கடன் பிரச்னைகளை தீர்க்கும் ஆடி செவ்வாய் வழிபாடு.. எப்படி செய்ய வேண்டும்?

Aadi Tuesday Worship: ஆடி மாத செவ்வாய்கிழமைகள் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்தவையாக பார்க்கப்படுகிறது. இந்த நாளில் மகாலட்சுமி வழிபாடு செல்வ வளத்தை அதிகரித்து நிதிப் பிரச்சனைகளைத் தீர்க்கும் என நம்பப்படுகிறது. கடன் பிரச்னைக்கு தீர்வு மேற்கொள்ள வேண்டிய வழிபாடு பற்றிக் காணலாம்.

கடன் பிரச்னைகளை தீர்க்கும் ஆடி செவ்வாய் வழிபாடு.. எப்படி செய்ய வேண்டும்?

ஆடி செவ்வாய் வழிபாடு

Published: 

21 Jul 2025 12:23 PM

செவ்வாய்கிழமை என்றாலே ஆன்மிக சாஸ்திரத்தில் புனிதமான நாளாக கருதப்படுகிறது. இந்நாள் முழுக்க முழுக்க இறை பணிகளுக்காகவே ஒதுக்கப்பட்டிருக்கிறது. இப்படியான செவ்வாய்கிழமை ஆடி மாதத்தில் மிகவும் விசேஷமாக பார்க்கப்படுகிறது. இந்த நாளில் பெண்கள் விரதம் இருந்து வழிபடுவது என்பது காலம் காலமாக நடைபெற்று வருகிறது. இதனால் மாங்கல்ய பலம் தொடங்கி வாழ்க்கையில் ஏற்பட்ட பல இன்னல்கள் நீங்கி மகிழ்ச்சி பிறக்கும் என்பது நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது. நாம் இக்கட்டுரையில் ஆடி மாதத்தின் முதல் செவ்வாய் நாம் செய்ய வேண்டிய வழிபாட்டு முறைகள் மற்றும் பிற விஷயங்கள் பற்றி விரிவாக பார்க்கலாம். இந்த மாதத்தில் வரும் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் அதன் வழிபாடுகளும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகளை தீர்க்கக் கூடியதாக இருக்கும் என்பது நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.

ஆடி மாத செவ்வாய் வழிபாட்டு முறை

ஆடி மாதம் நாம் மகாலட்சுமியை வழிபடுவது வீட்டில் செல்வ வளத்தை அதிகரித்து நிதி பிரச்சனைகளை தீர்க்கும் என்பது ஐதீகமாக உள்ளது. அந்த வகையில் கடன் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள், நிதி பிரச்சனையை எதிர்கொள்பவர்கள் ஆடி முதல் செவ்வாய் கிழமையில் மகாலட்சுமியை வழிபட வேண்டும் என சொல்லப்படுகிறது. இதனை நாம் வீட்டிலேயே மிக எளிமையான முறையில் மேற்கொள்ளலாம்.

அதாவது வீட்டை முதல் நாள் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். முடியாதவர்கள் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் எழுந்து வீட்டில் மஞ்சள் நீர் தெளித்து பூஜை அறையை மட்டும் சுத்தமாக வைத்துக் கொள்ளலாம். இந்த வழிபாடுகள் அனைத்தும் நிச்சயம் சக்தி வாய்ந்த பலன்களை அள்ளித் தரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

மகாலட்சுமி வழிபாடு

இன்றைய நாளின் ராகு காலம் மற்றும் எமகண்டம் ஆகிய இல்லாத நேரமாக பார்த்து வீட்டில் இருக்கும் மகாலட்சுமி படத்திற்கு சந்தனம் மற்றும் குங்குமம் வைத்து பின்னர் பூக்களை சூடி அலங்காரம் செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு ஒரு தட்டில் மூன்று கிண்ணங்கள் எடுத்துக்கொண்டு ஒன்றில் பச்சரிசியும் மற்றொன்றில் டைமண்ட் கல்கண்டும் மூன்றாவது பாத்திரத்தில் பாசிப்பருப்பும் வைத்து மகாலட்சுமி படத்திற்கு முன் படைக்க வேண்டும். பிளாஸ்டிக் பாத்திரத்தை தவிர்க்க வேண்டும்.

