இரவில் மட்டும் உள்ளங்கால்கள் தீயாய் எரிகிறதா? அலட்சியம் வேண்டாம்…
Burning at Night: இரவு நேரத்தில் பாதங்களில் எரிச்சல் ஏற்படுவது நரம்புப் பாதிப்பு, சர்க்கரை நோய் மற்றும் வைட்டமின் பி12 குறைபாடு போன்ற காரணங்களால் இருக்கலாம். பூஞ்சை தொற்று, தைராய்டு மற்றும் சிறுநீரகப் பிரச்சனைகளும் பாத எரிச்சலை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இந்தப் பிரச்சனை தொடர்ந்து நீடித்தால் அலட்சியப்படுத்தாமல் மருத்துவரை அணுகி காரணத்தைக் கண்டறிய வேண்டும்.
இரவு நேரத்தில் பாதங்களில் எரிச்சல், சூடு, ஊசி குத்துவது போன்ற உணர்வு ஏற்படுவது பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளின் அறிகுறியாக இருக்கலாம். பகல் நேரத்தைவிட இரவில் இந்த எரிச்சல் அதிகமாக உணரப்படலாம். சர்க்கரை நோயால் பாதங்களில் உள்ள நரம்புகள் சேதமடைவது முக்கியக் காரணமாகும். வைட்டமின் பி12 குறைபாடும் பாதங்களில் எரிச்சல் மற்றும் உணர்வின்மையை ஏற்படுத்தலாம். தைராய்டு பிரச்சனை, சிறுநீரக பாதிப்பு மற்றும் சில மருந்துகளின் பக்கவிளைவுகளும் இதற்குக் காரணமாக இருக்கலாம். பூஞ்சை தொற்று காரணமாகவும் பாதங்களில் அரிப்பு, சிவத்தல் மற்றும் எரிச்சல் ஏற்படலாம். தொடர்ந்து பாத எரிச்சல் இருந்தால் மருத்துவரை அணுகி உரிய பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
Also Read: இதயத்தைக் காக்கும் சின்னஞ்சிறு ஏலக்காய்… தினமும் ஒன்று சாப்பிட்டால்?
இரவு நேரத்தில் மட்டும் பாதங்களில் எரிச்சல் ஏற்படுகிறதா?
இரவு நேரத்தில் படுக்கைக்குச் சென்றதும் உள்ளங்கால்கள் சூடாக இருப்பது, எரிச்சல் ஏற்படுவது, ஊசி குத்துவது போன்ற உணர்வு அல்லது பாதங்களில் வலி ஏற்படுவது பலருக்கும் இருக்கும் பிரச்சனையாகும். இதை வெறும் உடல் சோர்வு என்று அலட்சியப்படுத்தக் கூடாது. சில நேரங்களில் இது நரம்புகள் தொடர்பான பாதிப்புகள் அல்லது உடலில் இருக்கும் ஊட்டச்சத்துக் குறைபாடுகளின் அறிகுறியாகவும் இருக்கலாம்.
இரவில் பாதங்கள் ஏன் அதிகமாக எரிகின்றன?
பகல் நேரத்தில் வேலை மற்றும் இதர செயல்பாடுகளில் ஈடுபடுவதால் பாதங்களில் ஏற்படும் அசௌகரியத்தைப் பலரும் கவனிப்பதில்லை. ஆனால் இரவு நேரத்தில் அமைதியாக இருக்கும்போது நரம்புகளில் ஏற்படும் மாற்றங்களால் எரிச்சல், கூச்சம் மற்றும் வலி அதிகமாக உணரப்படலாம். குறிப்பாக, புற நரம்பியல் பாதிப்பு (Peripheral Neuropathy) உள்ளவர்களுக்கு இந்த அறிகுறிகள் இரவில் தீவிரமடைய வாய்ப்புள்ளது.
சர்க்கரை நோயும் முக்கிய காரணம்!
நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு நீண்ட காலமாக அதிகமாக இருப்பதால் பாதங்களில் உள்ள நரம்புகள் சேதமடையலாம். இதனால் உள்ளங்கால்களில் எரிச்சல், உணர்வின்மை, ஊசி குத்துவது போன்ற உணர்வு மற்றும் வலி ஏற்படலாம். சிலருக்கு போர்வை கால்களில் படும்போதுகூட அசௌகரியம் ஏற்படலாம்.
வைட்டமின் குறைபாடுகளும் காரணமாக இருக்கலாம்
உடலில் வைட்டமின் பி12 உள்ளிட்ட பி வகை வைட்டமின்கள் குறைவாக இருப்பதும் நரம்புகளின் செயல்பாட்டைப் பாதிக்கலாம். இதனால் பாதங்களில் எரிச்சல், கூச்ச உணர்வு மற்றும் உணர்வின்மை ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், தைராய்டு பிரச்சனை, சிறுநீரக பாதிப்பு மற்றும் சில மருந்துகளின் பக்கவிளைவுகளும் இதற்குக் காரணமாக இருக்கலாம்.
பூஞ்சை தொற்றுகளால் ஏற்படும் பாத எரிச்சல்
பாதங்களில் ஏற்படும் பூஞ்சை தொற்றும் எரிச்சலுக்குக் காரணமாக இருக்கலாம். குறிப்பாக, விரல்களுக்கு இடையில் அரிப்பு, தோல் உரிதல், சிவத்தல் மற்றும் எரிச்சல் இருந்தால் பாதப்படை தொற்றாக இருக்க வாய்ப்புள்ளது. நீண்ட நேரம் ஈரமான காலணிகள் அல்லது காலுறைகளை அணிவதும் இந்தப் பிரச்சனையை அதிகரிக்கலாம்.
Also Read: இதயத்தைக் காக்கும் சின்னஞ்சிறு ஏலக்காய்… தினமும் ஒன்று சாப்பிட்டால்?
எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?
பாதங்களில் எரிச்சல் தொடர்ந்து நீடித்தால், இரவில் தூக்கத்தைப் பாதித்தால் அல்லது கால்களில் உணர்வின்மை, அதிக வலி மற்றும் வீக்கம் ஏற்பட்டால் மருத்துவரை அணுகுவது அவசியம். ரத்த சர்க்கரை அளவு, வைட்டமின் குறைபாடு மற்றும் நரம்புகளின் செயல்பாடு உள்ளிட்டவற்றைப் பரிசோதித்து காரணத்தைக் கண்டறியலாம். காரணம் தெரியாமல் வைட்டமின் மாத்திரைகளை எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.