மழைக்கால வீட்டு நமநமப்பிற்கு வையுங்கள் முற்றுப்புள்ளி!
Monsoon Moisture: பருவமழைக்காலம் தொடங்கும் போது வெப்பம் தணிந்து குளிர்ச்சி பரவினாலும், வீடுகளுக்குள் ஒரு பெரிய சவால் காத்துக் கொண்டிருக்கிறது. அதுதான் காற்றில் கலந்திருக்கும் அளவுக்கு அதிகமான ஈரப்பதம். இந்த மழைக்கால ஈரப்பதப் பிரச்சினையை வீட்டில் இருக்கும் எளிய பொருட்களைக் கொண்டே மிக எளிதாக எப்படிச் சமாளிக்கலாம் என்பதை இந்தப் பதிவில் விரிவாகப் பார்ப்போம்.
பருவமழைக்காலத்தில் வீட்டின் சுவர்களில் ஏற்படும் பூஞ்சைக் காளான்களைத் தடுக்க வெள்ளை வினிகர் மற்றும் பேக்கிங் சோடா கலவை சிறந்த தீர்வாக அமைகிறது. அறைகளில் உள்ள ஒட்டுமொத்த நமநமப்புத் தன்மையையும், காற்றில் இருக்கும் கூடுதல் ஈரப்பதத்தையும் உறிஞ்சுவதற்கு கல் உப்பு மற்றும் கரிக்கட்டிகளை மூலைகளில் வைக்கலாம். துணிகளில் ஏற்படும் மட்கிய துர்நாற்றத்தைத் தவிர்த்து பூச்சிகள் வராமல் தடுக்க அலமாரிகளில் கற்பூரம் மற்றும் உலர்ந்த வேப்பிலைகளைப் பயன்படுத்த வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, மழை நின்றவுடன் வீட்டின் ஜன்னல்களைத் திறந்து வைத்து நல்ல காற்றோட்டத்தை அனுமதிப்பது ஈரப்பதத்தை இயற்கையாகவே குறைக்கும்.
சுவர்களில் பூஞ்சை வராமல் தடுக்கும் வினிகர்
மழைக்காலத்தில் வீட்டின் மூலைகளிலும் சுவர்களிலும் ஈரப்பதம் தங்கி, கறுப்பு நிறப் பூஞ்சைகள் படர்வது வழக்கம். இதனைத் தடுக்க, நாம் சமையலுக்குப் பயன்படுத்தும் வெள்ளை வினிகர் (White Vinegar) மற்றும் பேக்கிங் சோடா சிறந்த தீர்வாக அமைகிறது. சம அளவு வினிகரையும் நீரையும் கலந்து ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி, பூஞ்சை காளான் இருக்கும் சுவர்களில் தெளித்து ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதன்பின், ஒரு மென்மையான துணியைக் கொண்டு துடைத்து எடுத்தால் பூஞ்சைகள் முற்றிலும் நீங்கிவிடும். சுவர்களில் அதிக ஈரப்பதம் உள்ள இடங்களில் சிறிதளவு பேக்கிங் சோடாவைத் தூவி வைப்பதன் மூலமும், அது காற்றில் உள்ள ஈரத்தை உறிஞ்சி சுவர்களைப் பாதுகாக்கும்.
அறைகளின் ஈரப்பதத்தை உறிஞ்சும் கல் உப்பு மற்றும் கரிக்கட்டிகள்
வீட்டின் அறைகளுக்குள் நுழையும் போதே ஒருவித நமநமப்புத் தன்மையை நாம் உணர முடியும். இந்த ஒட்டுமொத்த அறையின் ஈரப்பதத்தைக் குறைக்க கல் உப்பு (Rock Salt) மற்றும் அடுப்புக்கரி (Activated Charcoal) பெரிதும் உதவுகின்றன. ஒரு அகலமான பாத்திரத்தில் அல்லது சிறிய துணிப் பைகளில் கல் உப்பைக் கொட்டி, அறையின் மூலைகளிலும் அலமாரிகளுக்குள்ளும் வைக்கலாம். உப்பு காற்றில் இருக்கும் கூடுதல் ஈரப்பத்ததை இயற்கையாகவே உறிஞ்சும் தன்மை கொண்டது. இதேபோல், சில கரிக்கட்டிகளை ஒரு தட்டில் வைத்து அறையில் வைப்பதன் மூலம், அது ஈரப்பதத்தை உறிஞ்சுவதோடு மட்டுமல்லாமல் அறையில் ஏற்படும் தூர்நாற்றத்தையும் சேர்த்து நீக்கிவிடுகிறது.
துணிகளின் கெட்ட வாடையைப் போக்கும் கற்பூரம் மற்றும் வேப்பிலை
மழைக்காலத்தில் துணிகளைச் சரியாக உலர்த்த முடியாததால் அலமாரிகளில் வைக்கும் போது ஒருவித மட்கிய வாசனை வீசத் தொடங்கும். இந்த வாடையைத் தவிர்த்து துணிகளைப் புத்துணர்ச்சியோடு வைத்திருக்க, துணி அலமாரிகளின் தட்டுகளில் சில கற்பூர வில்லைகளை (Camphor) போட்டு வைக்கலாம். கற்பூரத்தின் மணம் பூச்சிகள் வராமல் தடுப்பதுடன் ஈரப்பதத்தையும் கட்டுப்படுத்தும். மேலும், உலர்ந்த வேப்பிலைகளை துணிகளுக்கு இடையில் வைப்பதன் மூலம் பூஞ்சை மற்றும் பூச்சிக் தொற்றுகளில் இருந்து ஆடைகளைப் பாதுகாக்க முடியும். வாரத்தில் ஒருமுறை மழை நின்றதும், வீட்டின் ஜன்னல்களைத் திறந்து வைத்து நல்ல காற்றோட்டத்தை அனுமதிப்பதும் மிக அவசியமான ஒன்றாகும்.