AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கண்ணாடியில் தன்னையே ரசித்த மயில்… வீட்டுக்குள் நடந்த சுவாரஸ்ய சம்பவம்!

Peacock: ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் ஒரு தம்பதியினர் வீட்டிற்குத் திரும்பியபோது, குளியலறையில் கண்ணாடியில் தனது உருவத்தை ரசித்துக் கொண்டிருந்த மயிலைக் கண்டு ஆச்சரியமடைந்தனர். வனவிலங்கு மீட்புக் குழுவினர் அந்த மயிலைப் பாதுகாப்பாக மீட்ட நிலையில், அது ஹெக்ஸ் என்ற பெயருடைய வளர்ப்பு மயில் என்பது தெரியவந்தது.

கண்ணாடியில் தன்னையே ரசித்த மயில்… வீட்டுக்குள் நடந்த சுவாரஸ்ய சம்பவம்!
மயில்Image Source: social media
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 04 Nov 2026 12:30 PM IST

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் ஒரு தம்பதியினர் வீட்டிற்குத் திரும்பியபோது, குளியலறையில் மயில் ஒன்று (Peacock ) நின்றுகொண்டிருந்தது. அந்த மயில் கண்ணாடியில் தெரிந்த தனது பிம்பத்தை ஆர்வத்துடன் ரசித்துக் கொண்டிருந்தது. வீட்டின் கேரேஜ் கதவு திறந்திருந்ததால் அது உள்ளே வந்திருக்கலாம் எனக் கருதப்பட்டது. மயிலை வெளியேற்ற தம்பதியினர் தண்ணீர் மற்றும் பிஸ்கட் வழங்கியும் அது அங்கிருந்து செல்லவில்லை. இதையடுத்து வனவிலங்கு மீட்புக் குழுவினர் மயிலைப் பாதுகாப்பாகப் பிடித்து வெளியேற்றினர். பின்னர் அந்த மயில் ஹெக்ஸ் என்ற பெயருடையது என்பதும், எலியட் ராஸ் என்பவருக்குச் சொந்தமானது என்பதும் தெரியவந்தது. கண்ணாடியில் தெரியும் பிம்பத்தைப் பறவைகள் மற்றொரு பறவையாகக் கருதக்கூடும் என்று நிபுணர் விளக்கம் அளித்துள்ளார்.

எதிர்பாராத விருந்தினர்

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் வசிக்கும் ஜெஃப் மற்றும் டெல்வின் பாலன்டைன் தம்பதியினர், மாலை நேரத்தில் காபி குடிப்பதற்காக வீட்டை விட்டுச் சென்றுள்ளனர். பின்னர் வீட்டிற்குத் திரும்பியபோது, அவர்களுக்கு ஓர் ஆச்சரியமான அனுபவம் காத்திருந்தது. வீட்டின் குளியலறைக்குள் சென்றபோது, அங்கு ஒரு பெரிய மயில் கண்ணாடி முன்பு நின்று தனது பிம்பத்தையே ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தது. வீட்டின் கேரேஜ் கதவு திறந்திருந்தபோது, இந்த மயில் உள்ளே நுழைந்திருக்கலாம் என்று தம்பதியினர் கருதினர். முதலில் சத்தம் கேட்டதும் யாரோ வீட்டிற்குள் நுழைந்துவிட்டதாகப் பயந்த டெல்வின், பின்னர் மயிலைப் பார்த்ததும் வியப்படைந்தார்.

மயிலை வெளியேற்ற முயற்சி

கண்ணாடியில் தெரியும் தனது உருவத்தைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த மயிலின் கவனத்தைத் திசைதிருப்ப தம்பதியினர் முயற்சி செய்தனர். அதற்காக அதற்கு தண்ணீர் மற்றும் பிஸ்கட் போன்ற உணவுகளை வழங்கியுள்ளனர். இருப்பினும், மயில் அங்கிருந்து செல்லாமல் இருந்ததால் வனவிலங்கு மீட்புக் குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் துணியைப் பயன்படுத்தி மயிலைப் பிடித்து அருகிலிருந்த புதர்ப் பகுதிக்குள் பாதுகாப்பாக விட்டனர்.

உரிமையாளரைத் தேடும் முயற்சி

இதற்கிடையில், அந்த மயில் அருகிலுள்ள மற்றொரு வீட்டிற்கு அடிக்கடி வரத் தொடங்கியது. இதைப் பார்த்த சுசி டஃபோலோ என்பவர், காணாமல் போன தனது மயிலைத் தேடிக்கொண்டிருந்த எலியட் ராஸ் என்ற உள்ளூர் டாட்டூ கலைஞருக்குச் சொந்தமானதாக இருக்கலாம் என்று சந்தேகித்தார். பின்னர் மயிலின் தனித்துவமான இறகுகளைக் கொண்டு அது ‘ஹெக்ஸ்’ (Hex) என்ற பெயருடைய மயில் என்பதை உரிமையாளர் உறுதிப்படுத்தினார். சுமார் இரண்டு ஆண்டுகளாக அந்த மயிலை அவர் வளர்த்து வந்துள்ளார்.

கண்ணாடி மூலம் பிடிக்கத் திட்டம்

மயில்களைப் பிடிப்பது குறித்த தகவல்களை இணையத்தில் தேடியபோது, அவை கண்ணாடியில் தெரியும் பிம்பத்தின் மீது ஆர்வம் காட்டும் என்பதை சுசி தெரிந்துகொண்டார். இதையடுத்து, தனது வீட்டிலிருந்த முழு நீளக் கண்ணாடியை மயில் வரும் இடத்தில் வைத்துள்ளார். அதன் மூலம் மயிலை மீண்டும் பிடித்து உரிமையாளரிடம் ஒப்படைக்க அவர் முயற்சி செய்து வருகிறார்.

பறவைகளின் நடத்தையை விளக்கும் நிபுணர்

இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த கிரிஃபித் பல்கலைக்கழகத்தின் நகர்ப்புற சூழலியல் நிபுணர் டாரில் ஜோன்ஸ், பொதுவாகப் பறவைகள் கண்ணாடியில் தெரியும் தங்களது பிம்பத்தை மற்றொரு பறவையாக நினைத்து எதிர்வினையாற்றக்கூடும் என்று தெரிவித்துள்ளார். இந்த மயில் தனிமையின் காரணமாகவும் தனது பிம்பத்தின் மீது ஆர்வம் காட்டியிருக்கலாம் என அவர் விளக்கியுள்ளார். இச்சம்பவம் இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Follow Us