இதையும் படிங்க: ஆடி மாதம்.. சென்னையில் மிஸ் பண்ணக்கூடாத அம்மன் கோயில் இதுதான்!

மாலையில் இந்த பொருள்களை எல்லாம் எடுத்து கற்கண்டு பொங்கல் செய்து மகாலட்சுமிக்கு படைத்து வழிபட்டால் போதும். வழிபாட்டிற்கு பின்னர் அந்த பிரசாதத்தை வீட்டில் உள்ளவர்களுக்கும் அக்கம் பக்கத்தினருக்கும் வழங்கி மகிழ வேண்டும். தொடர்ந்து முடிந்தவர்கள் அருகில் இருக்கும் கோயிலுக்கு சென்று வழிபடலாம். ஒருவேளை பிரசாதம் அதிகமாக இருந்தால் கோயிலுக்கும் சென்றும் வழங்கலாம். இந்த பிரசாதத்தை வாங்கும் பெண் குழந்தைகள் வடிவில் மகாலட்சுமி நம்மிடம் வருவதாக நம்பப்படுகிறது.

கடன் பிரச்னை தீர வழி

அதே சமயம் அன்றைய நாளின் காலையில் ஓரை நேரமாக அறியப்படும் ஆறு மணி முதல் ஏழு மணிக்குள் விநாயகருக்கு ஒரு தேங்காயை சிதறுகாய் உடைத்து விட்டு யாருக்கு நீங்கள் கடன் கொடுக்க வேண்டுமோ அவர்களுக்கு சிறிய தொகையை அனுப்பலாம். இதன் மூலம் கடன் பிரச்சினை விரைவில் தீர்வையும் என்பதை நம்பிக்கையாகும்.

மேலும் மீண்டும் கடன் வாங்கும் நிலை ஏற்படாது எனவும் சொல்லப்படுகிறது. அது மட்டுமல்லாமல் வங்கி தனியார் பைனான்ஸ் ஆகியவற்றில் வாங்கிய கடன் என்றால் அதற்கு கட்ட வேண்டிய தொகையை எடுத்து உண்டியலில் வைத்துக் கொள்ளலாம்.

இதையும் படிங்க: 5 அஷ்டமி வழிபாடு.. வேண்டியதை நிறைவேற்றும் கல்யாண காமாட்சி!

மாலையில் ஒரு மரப்பலகையை பன்னீரால் சுத்தம் செய்து அதன் மீது பச்சரிசி கரைத்து ஸ்வஸ்திக் சக்கரம் வரைய வேண்டும். பச்சரிசியால் வரையப்பட்ட கோட்டுக்கு அருகில் பச்சரிசி மற்றும் மஞ்சள் கலந்த கலவையில் ஒரு கோடு வரைந்து நான்கு புறமும் குங்குமத்தால் பொட்டு வைக்க வேண்டும். இதில் வெள்ளை நிறம் சந்திரனையும், மஞ்சள் நிறம் குருவையும், குங்குமம் செவ்வாயையும் குறிப்பதாக நம்பிக்கை ஆகும்.

இந்த ஸ்வஸ்திக் சக்கரத்திற்கு உங்களால் முடிந்த பூக்களை கொண்டு தூவி 108 லட்சுமி அஷ்டோத்திரம் மந்திரம் சொல்லி வழிபாடு செய்ய வேண்டும். அப்போது நைவேத்தியமாக பால் பாயாசம் படைத்து வழிபடலாம். இந்த வழிபாட்டின் மூலம் செல்வத்தின் அதிபதியான மகாலட்சுமி நம்முடைய வீட்டில் நிரந்தரமாக குடியிருந்து நிதி பிரச்சனைகளை தீர்த்து வாழ்க்கையில் அனைத்து ஐஸ்வர்யங்களையும் கிடைக்க அருளுவாள் என்பது நம்பிக்கையாகும்.

(ஆன்மிக நம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமே இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை என்பதால் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)