ஆடி முதல் வெள்ளி.. நினைத்ததை நிறைவேற்றும் காளி -துர்க்கை வழிபாடு!
ஆடி மாதம் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த மாதத்தில் துர்க்கை மற்றும் காளி தேவியரை வழிபடுவது மிகவும் சிறப்பானதாக பார்க்கப்படுகிறது. துர்க்கை அம்மன் வழிபாடு துன்பங்களை நீக்கி, வாழ்வில் வளர்ச்சியைத் தரும் என நம்பப்படுகிறது. வெள்ளிக்கிழமைகளில், குறிப்பிட்ட மந்திரங்களை 54 முறை உச்சரித்து வழிபாடு செய்ய வேண்டும்.

காளியம்மன்
தமிழ் மாதங்களில் 4வது மாதமாக அறியப்படும் ஆடி மாதம் என்பது ஆன்மிக மாதம் என அழைக்கப்படுகிறது. இந்த காலக்கட்டம் அம்பிகை எனப்படும் பெண் தெய்வங்களை வழிபடுவதற்கான சிறந்ததாக கருதப்படுகிறது. குறிப்பாக பராசக்தியின் தனித்தனி ரூபங்களை கொண்டாடுவதற்கு ஏற்ற காலமாகவும் ஆடி மாதம் திகழ்கிறது. இந்த ஆடி மாதத்தில் முப்பெரும் தேவியர்கள், சப்த கன்னிமார்கள், கிராமத்தின் அதிதேவதைகள், நம்முடைய குலதெய்வங்களில் பெண் தெய்வங்களையும் வழிபட வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது. அப்படியான நிலையில் முப்பெரும் தேவியர்களில் முதன்மையானவர் துர்க்கையம்மன். இவரை நாம் காளி வடிவில் வழிபடுகிறோம். அதாவது அம்மன் சாந்த நிலையில் துர்க்கையாகவும், உக்கிர நிலையில் காளியாகவும் வழிபடப்படுகிறாள். இந்த ஆடி மாதத்தில் செய்யக்கூடிய காளி – துர்க்கை வழிபாடு பற்றிக் காணலாம்.
தக்ஷிண காளி
துர்க்கை என்றாலே நம் வாழ்க்கையில் இருக்கும் துன்பங்களை போக்குபவள் என்பது அர்த்தமாகும். துன்பங்கள் போக வேண்டும் என்றால் காளியாக அவதாரம் எடுக்கிறாள். இதில் தென் திசைக்கு அதிதேவதையாக இருக்கக்கூடியவள் தக்ஷிண காளி ஆவாள். சாஸ்திரப்படி தெற்கு எமனுக்குரிய திசையாகும். அந்த பகுதியில் எமனையே வென்று தன்னுடைய பக்தர்களை காப்பவளாக காளி இருக்கிறாள். காளியின் உருவம் கண்டாலே பலருக்கும் பயமாக இருக்கும். அவர்கள் அந்தளவு பயப்பட தேவையில்லை.
காளி -துர்க்கை வழிபாடு
இப்படிப்பட்ட காளியை ஆடி வெள்ளிக்கிழமைகளில் எப்படி வழிபடலாம் என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். துர்க்கையம்மனை எப்படி வழிபடுகிறோமோ அப்படித்தான் காளிக்கும் செய்ய வேண்டும். வீட்டில் பெரும்பாலும் காளி படத்தை வைக்க மாட்டோம். அதனால் துர்க்கை அம்மன் புகைப்படத்தை வைத்து வழிபடலாம். 9 வாரங்கள் வெள்ளிக்கிழமை நாளில் யார் ஒருவர் துர்க்கை அம்மனை மகா காளியாக பாவித்து வழிபடுகிறார்களோ அவர்களுக்கு நினைத்தது நினைத்தபடி நடக்கும்.
Also Read: Aadi Month: 2025 ஆடி மாதப் பிறப்பு எப்போது? .. அதன் முக்கியத்துவம் தெரியுமா?
9 வாரம் செய்ய முடியாதவர்கள் ஒரு வாரமாவது கண்டிப்பாக செய்யுங்கள். வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி முதல் 12 மணி வரை இராகு காலமாகும். அந்த நேரத்தில் செய்ய முடியாதவர்கள் மாலை 7 மணிக்கு மேல் செய்யலாம்.
மனைப்பலகை ஒன்றை எடுத்து அதில் சிவப்பு நிற துணி விரிக்க வேண்டும். துணி இல்லாதவர்கள் கோலமிட வேண்டும். அடுத்ததாக சிவப்பு நிற மலர்களை படைக்க வேண்டும். நைவேத்தியமாக சர்க்கரை பொங்கல் வைக்கலாம். முடியாதவர்கள் இனிப்பு சேர்க்கப்பட்ட பால் வைக்கலாம். தீப, தூர சமயத்தில் வெள்ளை நிற குங்கிலியம் போட்டு வழிபடலாம். தொடர்ந்து ஓம் ஸ்ரீ மஹா காளிகாயை நமஹ என்ற மந்திரத்தை உச்சரித்தவாறு வழிபாடு செய்ய வேண்டும்.
Also Read:Devi Karumariamman: வேண்டியதை அருளும் தேவி கருமாரியம்மன்.. இந்த கோயில் தெரியுமா?
அப்போது குங்குமம் அல்லது மலரால் அர்ச்சனை செய்ய வேண்டும். 54 முறை மந்திரம் உச்சரிக்க வேண்டும். வழிபாடு முடிந்த பிறகு குங்குமம், நைவேத்தியம் ஆகியவற்றை தனிப்பட்ட வகையிலோ அல்லது அக்கம் பக்கத்தினருக்கோ வழங்க வேண்டும். இதனை செய்தால் திருமண தடை, குழந்தைப்பேறு, வாழ்க்கையின் வளர்ச்சிக்கு தடை, உடல் ஆரோக்கியம் தொடர்பான அத்தனை பிரச்னைகளும் நீங்கும் என நம்பப்படுகிறது.
(ஆன்மிக நம்பிக்கையின் அடிப்படையில் இக்கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் தகவல்களுக்கு அறிவியல்பூர்வ விளக்கம் கிடையாது. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)