New Dwarf Planet: சூரிய குடும்பத்தில் இணையப்போகும் ஆறாவது கோள் எது தெரியுமா?
Sixth Dwarf Planet: புளூட்டோவுக்கு அப்பால் 2026 ED138 என்ற புதிய விண்பொருளை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது உறுதி செய்யப்பட்டால் சூரிய குடும்பத்தின் ஆறாவது குள்ளக் கோளாக மாற வாய்ப்புள்ளது. இதன் அளவு மற்றும் தன்மைகள் குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
புளூட்டோவுக்கு அப்பால் 2026 ED138 என்ற புதிய விண்பொருள் (New Dwarf Planet) கண்டறியப்பட்டுள்ளது. இது சூரிய குடும்பத்தில் ஆறாவது குள்ளக் கோளாக மாற வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இதன் விட்டம் சுமார் 600 முதல் 1,500 கிலோமீட்டர் வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. புளூட்டோவை விட அளவில் சிறியதாக இருந்தாலும், நெப்டியூனுக்கு அப்பால் உள்ள முக்கிய விண்பொருளாக இது பார்க்கப்படுகிறது. சூரியனிலிருந்து பூமியின் தூரத்தைவிட சுமார் 46 மடங்கு தொலைவில் இது அமைந்துள்ளது. இதன் அளவு, வடிவம் மற்றும் தன்மைகள் குறித்து விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். கூடுதல் ஆய்வுகளுக்குப் பிறகே இது குள்ளக் கோளாக அதிகாரப்பூர்வ அங்கீகாரம் பெறுமா என்பது தெரியவரும்.
Also Read: எரிமலை சாம்பலில் முட்டையிட்டு அடைகாக்கும் விசித்திர பறவை…
புதிய குள்ளக் கோள் கண்டுபிடிப்பு
சூரிய குடும்பத்தில் புளூட்டோவுக்கு அப்பால், இதுவரை அறியப்படாத புதிய குள்ளக் கோள் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். சிலியில் அமைந்துள்ள வெரா சி. ரூபின் வானியல் ஆய்வகத்தின் (Vera C. Rubin Observatory) தொலைநோக்கி மூலம் இந்தக் கண்டுபிடிப்பு நிகழ்ந்துள்ளது. 2026 ED138 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்பொருள், நெப்டியூன் கோளுக்கு அப்பால் சூரியனைச் சுற்றி வருகிறது. இதன் இருப்பும் தன்மையும் உறுதி செய்யப்பட்டால், சூரிய குடும்பத்தில் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட குள்ளக் கோள்களின் எண்ணிக்கை ஐந்திலிருந்து ஆறாக அதிகரிக்கும்.
புளூட்டோவை விட சிறியதா?
இந்தப் புதிய விண்பொருளின் விட்டம் சுமார் 600 முதல் 1,500 கிலோமீட்டர் வரை இருக்கலாம் என விஞ்ஞானிகள் மதிப்பிட்டுள்ளனர். புளூட்டோவின் விட்டம் சுமார் 2,377 கிலோமீட்டர் என்பதால், புதிய விண்பொருள் அதைவிடச் சிறியதாக இருக்கும். இருப்பினும், நெப்டியூனுக்கு அப்பால் இதுவரை கண்டறியப்பட்ட பெரிய மற்றும் பிரகாசமான விண்பொருட்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.
விண்வெளியில் மறைந்திருந்த மர்மம்
2026 ED138 சூரிய குடும்பத்தின் மையப் பாதையிலிருந்து சுமார் 25 டிகிரி சாய்ந்த சுற்றுப்பாதையில் பயணிக்கிறது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான தூரத்தைவிட சுமார் 46 மடங்கு தொலைவில் இது அமைந்துள்ளது. பால்வெளி மண்டலத்தில் உள்ள ஏராளமான நட்சத்திரங்களின் ஒளிக்கு இடையில் மறைந்திருந்ததால், இதைக் கண்டறிவது சவாலாக இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Also Read: எரிமலை சாம்பலில் முட்டையிட்டு அடைகாக்கும் விசித்திர பறவை…
உறுதிப்படுத்தப்பட வேண்டிய புதிய கோள்
குள்ளக் கோள்கள் தங்களுடைய ஈர்ப்பு விசையால் உருண்டையான வடிவத்தைப் பெறும் அளவுக்குப் பெரியதாக இருந்தாலும், தங்களது சுற்றுப்பாதையில் உள்ள மற்ற விண்பொருட்களை முழுமையாக அகற்றும் அளவுக்குப் பெரியவை அல்ல. தற்போது சர்வதேச வானியல் ஒன்றியம் புளூட்டோ, செரஸ், எரிஸ், ஹவ்மியா மற்றும் மேக்மேக் ஆகிய ஐந்து குள்ளக் கோள்களை அங்கீகரித்துள்ளது. 2026 ED138-ன் அளவு, அடர்த்தி மற்றும் வடிவம் குறித்த கூடுதல் ஆய்வுகளுக்குப் பிறகே இது குள்ளக் கோளாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படுமா என்பது தெரியவரும்.