இரவில் வெளிச்சத்தில் தூங்கினால் இதயத்துக்கு ஆபத்தா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
Nighttime Light: இரவில் அதிக வெளிச்சத்தில் தூங்குவது இதயத்தின் அமைப்பு மற்றும் செயல்பாட்டில் சில மாற்றங்களுடன் தொடர்புடையதாக ஆய்வு கூறுகிறது. இது தூக்கச் சுழற்சி மற்றும் உடலின் உயிரியல் கடிகாரத்தை பாதிப்பதன் மூலம் இதயத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே இரவில் தேவையற்ற வெளிச்சத்தைத் தவிர்த்து இருட்டான சூழலில் தூங்குவது சிறந்தது.
இரவில் தூங்கும்போது அறையில் அதிக வெளிச்சம் இருப்பது இதய ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும் என ஆய்வு தெரிவிக்கிறது. 11,071 பேரின் தரவுகளை ஆய்வாளர்கள் பரிசோதித்தனர். இரவு நேரத்தில் அதிக வெளிச்சத்தை எதிர்கொண்டவர்களில் இதயத்தின் சில பகுதிகளில் கட்டமைப்பு மாற்றங்கள் காணப்பட்டன. குறிப்பாக இடது இதய அறையின் சுவர் தடிமன் அதிகரிப்பதுடன், இதய தசையின் செயல்பாட்டிலும் மாற்றம் இருப்பது கண்டறியப்பட்டது. இரவு நேர வெளிச்சம் உடலின் இயற்கையான உயிரியல் கடிகாரத்தையும் தூக்கத்தை ஒழுங்குபடுத்தும் மெலட்டோனின் சுரப்பையும் பாதிக்கலாம். இருப்பினும், வெளிச்சம் நேரடியாக இதய நோயை ஏற்படுத்துகிறது என்பதை இந்த ஆய்வு நிரூபிக்கவில்லை.
தூக்கத்தில் வெளிச்சம் வேண்டாமா?
இரவில் தூங்கும்போது அறையில் வெளிச்சம் இருப்பது தூக்கத்தை மட்டுமின்றி இதயத்தின் அமைப்பு மற்றும் செயல்பாட்டையும் பாதிக்கக்கூடும் என புதிய ஆய்வு தெரிவிக்கிறது. குறிப்பாக, அதிக அளவிலான இரவு நேர வெளிச்சத்துக்கும் இதய தசைகளில் ஏற்படும் சில மாற்றங்களுக்கும் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஆய்வில் என்ன கண்டுபிடிப்பு?
இந்த ஆய்வில் 11,071 பேரின் தரவுகள் ஆய்வு செய்யப்பட்டன. அவர்களின் இரவு நேர வெளிச்சத்தை அளவிடுவதற்காக மணிக்கட்டில் ஒளி உணரும் சென்சார் பொருத்தப்பட்டு 7 நாட்கள் கண்காணிக்கப்பட்டது. அதன்பின்னர் சுமார் 3 ஆண்டுகள் கழித்து இதயத்தின் அமைப்பு மற்றும் செயல்பாட்டை மதிப்பிடுவதற்காக சிறப்பு MRI பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
Also Read: காலை உணவில் புரதம் குறையாமல் இருக்கணுமா? 5 சிம்பிள் உணவுகளை ட்ரை பண்ணுங்க!
இதயத்தில் ஏற்பட்ட மாற்றங்கள்
அதிக வெளிச்சத்தை எதிர்கொண்டவர்களில் இதயத்தின் இடது அறையின் சுவர் தடிமனாகவும், இதய தசையின் சுருங்கி விரியும் திறன் குறைந்ததாகவும் ஆய்வில் தெரியவந்தது. மேலும், இதயத்தின் வலது அறை மற்றும் இடது ஏட்ரியம் உள்ளிட்ட பகுதிகளிலும் சில கட்டமைப்பு மாற்றங்கள் காணப்பட்டன.
தூக்கத்துடனான தொடர்பு
இரவில் வெளிச்சம் அதிகமாக இருப்பது உடலின் இயற்கையான உயிரியல் கடிகாரத்தை பாதிக்கலாம். குறிப்பாக, தூக்கத்தை ஒழுங்குபடுத்தும் மெலட்டோனின் ஹார்மோன் சுரப்பில் தாக்கம் ஏற்பட்டு தூக்க நேரம் குறைவதன் மூலமும் இதயத்தில் காணப்படும் மாற்றங்களுக்கு ஒரு பகுதி விளக்கம் இருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இரவில் இருட்டு அவசியம்
இந்த ஆய்வு இரவு நேர வெளிச்சமே நேரடியாக இதய நோயை ஏற்படுத்துகிறது என்பதை நிரூபிக்கவில்லை என்றாலும், அதிக வெளிச்சத்துக்கும் இதய மாற்றங்களுக்கும் இடையே குறிப்பிடத்தக்க தொடர்பு இருப்பதை காட்டுகிறது. எனவே தூங்கும்போது அறையை முடிந்தவரை இருட்டாக வைத்திருப்பது, தேவையற்ற விளக்குகளை அணைப்பது மற்றும் மின்னணு சாதனங்களின் ஒளியை குறைப்பது இதய ஆரோக்கியத்துக்கும் நல்ல தூக்கத்துக்கும் உதவக்கூடும்.