கோயில்களிலும் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. அந்த வகையில் திருவேற்காட்டில் உள்ள தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோயிலிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
Also Read: எப்போதும் கருமாரி துணையிருப்பாள்.. நடிகை நளினி வாழ்வில் நடந்த அதிசயம்!
அந்த கோயிலில் தற்சமயம் கும்பாபிஷேகம் தொடர்பான திருப்பணிகள் நடைபெற்றுள்ளதால் அருகிலுள்ள பெரிய மண்டபத்தில் அம்மன் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களும் வழிபடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் நேற்று அந்த கோயில் வாசலில் நடிகை நளினி மடிப்பிச்சை எடுத்துள்ளார். அதில் சேர்ந்த காணிக்கையெல்லாம் எடுத்து கோயில் உண்டியலில் செலுத்தினார். கோயிலுக்கு வந்த பக்தர்கள் அனைவரும் நளினியின் பக்தியை கண்டு நெகிழ்ச்சியடைந்தனர்.
ஒரு நடிகை என்ற எண்ணமெல்லாம் இல்லாமல் சாதாரணமாக அனைவரிடம் பேசிய நளினிக்கு பக்தர்கள் காணிக்கை செலுத்தி அவரது பிரார்த்தனையில் பங்கேற்றனர்.
Also Read:உக்கிரமான தெய்வங்களை வீட்டில் வழிபடலாமா? – அனிதா குப்புசாமி சொல்லும் தகவல்!
கனவில் வந்த கருமாரியம்மன்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகை நளினி, “எல்லாருக்கும் வணக்கம். என்னுடைய இஷ்ட தெய்வமும், என்னுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் தெய்வமான தேவி ஸ்ரீ கருமாரியம்மன் என்னுடைய கனவில் வந்து நீ எனக்கு என்ன செய்ய போகிறாய்? என கேட்டாள். அதற்கு நான் என்ன செய்வதென்று தெரியாமல், உடனே மடிப்பிச்சை ஏந்தி என்னால் முடிந்த காணிக்கையை நான் தருகிறேன் என கூறி விட்டேன். அந்த நாள் ஆடி வெள்ளிக்கிழமையான இன்றைக்கு அமைந்து விட்டது. இதுதொடர்பாக கோயில் அறங்காவலர் தலைவருக்கு போன் பண்ணி விவரத்தை சொன்னேன். அவர் தாராளமாக வாருங்கள். வந்திருந்த பக்தர்களிடமும் விஷயத்தை கூறினேன்” என கூறினார்.